இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 27 December, 2010

இரங்கல்

நண்பர் மதிமாறன் அவர்களுடைய தாயார் காலமான செய்தியை அவருடைய வலைத்தளத்தின் பின்னூட்டம் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னைக்குச் செல்லும் போது பெரும்பாலும், மதிமாறன் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் அவருடைய இல்லத்திற்கு இதுவரை சென்றதில்லை. இரங்கல் தெரிவிக்க அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரும் இதையே தெரிவித்தார். அவருடைய தாயார் இருந்த காலத்தில் அவர் வீட்டுக்குச் சென்று வர இயலாமல் போனது குறித்துப் பெரிதும் வருந்துகிறேன்.

புற்றுநோய் பாதிப்புக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவர் கடந்த திங்களன்று [27/12/2010] வலிகளிலிருந்து விடுபட்டு இயற்கை எய்தினார். ஒருவரின் இருப்பைவிட அவருடைய இழப்பு ஏற்படுத்துகிற வெறுமை தாங்கிக் கொள்ள முடியாதது. ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் சொன்னாலும் எதைக் கொண்டும் இந்த இழப்பை ஈடு செய்து விட முடியாது. இந்தத் துயரத்திலிருந்து விடுபட்டு முன்பு போல் தொடர்ந்து இயங்க வேண்டுமென அவரையும் அவரது தந்தையாரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, 29 November, 2010

குமுதம் எல்லாம் நம்மள... ஹி ஹி

நெட்டில் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே நிறைய சைட்டுகள் இருக்கிறதாமே? - ராஜிராதா, பெங்களூர்
ஒருவர் மீது ஒருவர் அல்ல, ஒருவர் மீது மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிறைய சைட்டுகள் இருக்கின்றன. அவர் தமிழக முதல்வர். சாலையில் நார் மீதாவது காகம் எச்சம் போட்டுவிட்டால் கூட “என்ன ஆட்சி இது. காகம் எச்சம் போடுகிறது” என்று எரிந்து விழுகிறார்கள். [அரசு பதில்கள், குமுதம் 24.11.2010]
அடிச்சான் பாருய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! வலையுலகம் குமுதத்தை விமர்சனம் செய்த காலமெல்லாம் போய் குமுதம் வலையுலகைக் கேலி செய்யிற நெலைமை வந்திருச்சு பாருங்க. அதோட சேத்து முதலமைச்சருக்குப் பொன்னாடையும் போத்திருச்சுங்களே, பண்ணாடைங்க.

கொஞ்ச நாள் முந்தி குமுதத்துல ஒரு காக்கா தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மேலயே எச்சம் போட்டுக்கிட்டிருந்துச்சு. அந்த எச்ச காக்கா இப்போ கல்கில எழுதுது. இதையெல்லாம் வசதியா மறந்துடுறானுங்க. வாய்ல வடையிருக்கிற காக்காயத் தான இவனுங்க காக்கா புடிப்பானுங்க. புடிக்கட்டும் புடிக்கட்டும்.

Thursday, 25 November, 2010

ரெட்டி போய் செட்டி, செட்டி போய் மறுபடியும் ரெட்டி

ஆந்திராவில் ஒரு ச்சீ... த்தூ... ஜாதி பாலிடிக்ஸ்

ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஒய்.எஸ்.ஆர். உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஒய். எஸ். ஆர்.  அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதி ரோசையாவுக்கு முதல்வர் பதவியைத் தந்தது காங்கிரஸ் தலைமை.

பதவியேற்ற நாள் முதல் இவர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. 2009ம் ஆண்டின் இறுதியில் தெலங்கானா தனி மாநிலம் அமைய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை இவர் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. வெகு சமீபத்தில் இவரது உடல்நிலை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றது. மருத்துவமணையிலிருந்து திரும்பிய ரோசையா சோனியா காந்தி மீதான ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் விமர்சனத்துக்குக் கண்டணம் தெரிவித்து நடந்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதலமைச்சர் முன்னிலையிலேயே சுதர்சனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

மறைந்த ஒய்.எஸ். ஆர். மகன் ஜகன் மோகன் ரெட்டி தன் தந்தையின் மறைவை ஒட்டி அதிர்ச்சி தாளாமல் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகத் தொடங்கிய “ஓதார்ப்பு யாத்திரை”யும் (ஆறுதல் யாத்திரை) ரோசையாவுக்குத் தலைவலியும் திருகுவலியுமாக வந்து சேர்ந்தது.

தொடக்கத்தில் சிக்கலின்றி தான் போய்க் கொண்டிருந்தது ஓதார்ப்பு யாத்திரை. ஆறுதல் சொல்கிறேன் என்று தெலங்கானா பகுதி மாவட்டங்களில் ஜகன் என்றைக்குக் கால் வைத்தாரோ அன்றைக்குத் தொடங்கியது சிக்கல். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமே நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர் ராஜசேகர ரெட்டி. ராஜசேகர ரெட்டியை முன்னிறுத்தி நடக்கும் இந்த யாத்திரையைத் தெலங்கானா பகுதியில் நடத்த விட மாட்டோம் என்று முட்டுக் கட்டை போட்டனர் தெலங்கானா ஆதரவுத் தரப்பினர்.

இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் யாத்திரையைக் கைவிடுமாறு ஜகனைக் கேட்டுக் கொண்டது. யாத்திரையைக் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த ஜகன் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களைச் சந்திக்கத் தொடங்கினார். தற்போது கடப்பா தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகன் “சாக்‌ஷி” நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனரும் ஆவார்.

ஒவ்வொரு ஊரிலும் ஜகனைச் சந்திக்கக் கூடுகிற கூட்டம் தொலைக் காட்சியிலும் செய்தித் தாளிலும் நாள்தோறும் இடம்பெறுகிற அம்சங்களாகிவிட்டது. இதற்கிடையே சாக்‌ஷி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோனியா காந்தி குறித்த நிகழ்ச்சி ஒன்றும் பிரச்சனைக்குத் தோற்றுவாயாக அமைந்தது. சோனியா காந்தி குறித்து ஆந்திர அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்பது போன்ற அந்த நிகழ்ச்சியில் சில எதிர் கட்சித் தலைவர்கள் சோனியா மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். முதல் முறை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே பெரிய சர்ச்சை வெடித்தது. நிகழ்ச்சியில் தவறாக எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்த ஜகன் அதே நிகழ்ச்சியை பிரைம் டைமில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பச் செய்தார்.

காங்கிரஸ் இயக்கம் இதனால் எரிச்சலடைந்த போதிலும் ஜகன் மீது இதுவரை நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையையும் ரோசையா சரிவரக் கையாளவில்லை என்று மாநில காங்கிரஸ் பிரமுகர்களே கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததை அடுத்து முதலமைச்சர் ரோசையா டெல்லி சென்று தன் தரப்பை மேலிடத்திற்குத் தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தின் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் மேலிடத்திற்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. டெல்லியிலிருந்து ஊர் திரும்பிய ரோசையா யாரும் எதிர்பாராத நேரத்தில் நேற்று மதியம் தனது ராஜினாமா அறிவிப்பைப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

நேற்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உடல்நிலை மற்றும் வயது காரணமாகப் பதவி விலகுவதாகக் கூறிய ரோசையா, மிக உருக்கமாகப் அவர்களிடமிருந்து விடை பெற்றார். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனுக்குப் பூச்செண்டு கொடுத்த ரோசையா தனது ராஜினாமா கடித்தையும் சமர்ப்பித்தார்.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் கசிந்தன. நேற்று மாலை கூடி விவாதித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழு முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தற்போதைய ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராக உள்ள கிரண் குமார் ரெட்டி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பகல் 12:14 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ள இருக்கிறார் கிரண் குமார்.

ஓதார்ப்பு யாத்திரையால் ஜகன் மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்தவே மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருப்பது கண்கூடு.

இதனிடையே ”இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இதில் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தெலங்கானா தனி மாநிலத்திற்கான முன்னேற்பாடுகள் தடையின்றி நடைபெற்றாக வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் தெலங்கான ராஷ்ட்ர சமிதிக் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ்.

சித்தூர் மாவட்டம் பிலெரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஆந்திர மாநில வரலாற்றிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் (1960ம் ஆண்டு பிறந்தவர்). 1989ம் ஆண்டு முதல் அதே தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சட்டப் படிப்பு முடித்த இவர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள விளையாட்டு வீரரும் ஆவார்.

மொத்தத்தில் ஜாதி அரசியலின் சமீபத்திய உதாரணமாக அரங்கேறி முடிந்திருக்கிறது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றம்.

Monday, 22 November, 2010

ஏமீ... ஏமேமீ... [ரசித்த ட்விட்டுகள்]

டிபிசிடி: நான் தங்க[பாலு திமுகவின் காங்கிரசுப் பிரிவுத் தலைவர் என்றல்லவா நினைத்திருந்தேன்..மாத்திட்டாங்களா..?


ராஜன் ஆல் இன் ஆல்: மனைவியின் தோழிகள் அண்ணா என்றழைக்கையில், உலக வாழ்வின்மீது சலிப்புத் தட்டுவதை தவிர்க்கவே முடியவில்லை! # ஸோ ஸேட்!

குசும்பு ஒன்லி: ஓபாமா இந்தியா வந்த விதம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி உங்கள் சன் டீவியில்.

லதானந்த்: குங்குமத்தில என்னுடைய தொடர் கட்டுரை வந்துகிட்டிருக்குது. படிச்சு அபிப்ராயம் சொன்னா தெக்க தெரியற தென்னந்தோப்பு உங்களுக்கே!

சங்’கவி’: உன் வீட்டு ரோஜா மொட்டு மலரவே இல்லையென குழம்பாதே. மலர்தான் உன்னை முத்தமிட எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

உமா ருத்ரன்: வாட்டர் கேட்? ஆமாம் மழைத்தண்ணீர் வீட்டு கேட் தாண்டி வந்து விட்டது. அதுக்கென்ன இப்ப?

கேபிள் சங்கர்: வாழ்க்கைங்கிறது... மெகா சீரியல் போல எதுக்கு டி.ஆர்.பி அதிகமா இருக்கோ அத்தோட ஓடுறதுதான் நல்லது.

வால்பையன்: டோண்டு நண்”பேன்” தான், இப்ப தான் அரிக்க ஆரம்பிக்குது! # என் உச்சி மண்டைல சுர்ருங்குது

செல்வேந்திரன்: எத்தனை பேரால் காதலிக்கப்பட்டிருக்கிறோமென்பது திருமண அழைப்பிதழை விநியோகிக்கையில்தான் தெரிய வருகிறது!


Monday, 15 November, 2010

மிருக புத்திரன் கவிதைகள் - பகுதி 1 [15/11/210]

________________ (டேஷ்) புத்திரன்

அக்னி புத்திரன்
பாரதி புத்திரன்
காந்தி புத்திரன்
தேவி புத்திரன்
கேரள புத்திரன்
ஆந்திர புத்திரன்
கர்நாடக புத்திரன்
வேளாள புத்திரன்
வன்னிய புத்திரன்
முக்குல புத்திரன்
வட தமிழக புத்திரன்
மதுரை மண்ணின் புத்திரன்
கொங்கு மண்டல புத்திரன்
இவற்றுள் ஒன்றிர்க்குப்
புத்திரனாய் இல்லாவிடில் எழுத்துலகில்
பிழைத்தலரிதென்ற காரணம் பற்றி
கோபால்சாமி புத்திரன் இன்று முதல்
மிருக புத்திரன் ஆகிறேன்,
சகலரும் அறிக.
என் சொல் கேளீர், நீங்களும்
கோடிட்ட இடம் நிரப்பிப்
பெயருக்கு முன் சேர்ப்பீர்!அண்ணாமலைன்னு எனக்கொரு நண்பேன். அவனுக்கு செல்போன்ல பேசுறதுன்னாலே அலர்ஜி. போன்ல கூப்பிடுற எல்லார் கிட்டயும் “எதா இருந்தாலும் லெட்டர் எழுதுங்க”ன்னு சொல்றதுக்கு மட்டும் ஒரு 1100 வச்சிருக்கான். சமீபத்துல கார் எடுக்கறதுக்கு எடைஞ்சலா இருந்த அண்ணாமலையோட பைக்க நகத்தச் சொல்றதுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் காலிங் பெல்லை அடிச்சிருக்கார். “ஏன்யா லெட்டர் எழுதிக் கேட்டுட்டு வரலை”ன்னு அந்தாள்கிட்டயும் சண்டை.

அடுத்த வீட்டுக்கே இந்த நெலைமைன்னா அடுத்த ஸ்டேட்ல இருக்கற என் நிலைமைய யோசிச்சுப் பாருங்க? அஞ்சு பதிவு எழுதியாச்சுன்னா ஆறாவது பதிவு எழுதுறதுக்கு முன்னாடி அந்த அஞ்சு பதிவையும் அதுக்கு வந்த கமெண்ட்சையும் கடிதமா எழுதி அவனுக்கு அனுப்பியாகனும்.

ரீஜண்ட்டா அந்தக் கணக்கு மிஸ்ஸாகி ஆறேழு பதிவு எழுதிட்டேன். வரலாற்றிலேயே மொதல் முறைய அம்பத்தி ரெண்டு செகெண்ட் போன்ல பேசினான். அதுவும் அவுட்-கோயிங். அம்பத்தி ரெண்டு செகெண்ட்ல நான் ஒரு ஹலோ கூட சொல்லலை. ஆனா அதுக்குள்ள லெட்டர் எழுதாததுக்கு கடுமையான வசவு, அடுத்த பதிவுல கவிதை எழுதனும், கவிதை என்ன மாதிரி எழுதனும், என்னைக்குள்ள எழுதனும், எழுதலைன்னா என்ன ஆகும்ங்கறதையெல்லாம் சொல்லிட்டு, நான் சரின்னு சொல்லக் கூட நேரம் குடுக்காம கட் பண்ணிட்டான்.

அவனோட அழைப்பு அம்பத்தி மூணாவது செகெண்டத் தொட்டிருந்தா கூட நீங்க என்னை உயிரோட பாத்திருக்க முடியாது. அவ்வளவு கடுமையா இருந்துச்சு. விளைவுகளுக்குப் பயந்து அவன் சொன்ன புதன் கிழமைக்கு ரெண்டு நாள் இருக்கையிலேயே பதிவு எழுதிட்டேன். அதுவும் அவன் சொன்ன மாதிரியே எழுதிட்டேன்.

மிருக புத்திரன் கவிதைகள இனிமே நீங்க மாசம் ஒரு தடவையாச்சும் படிக்கலாம். அதுக்கு நான் இல்லை, அண்ணாமலை கேரண்ட்டி.

Saturday, 13 November, 2010

உஷாராணி சாம்பவி இன்னும் சில மர்மங்கள்

ஆந்திர மாநிலத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி குழந்தை சாம்பவியைப் பற்றியதுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். இளம் சாமியாரிணியாக வலம் வந்த சாம்பவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள்.

குழந்தை சாம்பவியின் காப்பாளராக சொல்லப்பட்டு வந்தவர்தான் உஷாராணி. இவர் பால சந்யாசினி சாம்பவி கலந்து கொள்ளுகிற நிகழ்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் தட்சணையாக வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப் படுகிறது.

சாம்பவியின் குழந்தைப் பருவத்தை காப்பாளர் உஷாராணி தனது பணத்தாசைக்காக வீணாக்குகிறார் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் வாதத்தை ஏற்று ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் குழந்தை சாம்பவியைப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதையடுத்து சாம்பவியும் உஷாராணியும் தலைமறைவாயினர். தற்போது கார்த்திகை மாத பூசைகள் செய்வதற்காக மீண்டும் ஆந்திர தலைநகர் ஐதராபாத்திற்கு குழந்தை சாம்பவியுடன் வந்துள்ளார் உஷாராணி. சாம்பவி இமாசலப் பிரதேசம் தர்மஸ்தலாவில் உள்ள பௌத்த சமயப் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகவும் ஆதாரப்பூர்வமற்ற செய்தி ஒன்று உலாவுகிறது.

தலைமறைவுக்குப் பிறது மீண்டும் ஐதராபாத் வந்துள்ள சாம்பவியை அங்குள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்த போது “பூமியில் ஏற்படுகிற பிரளயங்களுக்கெல்லாம் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பகையும் இரக்கமின்மையுமே காரணம்” என்று கூறினார். சாம்பவியிடம் அவரது பள்ளிப்படிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது அங்கிருந்த அர்ச்சகர் மைக்கில் மந்திரங்களைச் சொல்லியபடி யாகம் நடத்தத் தொடங்கிவிட்டார். நிருபர்களின் கேள்வி சாம்பவியின் காதில் விழுந்துவிடாத படிக்கு அங்கே சம்பவங்கள் அரங்கேறின. மைக்குகள் மற்றும் கேமராக்களைப் பறித்து சாம்பவியின் ஆதராவாளர்கள் செய்தியாளர்களைக் குழந்தையை நெருங்கவிடாத படிக்குச் சூழ்ந்து கொண்டனர். யார் இந்த சாம்பவி? யார் இந்த உஷாராணி?

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பாப்பட்லாவைச் சேர்ந்தவர் உஷாராணி. பதினான்கு வயதில் உஷாராணியை திவாகர் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். பின்னர் உஷாராணி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். அவருக்குப் பதினெட்டு வயது இருக்கும் போது கணவர் திவாகர் இறந்துவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உஷாராணியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். தாத்தா மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்ட உஷாராணியின் மகன் லலிதேந்திரநாத்திற்குத் தற்போது வயது முப்பது.

திருமணத்திற்கு முன்பு எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த உஷாராணி தனது இருபத்தி மூண்றாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தார். தனது இருபத்தைந்தாவது வயதில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக யோகா மற்றும் ஆன்மீகம் தொடர்பிலான நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.

கடந்த 1998ம் ஆண்டு யோகா பயிற்றுநர் சௌமியாச்சார்யாவின் அறிமுகம் கிடைக்கப் பெற்ற உஷாராணி 1999ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக குழந்தை சாம்பவியின் காப்பாளராக வளைய வந்தார் உஷாராணி.

தாயார் உஷாராணியுடன் சாம்பவி
[படம்: சாக்‌ஷி தெலுங்கு நாளிதழ்]
சாம்பவியைச் சட்ட விரோதமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த புகாரை அடுத்து சாம்பவி தன்னுடைய மகள் என்றும் தனக்கும் சௌமியாச்சார்யாவிற்கும் பிறந்த குழந்தை தான் சாம்பவி என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக திருப்பதி நகராட்சியால் வழங்கப்பட்ட சாம்பவியின் பிறப்புச் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சாம்பவியை அபூர்வ சக்திகள் பொருந்திய குழந்தை என்று சொல்லி வருகிறார் உஷாராணி. ஆனால் சாம்பவி கூறுகிற ஆன்மிகக் கருத்துக்கள் ”பொத்துலூரி வீரப்ரம்மம் ஸ்வாமி” என்பவர் எழுதிய “காலக்ஞானம்” என்ற நூலில் உள்ளவையே என்று கூறுகின்றனர் விபரமறிந்தோர். எட்டு வயதுக் குழந்தைக்கு இது போன்ற கருத்துக்களை மனப்பாடம் செய்ய வைப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

2012ம் ஆண்டு திபேத் சீனாவின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை அடையும் என்று ஆருடம் சொல்லி வருகிற சாம்பவியைக் குறித்து தலாய்லாமாவும் இது வரை மௌனம் சாதித்தே வருகிறார். டி.ஆர்.பி பசியோடு அலையும் ஊடகங்களுக்கு சாம்பவி நன்றாகவே தீனி போடுகிறாள். பூமியில் ஏற்படுகிற பிரளயங்கள், மக்களால் அறியப்பட்ட பிரபலங்களின் மரணம், போன்றவை குறித்து ஆங்கிலம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கேமெரா வெளிச்சத்துக்குப் பயப்படாமல் பேசுகிறாள் சாம்பவி.

இதே போல் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட பரணீதரன் என்கிற ஸ்ரீஹரி பரணீதர ஸ்வாமிகள் பற்றிய செய்திகள் நாளடைவில் மறைந்து போய்த் தற்போது சேலம் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகக் கேள்வி. வலுவான நெட்வொர்க்கில் சிக்கியிருக்கும் சாம்பவி இதிலிருந்து வெளிவருவது கடினம் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் சாம்பவி சிலருக்குக் கற்பக மரமாக விளங்குகிறாள் என்பதை விட வேறு சரியான வார்த்தைகளால் இதைப் பற்றிச் சொல்லிவிட முடியது!

Monday, 8 November, 2010

அப்பாடா ஒரு பதிவு தேத்திட்டேன்...

சென்னையில் என்னுடன் பணிபுரிந்து தற்சமயம் ஓஸ்ட்ரேலியாவில் பணிபுரிகிற அண்ணன் ஒருவர் எனது பதிவுகளை மிகவும் ரசித்துப் படிக்கிறவர். குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.

கடைசியா எழுதுன ரத்த சரித்திரம் பதிவைப் பாத்துட்டு வயலன்ஸ் கம்மி பண்ண சொல்லி அறிவுரை சொல்லிருந்தார். ஏன் ரொம்ப நாளா எழுதலைன்னும் கேட்டார்? அடுத்த பதிவு இன்னும் அஞ்சு நாளைக்குள்ள வரனும்னு டெட்லைன் வேற குடுத்துட்டார். டெட்லைண் குடுத்தா அப்படியே எழுதிக் கிழிச்சுட்டு தானே நாம வேற வேலை பாப்போம். குடுத்து இன்னையோட பதிமூணு நாளாச்சு. மதிச்சு போனெல்லாம் பண்ணிருக்காரே அதுக்காச்சும் எழுதனுமேன்னு யோசிச்சப்பவே ரொம்ப மலைப்பா இருந்துச்சு.

எத எழுதலாம், என்னத்த எழுதலாம்னு போய் டிவி யப் போட்டா மன்மோகன் சிங் மரப மீறி ஒபாமாவ விமான நிலையத்துக்கே போய் வரவேற்றார்னு செய்தியில காமிக்கிறாங்க. காட்சிய திடீர்னு பாத்தப்போ பிரதமர் பட்டுப் பொடவை சைசுல ஒரு கோமணத்த இடுப்புல கட்டிக்கிட்டு இடுப்புள்ள உள்ளது போக மீதிய தரையில விரிச்சு வச்சு அதுல ஒபாமா ந்டந்து வற்றா மாதிரியே இருந்துச்சு.

ஏதுடா இறையாண்மைக்கு வந்த சோதனைன்னு தேடி எடுத்துக் கண்ணாடிய மாட்டுன அப்புறந்தான் தெரிஞ்சுது அது செவப்புக் கம்பளமாமாம். இதில்லாம திருமதி சிங் ஒபாமாவுக்கு முத்தம் வேற குடுத்தாங்க. ஒபாமா தம்பதியர் போட்ட மினி குத்து டான்சையும் காட்டுனாங்க.

மழை நேரத்துல ஈரக் கையால சுச்சு போர்ட தொடக் கூடாதுன்னு டிவில சொன்னாங்க. சரி சமூக அக்கறையோட இதை சென்னையில இருக்கற நண்பர்களுக்கெல்லாம் சொல்லுவோம்னு ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணுனப்போ நண்பர் மதிமாறன் ஞாபகம் வந்துச்சு. அவரோட பேசி ரொம்ப நாளாச்சேன்னு அடுத்து அவருக்கு அழுத்துனேன். கொஞ்ச நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பொதுவான விஷயங்களப் பேசும் போது சொன்னாரு “சென்னை நம்ம சென்னை” ங்கற பத்திரிகைல உங்களோட கட்டுரை அச்சாகிருந்துச்சு. ஒருத்தரச் சந்திக்கப் போனப்போ வரவேற்பரையில அந்த புத்தகம் இருந்துச்சு. அப்பத்தான் படிச்சேன்னு சொன்னாரு.

சரி தேடித்தான் பாப்போம்னு முயற்சி பண்ணுனா இந்த லிங்க் கிடைச்சுது. செப்டம்பர் மாத வெளியீட்டுல கட்டுரை சுருக்கப்பட்ட வடிவத்துல வந்திருந்துச்சு. அந்தக் கட்டுரையோட தொடுப்பு இது. கட்டுரையோட முழு வடிவம் இங்கே.ஒரு வழியா பிச்சுப் பீராஞ்சு ஒரு பதிவு தேத்திட்டேன். டெட்லைன மீட் பண்ணலைன்னாலும் டாஸ்க் கம்ப்ளீட்டாகிருச்சு. ஓஸ்ட்ரேலியா அண்ணே, கோவிக்காதிங்க. போய்ட்டு வற்றேன்.

Monday, 25 October, 2010

ரக்த சரித்ரா - பழி வாங்குதல் பரிசுத்தமான உணர்வு

பரித்தாள ரவி
இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் “ரக்த சரித்ரா” திரைப்படத்திற்கு ஆந்திர மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரித்தாள ரவி, ஒபுல் ரெட்டி, மற்றும் சூரி ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை. இவர்களில் பரித்தாள ரவி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த தாதா. பிற்காலத்தில் ஆந்திர அரசியலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஒபுல்ரெட்டி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு தாதா. ஓபுல்ரெட்டியின் தூரத்து உறவினர் மாதல்லசெருவு சூர்யநாராயணா எனப்படும் சூரி.

இவர்களில் பரித்தாள ரவியாக இந்தி நடிகர் விவேக் ஓபராயும், சூரியாக நடிகர் சூர்யாவும் நடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரித்தாள ரவி “ப்ரதாப் ரவி”யாகவும் ஒபுல்ரெட்டி “புக்காரெட்டி”யாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மாதல்லசெருவு
சூர்யநாராயண ரெட்டி (சூரி)
படத்தில் சிவாஜிராவ் என்ற கதாபாத்திரம் சூரியை வைத்து புக்காரெட்டியைக் கொலை செய்யத் திட்டமிடுவது போன்ற காட்சி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதில் சிவாஜிராவ் கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் என்றும் கூறப்படுகிறது.

மறைந்த என்.டி.ஆரின் மனைவி லக்‌ஷ்மி சிவபார்வதி ராம்கோபால் வர்மா மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “என்.டி.ஆர் தெலுங்கு மக்களின் பெருமைக்குரிய ஆளுமை. அவர் ரவுடியிசத்தை ஆதரிப்பது போன்று சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராம்கோபால் வர்மா என்ற சைக்கோ தொடர்ந்து இது போன்ற படங்களையே எடுத்து வருகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்துத் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில் “என்.டி.ஆர். தெலுங்கு மக்களின் ஆதர்ச நாயகன். அவரை அவதூறு செய்வதை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது. என்.டி.ஆரை அவதூறு செய்கிற அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ராம்கோபால் வர்மா தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளில் பரித்தாள ரவி, ஒபுல்ரெட்டி, சூரி, இந்த மூவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது என்று சொல்லி வந்தார். தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு மேற்சொன்ன மூவருக்கும் இடையிலான குடும்பப் பகைதான் கதையின் அடிநாதம் என்று கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய சிவாஜிராவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இது குறித்து ராம் கோபால் வர்மா தரப்பிலிருந்து “என்.டி.ஆர். ரசிகர்களைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. சத்ருகன் சின்ஹா வருகிற பகுதி முழுவதும் கற்பனை என்ற போதிலும் இதனால் பலர் மனம் புண்பட்டிருக்கிற காரணத்தால் அந்தக் காட்சிகள் நீக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்து.

Sunday, 17 October, 2010

ஏமண்ட்டிவி ஏமண்ட்டிவி...

Wednesday, 15 September, 2010

பதிவர்கள் சன் பிக்சர்சிடம் கற்க வேண்டிய பாடங்கள்

பாடம் 1: உங்களிடம் சரக்கு இருக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் பத்து பதிவுகளை எழுதி வலையேற்றக் கூடாது. சன் பிக்சர்ஸ் எப்போதும் ஒரு படம் வெளிவந்து சில நாட்கள் கழித்துத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும். அதே மாடலை நீங்களும் பின்பற்ற வேண்டும்.

பாடம் 2: நீங்கள் வழக்கமாக வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ பதிவு எழுதுபவர் என்றால் முறை வைத்து நீங்கள் எழுதுகிற நாளில் எழுதிவிடுவது நல்லது. முந்தைய பதிவுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதற்காக அடுத்த பதிவை வெளியிடுவதைத் தாமதப் படுத்தக் கூடாது. சன் பிக்சர்சின் புதிய படம் தயாராகிவிட்டால் முந்தைய படத்தைத் தூக்கிவிட்டுக் கூட புதிய படத்தை வெளியிடுவது இங்கே குறிப்பிடத் தக்கது.

பாடம் 3: செலவு பண்ணத் தயங்கக் கூடாது. சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய செலவு பண்ணுகிறார்கள். அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் செலவு பண்ணி யோசித்து எழுத வேண்டும். எழுதுறது மொக்கையாக இருந்தாலும் கர்ம சிரத்தையாக எழுதி அதற்காக நீங்கள் பத்து பதினைந்து மணிநேரம் உழைத்து எழுதிய எஃபெக்டைக் காட்ட வேண்டும்.

பாடம் 4: பப்ளிசிட்டி முக்கியம். சன் பிக்சர்சின் படங்களுக்கு அதன் சகோதர ஊடகங்களான தினகரன் குங்குமம் போன்றவற்றில் நிறைய பப்ளிசிட்டி கொடுப்பார்கள். அதே போல நீங்களும் பதிவு எழுதியதை, ட்விட்டர், ஃபேஸ்புக், ஓர்குட், கூகுள் பஸ், போன்ற அனைத்து சோசியல் நெட்வொர்க்கிங் சைட்களிலும் உள்ள நண்பர் வட்டத்துக்கு அறிவிக்க வேண்டும். பல பேருக்கு உங்கள் புதுப் பதிவுக்கான லிங்க்கை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பாடம் 5: சும்மா பப்ளிசிட்டி மட்டும் கொடுத்தால் பத்தாது. தொடர்ச்சியான பப்ளிசிட்டி முக்கியம். ஒரு மணிநேரத்தில் எத்தனை முறை எந்திரன் ட்ரைலரைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு வழக்கமாகப் பின்னூட்டுகிறவர்கள் உங்களது கடைசிப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டிருக்கவில்லையெனில் அவர்களுக்கு சிறப்பாக மின்னஞ்சல் மூலம் நினைவூட்டலாம்.

பாடம் 6: உங்களுக்கு ஆங்கிலமோ அல்லது வேறு மொழியோ நன்கு தெரியுமெனில், உங்கள் மொழிபெயர்ப்புத் திறமையைக் காட்டத் தயங்கக் கூடாது. “கண்டேன் காதலை” “தில்லாலங்கடி” போன்ற படங்கள் தெலுங்கில் நன்றாக ஓடியவை. ரீமேக் அல்லது ரீமிக்ஸ் செய்யத் தயங்கக் கூடாது. ரைட்ஸ் வாங்கி எழுதுறீங்களோ அல்லது ரைட்சப் பத்தி கவலையே படாம எழுதுறீங்களோ அது விஷயம் இல்லை. ஆனா, தேவையேற்பட்டால் பிறமொழிகளை நம்புவதும் தப்பில்லை. இன்னைக்கே மலையாளமோ தெலுங்கோ கன்னடமோ கற்க ஆரம்பியுங்கள். நிச்சயம் பலனளிக்கும்.

பின்கு: பல நாட்களாக (திண்டுக்கல் சாரதி காலத்திலிருந்து) ட்ராப்டில் இருந்த பதிவு. அங்கே இங்கே கொஞ்சம் சொட்டை தட்டி வலையேற்றியுள்ளேன். (டிஸ்கிளைமரை டிஸ்கின்னு சுருக்குறீங்க, அது மாதிரி நான் பின்குறிப்பை பின்கு ன்னு சுருக்கிருக்கேன். என்னைப் பாத்து நீங்க வேற மாதிரி யோசிச்சு டிஸ்கியையும் பின்குறிப்பையும் சேத்து டின்கு ன்னு சுருக்கி... அதை யாராவது கடைசி எழுத்துலேந்து முதல் எழுத்தா திருப்பி படிச்சு... ஏன் இந்த வேண்டாத சங்கடமெல்லம்...)

Saturday, 11 September, 2010

தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்

பின் குறிப்பு: இது மட்டும் நடந்துவிட்டால் தமிழக அரசியல் உலகத்துக்கே வழிகாட்டிய பெருமை, தமிழ்ப் பதிவர்களையே சாரும். படத்தின் மீது அழுத்தினால் பெரிதாக்கிப் பார்க்கலாம்.

Monday, 26 July, 2010

குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம்இது கற்பனை... கற்பனை... கற்பனையைத் தவிர வேறில்லை. எதிர்காலத்தில் இப்படி நடந்தால் அதற்குக் கம்பேனி பொறுப்பாகது.

Monday, 19 July, 2010

ச்சேட்... [21-07-2010]

ஜி-டாக் லாகின் செய்த உடன் ghostblogger என்ற ஐடியிலிருந்து ச்சேட்டில் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு நட்புக் கோரிக்கை. இணைத்தேன். ஓரிரு நிமிடங்களில்  கோஸ்ட் ப்ளாகர் என்ற பெயருடன் ஒரு விண்டோ திறந்தது. எனக்கும் அந்த கோஸ்ட் ப்ளாகருக்கும் நிகழ்ந்த உரையாடல் கீழே.

கோஸ்ட் பிளாகர்: இணைத்தமைக்கு நன்றி

வி.கோ: நன்றி. உங்க ப்ளாக் லிங்க் குடுங்களேன். படிச்சிப் பாத்துட்டு கமெண்ட் போடுறேன்.

கோஸ்ட்: எனக்குன்னு சொந்தமா ப்ளாக் எல்லாம் கிடையாதுங்க.

வி.கோ: அப்புறம் ஏங்க கோஸ்ட் ப்ளாகர்னு பேர் வச்சிருக்கீங்க?

கோஸ்ட்: சார், கோஸ்ட் ரைட்டர் கேள்விப்பட்டதில்லையா!!!

வி.கோ: ம்ம்ம், மத்தவங்களுக்காக இவுங்க கதை, கட்டுரையெல்லாம் எழுதிக் குடுப்பாங்க

கோஸ்ட்: அதேதான். நானும் மத்தவங்களுக்காக ப்ளாக் போஸ்ட் எழுதிக் குடுப்பேன். அத அவுங்க ப்ளாகுல அவுங்களே எழுதுனதா போட்டுக்குவாங்க.

வி.கோ: நல்லா இருக்குதே இந்த அப்ரோச்

கோஸ்ட்: அப்படி எழுதித் தற்றதுக்கு கொஞ்சமா ஒரு ப்ராசசிங் ஃபீஸ் வாங்கிக்குவேன்.

வி.கோ: கொஞ்சமான்னா.... எவ்வளவு வாங்கிக்குவீங்க?

கோஸ்ட்: அது எழுதித் தற்றதப் பொறுத்து சார். 1000 வார்த்தைக்குள்ளன்னா 250 ரூ. 2500 வார்த்தைக்குள்ளன்னா 750 ரூ. உண்மைத் தமிழன் ஸ்கீம்ன்னு ஒரு ஸ்கீம் இருக்கு சார். நீங்க சொல்ற டாபிக்ல 5000 வார்த்தைக்கு மேல வற்ற மாதிரி பதிவு எழுதித் தருவேன். அதுக்கு 1500 ரூ ஆகும் சார்.

வி.கோ: ஸ்கீமெல்லாம் நல்லா இருக்கு. ஆனா இவ்வளவு ரூவா குடுத்து போஸ்ட் எழுதி வாங்கற அளவுக்கு நான் பெரிய தில்லாலங்கடி இல்லையே. நானே பொழுது போகாம பல நேரம் சும்மாத்தான் உக்காந்திருக்கேன்.

கோஸ்ட்: சார், நீங்க மிஞ்சி மிஞ்சி போனா என்ன எழுதுவீங்க. பஸ்ல போனப்போ பக்கத்துல நின்னவன் உங்க காலை மிதிச்சது. பெட்ரோல் பங்குல ஜீரோ காட்டாம பெட்ரோல் போட்டதுன்னு ச்சும்மா அரைச்ச மாவையே அரைப்பீங்க. எங்க கிட்ட புதுப் புது வெரைட்டி நெறைய இருக்கு சார்.

வி.கோ: என்னய்யா சொல்றே, கொஞ்சம் வெளக்கமா சொல்லு

கோஸ்ட்: சார், எங்க கிட்ட ஒரு ஐட்டம் இருக்கு சார். அந்த வெரைட்டில நீங்க ப்ளாக் போஸ்ட் போட்டீங்கன்னா உங்களுக்கு எதிரா ஒரு டஜன் கண்டணப் பதிவு கியாரண்ட்டி.

வி.கோ: சரி அப்படி என்னதான் எழுதுவ...

கோஸ்ட்: யாராச்சும் ஒரு பிரபலப் பதிவரப் பத்தி கண்ணா பின்னான்னு அவதூறு எழுத வேண்டியதுதான். அப்புறம் அவுங்க உங்களுக்கு எதிர்ப் பதிவு போட, நீங்க அவுங்களுக்கு பதில் பதிவு போட, உங்க ப்ளாகே கொதி கொதின்னு கொதிக்கும் சார்... ரெண்டே நாளில் நீங்கள் பிரபலப் பதிவர் ஆகிடலாம்....

வி.கோ: யோவ், அவுங்க எதிர்ப்பதிவு போடாம சைபர் கிரைமுக்குப் போயிட்டா என்ன பண்றதாம்...

கோஸ்ட்: அதுக்குத்தான், நாம பதிவு போடும் போதே கீழ புணைவுன்னு லேபிள் குடுத்துடுவோம்ல. அதையும் மீறி அவுங்க சைபர் கிரைமுக்குப் போனா, அப்பயும் நீங்க ஒரு பதிவு போடுங்க சார். மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன். உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக்குறேன், உங்க வீட்டுப் பெரியவுங்க காலையெல்லாம் தொட்டு மன்னிப்பு கேட்டுக்குறேன், உங்க வீட்டுக் குழந்தைங்க காலையெல்லாம் தொட்டு மன்னிப்புக் கேட்டுக்குறேன்னு ரொம்ப உருக்கமா ஒரு பதிவு போடுங்க. உங்களுக்கு எழுத வரலைன்னா அதையும் நானே எழுதித் தற்றேன்...

வி.கோ: ரொம்ப பேட் டச்சா இருக்கு. ஆனாலும் போட்டுத்தான் பாப்போமேன்னு நெனைச்சா, விழுற அடி பலமா விழுந்திடுமோன்னு வேற பயமா இருக்கே...

கோஸ்ட்: நீங்க பயப்படாம ஒரு பதிவு இது மாதிரி போட்டுப் பாருங்க. மொதல் பதிவுக்கு “0” பர்செண்ட் ப்ராசசிங் ஃபீஸ் தான். அதாவது நீங்க பணமே குடுக்க வேண்டாம். ரிசல்ட் பாத்து உங்களுக்குப் பிடிச்சிருந்தா, அடுத்தடுத்த பதிவுகளுக்கு பணம் குடுங்க போதும்.

வி.கோ: என்னமோ சொல்றே... ஆனாலும் எனக்கு பயமாவே இருக்கு...

கோஸ்ட்: டோண்ட் ஒர்ரி சார்

வி.கோ: இப்ப எதுக்கு அவரக் கூப்புடுறே

கோஸ்ட்: அய்யோ, நான் அவரப் பத்தி சொல்லல சார். கவலைப்படாதீங்கன்னு சொன்னேன்

வி.கோ: இப்பவே இவ்வளவு கலவரப்படுத்துறியேடா. சரி, நீ கோஸ்ட் பின்னூட்டம் எழுதுவியா?

கோஸ்ட்: இது கூட நல்ல ஐடியாவா இருக்கு. ஆனா ஒரு பின்னூட்டத்துக்கு 100 ரூ செலவாகுமே. அதுக்கு 250 ரூ குடுத்து பதிவே எழுதி வாக்கிடலாம்ல...

வி.கோ: வேணாம். எனக்கு 100 ரூ பெரிசில்ல. குடுத்துடுறேன். ஆனா எங்கயாவது என்னைத் திட்டிப் பதிவோ பின்னூட்டமோ போட்டுருந்தா அவங்களுக்கு பதில் பின்னூட்டம் ரெடி பண்ணிட்டு சொல்லிவிடு...

கோஸ்ட்: ஓக்கே சார்

சரியாக ஒரு வாரம் கழித்து

கோஸ்ட்: சார், [இணைப்பு] இந்த லிங்க்ல உங்களக் கண்ணாபின்னான்னு திட்டி பின்னூட்டம் வந்திருக்கு சார்

வி.கோ: அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றே

கோஸ்ட்: சும்மா 300 வார்த்தைல அதிரடியா ஒரு பின்னூட்டம் தயார் பண்ணிருக்கேன் சார்

வி.கோ: அத வச்சு என்னை என்ன பண்ண சொல்றே

கோஸ்ட்: அதே போஸ்ட்ல போய் நீங்க இந்த பின்னூட்டத்த பேஸ்ட் பண்ணுங்க சார்...

வி.கோ: சரி, என்னை அசிங்கமா திட்டிப் பின்னூட்டம் போட்ட அந்த பதிவர் யாரு...

கோஸ்ட்: அவரு பேரு __________ சார்

வி.கோ: அந்த ஆளை உனக்குத் தெரியுமா?

கோஸ்ட்: எனக்கு எப்படி சார் தெரியும்...

வி.கோ: அது தெரியாமத்தான் அவன் போட்டதா நீயே பின்னூட்டம் போட்டியாக்கும்...

கோஸ்ட்: சாஆஆஆஅர்....

வி.கோ: நாயே, அந்த பின்னூட்டம் நீ போட்டதுதான்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சு போச்சுடா....

கோஸ்ட்: சார் அது வந்து

வி.கோ: என்னடா வந்து நொந்து....

கோஸ்ட்: சார், எப்படி கண்டுபுடிச்சீங்கன்னாவது சொல்லுங்க சார்....

வி.கோ: ஏண்டா நாயே, பணம் வாங்கிக்கிட்டு போஸ்ட், பின்னூட்டம் எழுதித் தற்றேன்னு ஒருத்தன் அப்ரோச் பண்ணும்போதே கொஞ்சமாச்சும் அலர்ட் ஆக வேண்டாமா? அதுவுமில்லாம உன்னோட ச்சேட் பண்ணின ரெண்டாவது நாளே அப்படி ஒரு பின்னூட்டம் வந்தத நான் பாத்துட்டேன். நானா உனக்கு மெயில் அனுப்பி பதில் பின்னூட்டம் தயார் பன்னச் சொல்லுவேன்னு பாத்திருக்கே. ஒரு வாரமா வரலைன்னதும் இப்போ நீயா பாத்துட்டு சொல்ற மாதிரி ச்சேட்டுக்கு வந்து சொல்றே...

தொங்கனா கொடக்கா... நீ **** ***ட கொடக்கா... ~@~@#@! @# !@#_(#)_ %~@#_ (_ %  #$*( #)$*) *%( *#&@( @*!# &(@# &*)@#

(முந்தைய வரி பிரசூரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளால் நிரம்பியிருந்ததால் தனிக்கை செய்யப் படுகிறது - பிளாகர் குழு)

Saturday, 17 July, 2010

தெலங்கானா - மாவட்ட வாரியான வரைபடக் கோப்புகள்
பெரிது மற்றும் சிறிது படுத்தக் கூடிய கோடுகளால் ஆன (வெக்டர்) தெலங்கானா வரைபடங்களைத் தயாரித்துள்ளேன். தெலங்கானா ஆர்வலர்கள், பதிவர்கள், பதிப்பாளர்கள், மாணவர்கள், சிறுபத்திரிகை நடத்துவோர் மற்றும் அச்சகத்தினர் ஆகியோரின் பயன்பாட்டுக்காக இவ்வரைபடங்களைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். படங்களைப் பயன்படுத்த மேற்கூறியவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது. படங்களைப் பயன்படுத்திக் கொள்வோர் என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. எங்களுடைய இன்ன படைப்பில் உங்கள் படங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தகவல் தெரிவித்தால் அதனைத் வாங்கிப் படிக்க, சேகரித்து வைக்க ஏதுவாகும். வணிக ரீதியில் வெளிவரும் நாளேடுகள், வார, வாரமிருமுறை, மாத, மாதமிருமுறை, ஆண்டு, அரையாண்டு, காலாண்டு ஏடுகள் எதுவும் இவற்றைப் பயன்படுத்த எக்காலத்திலும் அனுமதி கிடையாது.

தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களின் வரைபடங்களை ai (adobe illustrator), eps (encapsulated post script, மற்றும் pdf வடிவங்களில் தனித் தனி zip கோப்புகளாக இங்கே இணைத்துள்ளேன். ஆங்கில வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள Arial Black மற்றும் Arial எழுத்துருக்கள் அனைத்துக் கணிணிகளிலும் நிறுவப்பட்டிருக்கும் என்பதால் அந்த எழுத்துருக்கள் இணைக்கப் படவில்லை. தமிழ் வரைபடத்தில் பயன்படுத்தியுள்ள TAM3.ttf எழுத்துருவை மட்டும் இணைத்துள்ளேன். படங்கள் வேண்டுவோர் தாராளமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

[தெலங்கானா வரைபடங்கள் - தமிழில் 1.59 MB]      [தெலங்கானா வரைபடங்கள் - ஆங்கிலத்தில் 1.64 MB]

Saturday, 10 July, 2010

பால் இங்க்கா மணி - கெலுபு எவரிகி

வழக்கமாக இரவு உணவின் போது துணைக்கு எவராவது இருந்தால் தொலைக்காட்சியைக் கவனிக்க மாட்டேன். இன்று தனியாக உணவு உண்ண வேண்டிய நிலையிலிருந்ததால் தொலைக்காட்சியைக் கவனித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

தெலுங்கு செய்தி அலைவரிசை ஒன்றில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் பற்றிய ஆரூடங்கள் குறித்த செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த பால் என்கிற கடல்வாழ் உயிரியையும், சிங்கப்பூரைச் சேர்ந்த மணி என்கிற ஜோதிடக் கிளியைக் குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஜெர்மனியில் உள்ள கடல் உயிர் அருங்காட்சியகம் ஒன்றின் பராமரிப்பில் இருக்கிறது பால் என்கிற ஆக்டோபஸ். இதுவரை ஆறு அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகளையும் துல்லியமாகக் கூறியுள்ளது. கடைசியாக ஜெர்மனி தோற்றுப் போகும் என்பதைக் கணித்துச் சொன்ன பிறகு பாலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தீவிர ஜெர்மனி கால்பந்தாட்ட ரசிகர்கள் “பாலை வறுத்து சாப்பிட வேண்டும்” “அதை சூப் வைத்துக் குடிக்க வேண்டும்” என்று கொலை வெறியோடு கருத்துக் கூறி வருகிறார்கள். இதையடுத்து பிராணிகள் நல அமைப்புகள் பாலை ஆழ்கடல் பகுதிக்குக் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர் முனியப்பா கிளி ஜோதிடம் பார்ப்பவர். அவர் வளர்க்கிற மணி என்கிற கிளியும் பால் சொன்னது போலவே இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகளைக் குறித்து துல்லியமாகச் சொல்லி வந்திருக்கிறது. மணி ஒருமுறை சீட்டெடுக்க இதுவரை 15 சிங்கப்பூர் டாலர்களைக் கட்டணமாக வாங்கி வந்த முனியப்பா இப்போது வாங்குவது 300 சிங்கப்பூர் டாலர்கள்.

ஜெயிக்கிற அணிகள் மீது பந்தயம் கட்ட விரும்புகிறவர்கள் மணியை மொய்க்கின்றனர். இதுவரை பால் கூறிய அதே முடிவுகளை மணியும் ஒன்று போலவே கூறிவந்தது. இப்போது இருவரும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிற எதிரெதிர் அணிகளைக் கை காட்டுகிறார்கள். பால் ஸ்பெயின் தான் என்று கூறுகிறது, மணியோ நெதர்லாந்து அணிதான் என்று கூறுகிறது.

ஜோதிடத்தை நம்புகிறவர்கள் பலரும் இந்த ஆருடத்தை வரவேற்கலாம், நம்பலாம். ஆனால் இப்போதும் பகுத்தறிவுதான் வென்றிருக்கிறது. இது போன்ற ஆருடங்கள் உண்மையாய் இருந்திருந்தால் இம்முறையும் பால் கூறிய முடிவையே மணியும் கூறியிருக்க வேண்டும் அல்லது மணியின் முடிவையே பாலும் கூறியிருக்க வேண்டும். இவை இரண்டும் இப்போது முரண்படுவதிலேயே தெரிகிறது இதுவரை இவை கூறி வந்த முடிவுகள் தற்செயலானவையே என்று. கணிதத்தில் வரும் ப்ராபபிலிட்டி தான் இதன் அடிப்படை.

ஆடுகிற இரண்டு அணிகளில் எது வெற்றி பெரும் என்று கேட்டால் இரண்டில் ஒன்றைத்தான் சொல்ல முடியும். மூண்றாவதாக இன்னொன்றைச் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லப்பட்ட அணி வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதே ஆக்டோபசிடமோ கிளியிடமோ இறுதிப் போட்டியில் எந்த இரு அணிகள் மோதும் என்று அரையிறுதிகளின் ஆரம்பத்துக்கு முன்பு ஆரூடம் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் செய்தி!

பாலைப் பொறிக்கப் போறாங்களா மணிய குருமா வைக்கப் போறாங்களா என்று திங்கட்கிழமை விடிந்தால் தெரிந்துவிடும். அது வரை பொறு மனமே!!!

Monday, 5 July, 2010

”குடி” மரியாதை

வார இறுதி நாட்களில் சரக்கடிப்பதும், சரக்கடித்த பிறகு பொழுது போகாமல் இணையத்தில் உலாவுவதும் சகஜம் தான் என்றாலும், அவ்வாறான நேரத்தில் செய்யக் கூடாத பத்து விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. சுயநினைவில் இல்லாத போது செய்தவை சுயநினைவுக்கு வந்த பிறகு உங்களைத் துன்புறுத்தக் கூடாதல்லவா?

1. நீங்கள் சரக்கடித்த பிறகு கட்டுப்பாட்டுடன் இருப்பதில் வீராதி வீரராக அல்லது சூராதி சூரராக இருந்தாலும் பணியிடத்திற்குத் தொடர்புடைய மின்னஞ்சல்களையோ இணைய உரையாடல்களையோ தவிர்ப்பது நல்லது.

2. வார இறுதிப் போதை வேளையில் இணைய தொடர்பிலிருக்கக் கூடிய நண்பர்களிடம் உரையாடாமல் இருப்பதும் நலம். அப்படியே உரையாட நேர்ந்தாலும் எந்த விதமான வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் உங்களைச் சந்திக்கிறேன் என்று நீங்கள் உறுதியளித்தது உங்களுக்கே நினைவிலில்லாமல் போகலாம்.

3. சரக்கு போதையில் இருக்கும் போது உங்கள் மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் இதர பயணர் கணக்குகளின் கடவுச் சொற்களை மாற்றாதீர்கள். முக்கியமாகப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடாதீர்கள். கவனக் குறைவாக உங்கள் பயணர் பெயரையும் கடவுச் சொல்லையும் அதற்குள்ள பெட்டிகளில் அல்லாமல் பின்னூடம் எழுதும் பெட்டியில் போட்டுவிடுவீர்களேயானால், நீங்கள் அவற்றை நிரந்தரமாக இழந்துவிடும் அவலமும் நேரலாம்.

4. அழகான பொருட்களை இணையத்தில் பார்த்துவிட்டு அவற்றை வாங்குகிறேன் பேர்வழி என்று உங்கள் கடன் அட்டையையோ ஆன்லைன் வங்கிக் கணக்கையோ பயன்படுத்தி அவற்றை வாங்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அது உங்களுக்குத் தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் நிலையில் நீங்கள் இல்லை.

5. உங்கள் புஜபல பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று உரையாடல் பெட்டியின் ஸ்டேட்டசில் என்ன சரக்கு, எத்தனை லார்ஜ் போன்றவற்றை எழுதாதீர்கள். பிரிண்ட் ஸ்கிரீனுடன் பதிவுலக நண்பர்களால் கலாய்க்கப்படுவீர் ஜாக்கிரதை.

6. நீங்கள் பயன்படுத்துவது உங்கள் வீட்டிலுள்ள அனைவருக்குமான பகிர் கணிணி என்றால் போதை நேரங்களில் அதில் ஆபாசக் காட்சிகளையோ படங்களையோ தரவி்றக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட கணிணியாகவே இருந்தாலும் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துவிடுங்கள்.

7. ஏதாவது காரணங்களால் மனஸ்தாபத்தில் இருக்கிற நண்பர்களை இது போன்ற நேரத்தில் உரையாடல் பெட்டியில் காண நேர்ந்தால் அவர்களை உரையாடலுக்கு அழைக்காதீர்கள். நீங்கள் சொல்லுகிற ஹாய், ஹலோ, வணக்கம் நண்பா, போன்றவை கூடத் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படும் சாத்தியம் உள்ளது.

8. எதிர்பாலினரை உரையாடல் பெட்டியில் காண நேர்ந்தாலோ அல்லது அவர்கள் உங்களை உரையாட அழைத்தாலோ கவனமாகத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது நீங்கள் உண்மை விளம்பியாக உருவெடுத்திருக்கும் நேரம். உண்மை எல்லா நேரமும் இனிக்காது!!!

9. எக்காரணத்தை முன்னிட்டும் உரையாடல் பெட்டி வழியாகக் கடன் கேட்காதீர்கள். நீங்கள் கடன் கொடுத்தவர்களிடமும் திருப்பியும் கேட்காதீர்கள். அதற்கான முறையான வழி நேரில் கேட்பது அல்லது தொலைபேசியில் கேட்பது. அதையும் நீங்கள் போதையிலிருக்கிற நேரத்தில் கேட்க வேண்டாம்.

10.  மறந்துபோன மறைத்து வைத்திருக்கும் காழ்ப்புணர்ச்சி சுதந்திரமாக வெளி வரும் நேரம் எனவே உங்கள் மீது காண்டில் இருக்கும் அல்லது நீங்கள் காண்டில் இருக்கும் நபர்களுடன் ச்சேட்ட வேண்டாம்!!!


நன்றி: டாப்-10ல் 7 என்னுடையவை, மீதம் 3ஐத் தந்துதவிய கடை-மூண்று-வள்ளல் லதானந்தருக்கு நன்றி.இதில் அவருடைய மூண்று எதுவென்று சரியாகக் கண்டுபிடிக்க முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Thursday, 1 July, 2010

ஒரு வேண்டுகோள்டியர் ”பீ”ரு,

உங்கள் “வாரெ வா” போஸ்ட்டைப் படித்தேன். அதில் ரஞ்சிதாவுக்கு நீங்கள் சொல்லியிருந்த தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனெனில் நானும் நித்தியால் ஏமாந்தவன். என்ன செலவானாலும் பரவாயில்லை, இதை செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தேங்க்ஸ் “பீ”ரு. யூ ஆர் த அல்மைட்டி ஆஃப் மை யூனிவர்ஸ்.

எச்சகலை,
எடின்பர்க்


எடின்பர்க் எச்சக்கலை,

பொதுவில் இந்த மாதிரி கடிதங்களை நான் எனது மின்னஞ்சல் பெட்டியிலிருந்து அழித்துவிடுவேன். ஆறு நாளாக எதுவும் எழுதாததாலும், இன்றைக்கும் எழுத எந்த விஷயமும் கிடைக்காததாலும் உங்கள் கடிதத்தைப் பிரசூரிக்க வேண்டியதாகிவிட்டது.

தமிழ்ச் சூழலில் இருக்கக் கூடிய ஆகப் பெரிய அவலமாக உங்கள் கடிதத்தைத் தான் சொல்ல வேண்டும். ஒரு எழுத்தாளன் சிந்தித்து நல்ல விஷயம் ஒன்றைச் சொன்னால், அவனுக்கு முன்னால் அதை அனுபவித்துப் பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறது எந்த வகையில் நியாயம். “என்ன செலவானாலும் செய்து பாத்துவிடனும்” என்று உங்கள் பணத்திமிரைக் காட்டுகிறீர்களா?

நியாயமாக ரஞ்சிதாவுக்கு அந்த தண்டணையை நான் தான் தொடங்கி வைக்க வேண்டும். இதை உத்தமத் தமிழ் எழுத்தாளன் கூட ஒப்புக் கொள்வான். அந்த அளவுக்கு நான் நித்தியால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளன் இத்தகைய சந்தோஷத்தை அனுபவிக்க எவ்வளவு செலவாகும் என்பது நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. ஈசிஆரில் காட்டேஜுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் போகும். உடன் ப்ளாக் லேபிள் இருபது லார்ஜாவது உள்ளே போக வேண்டும். ப்ளாக் லேபிளுக்கு ரஞ்சிதாவை மட்டுமா தொட்டுக் கொள்ள முடியும்? இதல்லாமல் ரஞ்சிதாவுக்கு அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து செல்ல ஃப்ளைட் டிக்கெட் வேறு லட்சக்கணக்கில் போகும். ஒரு எழுத்தாளனை மகிழ்விக்க அவனது வாசகர்களில் ஐந்நூறு பேர் ஆளுக்கு ஐந்நூறு டாலர்களைச் செலவழித்தால் என்ன குறைந்துவிடுமாம்?

எப்படியும் என் வாசகர்கள் நான் எதிர்பார்க்கிற தொகையைத் திரட்ட உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஞ்சிதாவுக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட்டு நான் என்ன ஓடியா போகப் போகிறேன்? அடுத்த நாள் தண்டனையை எப்படிக் கொடுத்தேன் என்பதையும் என் ப்ளாகில் எழுதத்தான் போகி்றேன். என்ன, பைபாசுக்குப் பிறகு ”எதை செய்வதானாலும் வைல்டா செய்யாதிங்க மைல்டா செய்யுங்க” என்று டாக்டர் வேறு அறிவுறுத்தியிருக்கிறார். அது ஒன்று தான் நெருடுகிறது.

”பீ”ரு

1/7/2010 3:10 amஎனது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரங்கள்:

"பீ." அறிவழகு சுந்தரம்
ஐசிஐசிஐ வங்கி, மந்தைவெளி கிளை

கணக்கு எண்: 4710004812217
ஐ.எஃப்.எஸ்.சி. எண்: ICICI400317

Monday, 28 June, 2010

சென்னைத் தமிழ் - சில சிந்தனைகள்

சமீபத்தில் குமுதம் நாளேடு முதலமைச்சரைப் பேட்டி கண்டு வெளியிட்டது. அதிலே முதலமைச்சரிடம் ஒரு கேள்வி.
கேள்வி: அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா?
பதில்: தமிழ்த் தாயின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை!
சென்னைத் தமிழர்களின் பேச்சு வழக்கு முதல்வருக்கு விரும்பத் தகாததாக இருக்கலாம். ஆனாலும் அது தமிழ்த் தாயின் (எனக்குத் தமிழ்த் தாய் என்ற கருத்துருவாக்கமே ஏற்புடையதல்ல) முகத்தில் குத்தப்பட்ட கரும்புள்ளி செம்புள்ளி என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. [இதைக் குறித்த எனது கருத்துச் சுருக்கத்தை இறுதிப் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.]

காலம் காலமாக வேறு எந்த வட்டார வழக்கையும் விட அதிகமாகப் பழிக்கப்படுவது சென்னைத் தமிழாகத் தான் இருந்துவருகிறது. கொங்கு வட்டாரத் தமிழோ அல்லது திருநெல்வேலி, மதுரை, தஞ்சை வட்டாரத் தமிழோ இந்த அளவுக்கு விமர்சனத்துக்கு ஆளானதில்லை.
சென்னையில், திருவல்லிக்கேணியில் பிறந்தவன் என்ற வகையில் எனக்கு முதல் முதலில் அறிமுகமாகிய என் தாய்மொழியின் வடிவம் சென்னைத் தமிழ். அவரவருக்கு அவரவர் தாய் மொழி சிறப்பானது என்பது எத்தனை உண்மையோ அதே அளவுக்கு அவரவர் வட்டார வழக்கும் சிறப்பானதே. மற்ற எந்த வட்டார வழக்கும் இந்த அளவுக்கு இழித்துரைக்கப் படாத நிலையில் சென்னைத் தமிழுக்கு மட்டும் எதற்கு இந்த நிலை?

வைரமுத்து ஒருமுறை தன் மேடைப் பேச்சில் அவருடைய மதுரை வட்டார வழக்குச் சொல் ஒன்றிற்கான விளக்கத்தைச் சொன்னார். “தம்ளர பொத்துனாப்புல வை” என்ற வாக்கியத்தில் “பொத்துனாப்புல” என்ற சொல்லுக்கு விளக்கம் சொன்னார். வெண்கலத் தம்ளரை இயல்பாக மேஜையிலோ தரையிலோ வைக்கையில் லேசான சத்தமாவது எழும்பும். ஆனால் சத்தம் எதுவும் எழுப்பாமல் வை என்பதற்கு “பொத்துனாப்புல வை” என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதற்கான வேர்ச்சொல்லையும் அப்போதே சொன்னார். “போத்துனாப்புல வை” என்று சொல்வது தான் பொத்துனாப்புல வை என்று மருவியிருக்கிறது. எத்தனை சிறப்பான விளக்கம். போர்வையைப் போத்தினால் சத்தமா வரும்?

ஒவ்வொரு வட்டார வழக்கும் கொண்டாடப் பட ஆயிரம் காரணம் இருக்குமானால் சென்னைத் தமிழுக்கு ஒரு நூறு காரணங்களாவது தேறாதா? வட்டார வழக்கு என்பது அந்தந்த வட்டாரத்தில் வாழுகிற உழைக்கும் மக்கள் பேசிய மொழி. இதில் சென்னையைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்கள் எந்த வகையில் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள்?
“வலிச்சாந்துரு” என்ற சென்னை வழக்குச் சொல் ஒரு தூய தமிழ்ச் சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இழுத்துவா என்ற சொல் சென்னை வழக்கில் “வலிச்சா” என்று மாறுகிறது. துடுப்பு வலித்தல், கயிறு வலித்தல், பீடி வலித்தல் போன்றவை எல்லாம் இழுத்தல் என்ற பொருளுடனேயே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் சீறாப்புராணத்தில் “மானுக்குப் பிணை நின்ற” படலத்தில் இந்த சொல் இதே பொருளுடன் பயன்பட்டிருக்கிறது.

இன்னும் சிறப்பான பழந்தமிழ் வார்த்தைகள் கூட சென்னைத் தமிழில் இயல்பாகக் காணக் கிடைக்கிறது. “அண்டை வீடு” “அண்டை மாநிலம்” போன்றவை இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் காணக் கிடைக்கிற சொற்கள். இந்த சொல்லைப் பெரிய படிப்போ, கல்வியறிவோ இல்லாத சென்னையின் ஆதித் தமிழன் தான் இன்றும் புழங்கி வருகிறான். “வூட்டாண்ட” “வாராவதியாண்ட” “அண்ணாண்ட” “இண்ணாண்ட”. தமிழின் சிறப்பு பேசுகிற பலரும் இந்த மக்கள் பேசுகிறார்கள் என்ற காரணத்தாலேயே இந்த சொற்களை எல்லாம் பயன்படுத்துவதில்லை.

தமிழுக்குச் சிறப்பு என்று சொல்லப் படுகிற “ழ”கரத்தை வேறு எந்த வட்டாரத்துத் தமிழர்களை விடவும் இப்போதும் சென்னை மக்கள் தான் உச்சரிப்பு சுத்தமாகச் சொல்கிறார்கள். “ஈழ்த்துகினு (இஸ்துகினு என்ற வார்த்தையுடன் இந்த சொல்லும் புழங்கி வருகிறது) பூட்டானா” “ஏழ்ரூபாடா” போன்ற பதங்கள் சென்னை வழக்கில் சொல்லப் படுகிறவையாக இருந்தாலும் அந்த சிறப்பு “ழ”கரத்தை மற்ற எவரையும் விட அழுத்தத்தோடும் சுத்தமாகவும் உச்சரிக்கவில்லையா சென்னை மக்கள்?

”இதப் பாருடா” “இதப் பாரேன்” போன்ற பதங்கள் சென்னை சென்னை வழக்கில் “தோடா” என்று சுருங்கிவிடுகிறது. இப்படிச் சுருக்குவது சரியா தவறா என்ற விவாதத்தை விடத் தேவையா இல்லையா என்பது தான் கவனிக்கப் பட வேண்டியது. சென்னையின் மக்கள் பெரும்பாலாணோர் அடித்தட்டு மக்களாக, உழைக்கும் மக்களாக, அன்றாடம் பொருள் ஈட்டி வாழுகிறவர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் ”பாருங்கள் ஸ்நேகிதரே, நான் அகஸ்மாத்தாக வாராவதி அருகில் வந்து கொண்டிருக்கையில்...” என்று நீட்டி முழக்குவதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அவன் தன் உழைப்புக்கும் பொருளீட்டுதலுக்குமான நேரத்துக்குப் பாதிப்பு வராமல் தான் அடுத்தவர்களுடன் உரையாட முடியும்.

“சோறு” என்ற சொல்லை எத்தனைத் தமிழர்கள் பயன்படுத்துகிறோம்? சாதம் தானே வழக்குத் தமிழாகிவிட்டது? அன்னம் என்ற சோற்றுக்கான ஆதித் தமிழ்ச் சொல்லை இன்றளவும் வழக்கத்திலே வைத்த்திருப்பவர்கள் தெலுங்கர்கள் அல்லவா? அதிகம் போனால் சோறு என்ற சொல்லை எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? “சோறு திங்கிறியா, பீ திங்கிறியா?” இந்த வசவு வாக்கியத்துக்கு மட்டும் தானே மேல்த் தட்டுத் தமிழர்கள் சோறு என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள்? சென்னைத் தமிழன் தான் “இன்னாது புளிசோறா தயிர்சோறா?” ”சோத்துக்கு உப்புப் போட்டுத்தானே துண்றே” என்று சொல்லி வருகிறான். இது தெரியாம அவ்வையார் பாட்டி வேற “சோழ நாடு சோறுடைத்து”ன்னு பாடிட்டுப் போயிடுச்சு. “சோழ நாடு ஸாதம் உடைத்துன்னு” பாடியிருந்தால் அந்தப் பாடல்கள் எல்லாம் அந்நியமாகியிருக்காதோ என்னவோ?

“சென்னைத் தமிழ் குறையே இல்லாததுன்னு சொல்றியா” என்று கேட்டால் வீம்புக்கு ஆமாம் என்று சொல்ல மாட்டேன். அது ஏன் குறையுடையதானது என்ற காரணங்கள் அல்லவா கண்டறிந்து களையப் பட வேண்டியவை? வட்டார வழக்கு என்பது என்ன? தங்களைச் சுற்றி வாழுகிற மக்கள் பேசுகிற மொழியின் பாதிப்பு தங்கள் மொழியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தான் வட்டார வழக்கு. இரண்டு வழ்க்குகள் புழங்கி வருகிற பூகோளப் பகுதியில் காலப் போக்கில் மக்கள் தங்கள் வசதியைக் கருதி இரண்டுக்கும் பொதுவாக சொற்களை உச்சரிக்கத் தொடங்குவார்கள். அதுதான் வட்டார வழக்கு. அந்த மக்களிடமிருந்து தொலைவில் இருக்கிறவனுக்கு அது வேறுபட்டதாக, புதிதாகத் தெரிகிறது.

மற்ற வட்டாரங்களைப் பொறுத்தவரை அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் தமிழர்கள் என்பதால் அவர்களது வட்டார வழக்கினால் பெரிய சிரமம் எதுவும் இல்லை. மதுரைக் காரர்கள் “எம்பத்தி ஒன்னு” என்று சொல்வதை தஞ்சை மக்கள் “எம்ப்ளத்தி ஒன்னு” என்று சொல்வார்கள். ஆனால் இரண்டையும் கேட்கிறவர்கள் பெரும்பாலும் அதை 81 என்றே புரிந்து கொள்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் சென்னையைச் சுற்யிருந்த பூகோளப் பகுதிகள் என்னென்ன? மேற்கு மற்றும் வடக்கே தெலுங்கு பேசுகிறவர்கள் அதிகம் வசித்த தற்போதைய ஆந்திரப் பகுதி. கிழக்கே கடல், தெற்கே செங்கல்பட்டு, ஆற்காடு உள்ளிட்ட வடமத்திய தமிழக மாவட்டங்கள். தமிழக மாவட்டங்களின் நிலத் தொடர்பினால் தொன்று தொட்டுப் பேசிய தமிழ் நிலைத்திருந்தது. அதனுடன் தெலுங்கு பேசும் பூகோளப் பிரத்தேசத்தின் தொடர்பால் தெலுங்குச் சொற்கள் உள்ளே வந்தன. கடல் வழியாக வந்த ஆங்கிலேயர்களிடமிருந்தும் வடஇந்திய இஸ்லாமியர்களிடமிருந்தும் ஆங்கிலமும் உருதும் வந்து சேர்ந்தன.

ஆக தன்னைச் சுற்றியிருந்த மொழிகளின், பாதிப்புடன் பேசுவது மற்ற வட்டாரத்து மக்களின் பிழையில்லை எனில், சென்னைத் தமிழனின் பேச்சு வழக்கும் தவறில்லைதான். ஒரு காலத்தில் மக்கள் குளிக்கவும், குடிநீரெடுத்துச் செல்லவும் பயன்பட்ட கூவம் ஆறு இன்று மனிதப் பயன்பாட்டுக்கே லாயக்கில்லாமல் போய் விட்டது. அதைச் சுத்தப்படுத்தவும் 25 கோடி ரூபாயில் திட்டம் தீட்டுகிறவர்கள் ஏன் இந்த சென்னை வழக்கத் தமிழையும் செழுமைப் படுத்த பொருட் செலவு செய்து திட்டம் தீட்டக் கூடாது?

சாக்கடை அடைத்திருக்கிறது என்று இந்து நாளேட்டில் “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்குக் கடிதம் எழுதுவதை விட சட்டையை அவிழ்த்து வைத்துவிட்டு ஒரு குச்சியை எடுத்துக் குத்துவது எவ்வளவோ மேல்.

கருப்போ சிவப்போ ஏதோ ஒரு நிறத்தில் புருவங்களுக்கு மத்தியில் குத்துகிற புள்ளிதான் அழகான திலகமாகிறது. வாருங்கள் சென்னைப் பதிவர்களே, சென்னைத் தமிழின் விழுமியங்களையும், களையப் பட வேண்டிய குறைகளையும் பற்றி விவாதிப்போம்.


   

Monday, 21 June, 2010

வன்புணர்வைத் தடுக்கும் பாதுகாப்பு சாதனம்...

story.rape.condom தென்னாப்பிரிக்க மருத்துவ்ர் சோனெட் ஈயர்ஸ் (Sonnet Ehlers) பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார். இது வேண்டாத கர்பத்தையோ எய்ட்சையோ தடுக்கிற பாதுகாப்பு சாதனமல்ல. அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதைக் குறித்து சோனெட் அவர்கள் கூறுகையில்:

”நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வன்புணர்வுக்காளான ஒரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. கண்களில் ஒளியிழந்து சுவாசிக்கும் பிணம் போல் கிடந்தாள். மிகுந்த சிரமத்துடன் பேசினாள்.

”எனக்கு மட்டும் பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால்...”

வெறும் இருபது வயது மருத்துவ ஆராய்சியாளரான என்னால் என்ன செய்துவிட முடியும். உன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உறுதி மட்டும் தான் கொடுக்க முடிந்தது. அந்த உறுதிக்குச் செயல் வடிவம் தருவதற்குள் நாற்பது ஆண்டுகள் உருண்டு மறைந்துவிட்டன.”

இந்த சாதனத்துக்கு ரேப்-ஏக்ஸ் (RapeAxe) என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இந்த வேளையில் பல்வேறு தென்னாப்பிரிக்க நகரங்களைச் சேர்ந்த பெண்களிடம் இந்த சாதனத்தை விநியோகித்து வருகிறார் மருத்துவர் சோனெட்.

உதிரப் போக்கிற்காக அணிகிற டேம்ப்போன் சாதனம் போன்றது தான் இதுவும். இதை அணிந்திருக்கிற பெண்ணை வன்புணர முயற்சிக்கிறவரின் ஆணுறுப்பைச் சுற்றி இதிலுள்ள பற்கள் இறுகத் தொடங்கும்.

மருத்துவர் ஒருவரின் உதவியில்லாமல் குற்றவாளியின் ஆணுறுப்பை அதிலிருந்து விடுவிக்க இயலாது. ஆணுறுப்பு இதனுள் சிக்கியிருக்கும் போது குற்றவாளியால் சிறுநீர் கழிக்கவோ நடக்கவோ கூட முடியாது. வலியில் உயிரே போய் விடும். ஆனாலும் இதனால் தோலின் மேற்புறத்தில் கிழிசல்களோ ரத்தக் காயங்களோ ஏற்படாது, என்றும் கூறுகிறார்.

பெண்கள் சிறப்பு மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் உளவியல் நிபுனர்களைக் கலந்தாலோசித்து இதனை வடிவமைத்திருக்கும் சோனெட், தனது வீடு மற்றும் வாகனத்தையும் விற்றுக் கிடைத்த பணத்தில் இது போன்ற முப்பதாயிரம் சாதனங்களைச் சோதனைக்கு விட்டுள்ளார்.

பெண்கள் டேட்டிங் செல்லும் போதோ அல்லது பழக்கமில்லாத இடங்களுக்குச் செல்ல வேண்டிய தருணத்திலோ இந்த சாதனம் மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்கிறார் இரு மகள்களுக்குத் தாயாக இருக்கக் கூடிய சோனெட்.

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சிறை தண்டனை அடைந்துள்ள பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள் பலரிடம் இக்கருவி குறித்து முன்பே தெரிந்திருந்தால் இக்குற்றத்தைச் செய்வதற்கு யோசித்திருப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படது. அவர்களில் சிலர் மௌனமாக ஆமோதிக்கவும் செய்தனர்.

இந்த சாதனத்தைக் குறித்துக் கண்டனங்களும் எழாமலில்லை. இந்த சாதனத்தை அணிந்திருக்கிற ஒருவர் எப்போது வேண்டுமானாலும் தன் மீது பாலியல் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்துடனேயே இருக்க நேரிடும். மேலும் இக்கருவி வன்புணர்வைத் தடுத்துவிட்டாலும் எதிர்பாராத தாக்குதலினால் ஏற்படக் கூடிய உளவியல் பாதிப்புகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றும் என்றும் கேள்விகள் எழுந்த வன்னமுள்ளன.

பாதிக்கப் பட்டவர்களுக்குக் குறைந்தபட்ச நீதியாவது கிடைக்கும் என்பது தான் இந்தச் சாதனத்துக்கு ஆதரவாக வைக்கப்படும் ஒரே கருத்து.

வன்புணர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆப்பிரிக்கப் பெண்கள் பல ஆபத்தான முறைகளைக் கையாளுகின்றனர். உடம்புடன் ஒட்டி இருக்கக் கூடிய மிக இறுக்கமான உள்ளாடைகளை அணிவதும், ஸ்பாஞ்சுகளுக்குள் ப்ளேடுகளை வைத்து அதைப் பெண்ணுறுப்பில் வைத்துக் கொள்வதும் ஆப்பிரிக்கப் பெண்களிடம் வெகு சகஜமாகிவிட்டன. பாலியல் குற்றம் செய்ய நினைக்கிறவர்களை ஒரு கணமாவது யோசிக்க வைத்தால் அதுவே இந்த மருத்துவ சாதனத்தின் வெற்றி என்கிறார் சோனெட்.

[ஆங்கிலக் கட்டுரை இங்கே இருக்கிறது. என்னுடைய ஆங்கில அறிவு ஓரளவுக்காவது தேறுமா தேறாதா என்று யாரேனும் இதையும் அதையும் ஒப்பிட்டுச் சொன்னால் “வளர நன்னி”. பதிவு நன்றாக இருக்கிறது, நபநப, அருமையான பகிர்வு, போன்ற வழக்கமான பின்னூட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டி விவாதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.]

Monday, 14 June, 2010

என் உயிரினும் மேலான கத்திரிக்காயே...

உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, கத்திரிக்காயே. கால் நூற்றாண்டுக்கும் மேலாக என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு அற்புதமான தோழரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்தான் கத்திரிக்காய். சரியாகப் படிக்காமல் நான் என் அப்பாவிடம் அடிபட்டதை விட, மகனோ மகளோ காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட பெற்றோரிடம் அதிகம் அடிபட்டவர் என் உடன்பிறப்பு. அவர்தான் கத்திரிக்காய்.

அவரை விரும்பாதவர்களும் கிடையாது, அவரைப் பழிக்காதவர்களும் கிடையாது. இந்த விசித்திரமான நிலை வேறு “யாருடைய” நண்பருக்கும் ஏற்பட்டிருக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும், அங்கங்கே தடித்துப் போகும்  என்ற இரு பெரும் குற்றச் சாட்டுகள் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. என் நேரடி அனுபவத்திலிருந்தே இவை இரண்டும் பொய் என்று சொல்ல முடியும்.

நான் சுமாராக ஐந்து வயதிலிருந்து கத்திரிக்காய் சாப்பிட்டு வருகிறேன். வாரத்தில் இரண்டு நாட்களாவது கத்திரிக்காய் இல்லாவிட்டால் எனக்குச் சோறு இறங்காது. 29 வயது நடந்துகொண்டிருக்கிறது. இப்போது வரை கத்திரிக்காயால் அரிப்போ தடிப்போ ஏற்பட்டதில்லை. கடும் வெய்யில் காலத்தில் மட்டும் காது மடல், அக்குள், முதுகு, மற்றும் மறைவிடங்களில் வேர்வை சேர்ந்து அரிப்பு ஏற்பட்டிருக்கிறதே தவிற கத்திரிக்காயினால் ஒருபோது அத்தகைய சிக்கல் ஏற்பட்டதில்லை.

கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லுகிறவர்களுக்குப் பணிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கத்திரிக்காயை விட சிலருக்கு ஈழத் தமிழர், ஈழத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு போன்றவற்றைப் பற்றிக் கேட்டாலே கடும் அரிப்பு தொடங்கிவிடும். அவர்களின் அந்த அரிப்பு எதைக் கொண்டு சொறிந்தாலும் மறையாது, குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். அக்கறையுடன் நீங்கள் கொடுக்கிற சோடா மூடி, உப்புத் தாள், உடைத்த செங்கல் போன்ற எதுவும் அவர்களுக்குப் பயன்படாது. உடலில் ஆங்காங்கே தடித்துப் போய் பார்க்கவே விகாரமான தோற்றமும் ஏற்பட்டுவிடும்.

இதற்கெல்லாம் நீங்கள் கத்திரிக்காயைக் குறை சொன்னால் அதற்கு என் நண்பர் கத்திரிக்காய் பொறுப்பாக மாட்டார். இது முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களின் குற்றம், அவர்களது புனர்வாழ்வைக் குறித்து அக்கறையுடன் சிந்திப்போரின் குற்றம்.

அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டவருக்கு நோயின் தாக்கம் குறைய சில வைத்திய முறைகள் உள்ளன. ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள், குறிப்பாக ஐஃபா விழாவைக் கண்டித்தவர்கள் மீது கண்டணம் தெரிவிக்க வேண்டும். உலக அரங்கில் சிறந்த படங்களைத் தரத் தவறிய ஈழத் தமிழர்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களைப் போலல்லாமல் தரமான படங்களைக் கொடுத்து வரும் சிங்கள இயக்குனர்களுக்கு முதுகு, அக்குள், மறைவிடங்கள் உள்ளிட்ட அத்தனை அவயங்களையும் சொறிந்துவிட வேண்டும். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக “நாம் தமிழர்” அமைப்பினரை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோரின் பதில்களையும் மறுவினைகளையும் புறந்தள்ள வேண்டும். ஒத்துவாழ இயலாத நிலையில் மனைவியை விவாகரத்து செய்ததை வசதியாக மறந்துவிட வேண்டும். ஆனால் உடன்பட வழியே இல்லாத சிங்களர்களுடன் தமிழர்கள் ஒத்து வாழ வேண்டும் என்று “பொருத்தமான” அறிவுரைகளைக் கூற வேண்டும்.

எவ்வளவு அரித்தாலும் அடுத்த வாரக் குமுதத்துக்கு ஓட்டைப் பக்கங்களைத் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வளவையும் செய்தும் அறிப்பு குறையாவிட்டால் இரண்டு வார இடைவெளியில் மீண்டும் மேலே சொன்னவற்றைச் செய்ய வேண்டும்.

இரண்டு வாரம் பொறுத்திருக்க வேண்டுமா? என்று காண்டாகிறவர்கள் பொறுமையாகக் கவனிக்க. அந்த இரண்டு வாரங்களில் அரிப்பு & தடிப்பு பார்ட்டி சொறிஞ்சு சொறிஞ்சு செத்தாலும் என் நண்பர் கத்திரிக்காய்க்கு அதைப் பற்றி கவலையில்லை.

Saturday, 15 May, 2010

ச்சேட்... [12/05/2010]

விஜய்கோபால்சாமி – ஸ்டேட்டஸ்: அவைலபில்; மெசேஜ்: ஒரையாட வாங்க, ஓரியாட வராதீங்க 


விஜய்கோபால்சாமி: சார், ஆன்லைன்ல இருக்கீங்களா? 
சோர்ஸ்: இருக்கேன் சொல்லுங்க… 


விஜய்கோபால்சாமி: நானும் மூணு வருஷமா ப்ளாகு எழுதுறேன். எனக்கு பரபரப்பான செய்திகள் கொஞ்சம் வேணும். உங்களக் கேட்ட வேலை சுலபமா முடியும்னு சொன்னாங்க. 
சோர்ஸ்: இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. நான் குடுக்குற அக்கவுண்ட் நம்பர்ல நான் சொல்ற அமௌண்ட்ட போட்டுடுங்க. உங்களுக்கு வேண்டிய நியூச அடுத்த நிமிஷமே ச்சேட்ல சொல்றேன்…


விஜய்கோபால்சாமி: ஓக்கே சார். அக்கவுண்ட் நம்பர், பிராஞ்ச் கோட், பேர், எல்லாம் சொல்லுங்க சார். 
சோர்ஸ்: உன் இன்பாக்ஸ்ல போய் பாரு. நீ கேட்ட டீட்டெய்ல்ஸ் எல்லாம் இருக்கும்.

விஜய்கோபால்சாமி: சரி சார். டிரான்ஸ்பர் பண்ணிட்டு மறுபடியும் வற்றேன். 
சோர்ஸ்: சீக்கிரம் வா...

விஜய்கோபால்சாமி: ஆகட்டும் சார் 


[ஒரு மணிநேரம் கழித்து] 

விஜய்கோபால்சாமி: சார், நீங்க மெயில்ல சொல்லிருந்த அக்கவுண்ட்டுக்கு சொல்லிருந்த அமௌண்ட் டிரான்ஸ்பர் பண்ணியாச்சு சார். 
சோர்ஸ்: ம்ம்ம், உனக்கு என்ன மாதிரி நியூஸ் வேணும், லோக்கலா, ஸ்டேட்டா, நேஷனலா, இண்ட்டர்நேஷனலா?

விஜய்கோபால்சாமி: சார், போஸ்ட் போட்ட உடனே பத்திக்கனும் சார். ஹிட்டு லட்சக்கணக்குல போகனும். அப்படி ஒரு நியூஸ் வேணும். 
சோர்ஸ்: சரி சொல்றேன் கேட்டுக்கோ

விஜய்கோபால்சாமி: ம்ம்ம் சொல்லுங்க 
சோர்ஸ்: ஐபிஎல் பிரச்சனைல சசிதரூர் பேர் அடிபட்டுச்சே, அது சம்பந்தமா ஒரு நியூஸ் சொல்றேன். கேட்டுக்கோ

விஜய்கோபால்சாமி: ம்ம்ம் 
சோர்ஸ்: ஆக்ச்சுவலா சசிதரூர் அவரோட லவ்வருக்கு கொச்சி டோமோட ஷேர்ச வாங்கிக் குடுத்துட்டாருங்கறதுதான் பிரச்சனை. ஆனா வெளிய தெரியாம இதில இன்னொரு விஷயமும் இருக்கு.

விஜய்கோபால்சாமி: சொல்லுங்க சார்? 
சோர்ஸ்: சசிதரூர் மூலமா கொச்சி டீம வாங்க நெனச்சது இன்னொரு விஐபி. அவரு பேரக் கேட்டா நீ ஆடிப் போயிடுவ...

விஜய்கோபால்சாமி: சொல்லுங்க சார். 
சோர்ஸ்: அவர் பேர் நித்தியானந்தா

விஜய்கோபால்: யாரு, நடிகை ரஞ்சிதாவோட ஒன்னா படுத்திருந்து மாட்டுனாரே அந்த நித்தியானந்தாவா? 
சோர்ஸ்: அவனேதாண்டா வெண்ண. குறுக்க கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது... புரிஞ்சுதா?

விஜய்கோபால்சாமி: புரிஞ்சுது சார்? 
சோர்ஸ்: நித்திதான் சசிதரூர் மூலமா கொச்சி டீம வாங்க ட்ரை பண்ணிருக்காரு. ஆரம்பத்துல இதுக்கு ஒத்துக்கிட்ட தரூர் பின்னாடி நித்தி போட்ட ஒரு கண்டீஷனால முரண்டு பண்ண ஆரம்பிச்சுட்டார்.

விஜய்கோபால்சாமி: ம்ம்ம் 
சோர்ஸ்: நித்தி, டீமோட ஷேர்ல அறுபது பர்செண்ட்ட ரஞ்சிதாவுக்குக் குடுக்கனும்னு கண்டீஷன் போட்டிருக்காரு. ஆனா பினாமியா இருக்கற வகையில அவருக்கும் அவரோட லவ்வருக்கும் ஆளுக்கு 25% ஷேர்ஸ் வேணும்னு டிமாண்ட் பண்ணிருக்காரு.

விஜய்கோபால்சாமி: சார், இந்த இடத்துல ஒரு சந்தேகம். கேட்டா தப்பா நினைக்க கூடாது. 
சோர்ஸ்: கேளு சொல்றேன்.

விஜய்கோபால்சாமி: அப்படிப் பாத்தா பிரச்சணை நித்திக்கும் தரூருக்கும் தானே. இதுல லலித் மோடி எங்கேந்து வந்தாரு? 
சோர்ஸ்: நித்தி போட்ட 60:40 டீல ஒத்துக்காம தரூர் பேரம் பேசிக்கிட்டிருந்தாரு... எதுக்கு வம்புன்னு நித்தி நேரடியாவே ஐபிஎல் ஹெட்டான லலித் மோடிகிட்ட ஒரு டீல் போட்டாரு. மோடி 70% ஷேர்ச ரஞ்சிதாவுக்குத் தற்றதா ஒத்துக்கிட்டார். மீதி 30% அ மட்டும் அவருக்குக் குடுத்த போதும்னும் சொல்லிட்டார்.

விஜய்கோபால்சாமி: மறுபடியும் எப்படி சார் இதுல தரூரோட காதலி உள்ள வந்தாங்க? 
சோர்ஸ்: அங்கதான் இருக்குது ட்விஸ்ட்டு…

விஜய்கோபால்சாமி: சொல்லுங்க சார்… 
சோர்ஸ்: நம்ப வச்சு ஏமாத்துன நித்திய பழிவாங்கறதுக்காக, தரூர் அவரோட லவ்வர விட்டு மோடியக் கரெக்ட் பண்ணுனாரு.

விஜய்கோபால்சாமி: அப்புறம் சார் 
சோர்ஸ்: மோடி கைல இருந்த முப்பது பர்செண்ட்ல 26%அ அவரோட ஆள் பேருக்கு எழுதி வாங்கிட்டாரு.

விஜய்கோபால்சாமி: அப்புறம் சார் 
சோர்ஸ்: அப்புறம் என்ன? மோடி “அடிக்காந்தா, இப்படி மோசம் பண்ணிட்டியேடின்னு” டயலாக் உட்டுட்டு திரிஞ்சாரு. அப்புறமா தரூருக்கு ஆப்படிக்கறதா நெனைச்சு தனக்குத் தானே அடிச்சிக்கிட்டதெல்லாம் ஊரறிஞ்ச விஷயம்.

விஜய்கோபால்சாமி: அப்புறம் சார் 
சோர்ஸ்: என்னது அப்புறம் சாரா? டேய், நா இதுவரைக்கும் சொன்னதுல நடுவுல நடுவுல கண்மணி, பொன்மணி, மானே தேனே எல்லாம் போட்டு நீதாண்டா பதிவு எழுதனும்

விஜய்கோபால்சாமி: சரிங்க சார். 
சோர்ஸ்: இதே மாதிரி வேற பதிவன் எவனாவது ஹாட் நியூஸ் தேடி அலைஞ்சா அவன் கிட்ட என் மெயில் ஐடியக் குடுத்து ச்சேட் பண்ண சொல்லு.

விஜய்கோபால்சாமி: சொல்றேன் சார். போயிட்டு அப்புறமா வற்றேன் சார். 
சரியாய் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு: 
Hi விஜய்கோபால்சாமி,

Congrats!

Your story titled 'சசிதரூர், மோடி, நித்தி – ஜலபுலஜங் – நடந்தது என்ன?' voted by 32,116 tamilish users and made popular at tamilish.com and the story promoted to the home page on 16th May 2010 04:07:02 PM GMT.

Here is the link to the story: http://www.tamilish.com/story/970516

Thank you for using Tamilish.com

Regards,

-Tamilish Team


Monday, 10 May, 2010

தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? என் அனுபவம்(ங்கள்)!!

வினவு தளத்தில் வந்திருந்த இக்கட்டுரையும் அழைப்பும் பெரிதும் ஈர்த்ததால் நானும் அதே தலைப்பில் எழுதுகிறேன். இது தொடர்பிலான செய்திகளை நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து தொடங்குகிறேன். சில பல உள்குத்துகளால் ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் ஃபெயிலாக்கப்பட்டு மனமுடைந்து திரிந்த நேரம் அது. அதே ஒன்பதாம் வகுப்பில் கணக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் அறிவுரையால் ஒரு டுட்டோரியலில் சேர்க்கப்பட்டு ஒரு வழியாக பத்தாம் வகுப்பை முடித்தேன். [மறுபடியும் என் முகத்திலெல்லாம் விழிக்க வேண்டுமா என்ற சலிப்பில் கூட இப்படி ஒரு ஆலோசணையை வழங்கியிருக்கலாம். எவர் கண்டார்?]

ஆண்டு முழுமைக்கும் சேர்த்து பொதுத் தேர்வுகளில் வந்து சேர்ந்தது இம்சை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் காட்டப்படும் சலுகைகளுக்கும், தனித் தேர்வர்களிடம் காட்டப்படும் கெடுபிடிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கும். பள்ளி மாணவர்களின் அறைகளுக்குள் நுழைகிற பறக்கும் படை போனதும் தெரியாமல் வந்ததும் தெரியாமல் வெளியேறிவிடும். அவர்களுக்கு இடையூறு நேராமலிருக்க சமயத்தில் பறக்கும் படையிலிருந்து ஒருவர் மட்டும் வகுப்பினுள் சென்று வருவார். அப்படியே தனித் தேர்வர்களின் நிலைமையையும் பார்த்துவிடுவோம்.

பறக்கும் படை தனித்தேர்வர்களின் அறைகளில் மட்டும் மொத்தமாகப் படையெடுக்கும். ஒவ்வொரு மாணவனையும் பாதாதி கேசம் சகல அவயங்களையும் தடவிப் பார்த்து சோதிக்கும். சோதனையில் திருப்தி அடையாவிட்டால் ஒரு சில மாணவர்களை கழிப்பறை வரை அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை செய்வார்கள். முழு உடல் பரிசோதனை என்பது ஆடைகளைக் களைந்து செய்யப்படுகிற சோதனை. அவ்விதமான சோதனை எனக்கு நடக்காததால் முழு உடல் பரிசோதனை எத்தகையது என்பது எனக்குத் தெரியாது. கொடுத்த மூண்று மணிநேரத்தில் இவ்விதமாகப் பதினைந்து நிமிடம் காலி.

தேர்வு முடிவுகளிலும் தனித்தேர்வர்கள் மாற்றாந்தாய்ப் போக்குடனேயே நடத்தப்படுவார்கள். என்னதான் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளி வந்துவிட்டாலும் மதிப்பெண் பட்டியலை கையளிப்பதில் பள்ளி மாணவர்களுக்கும் தனித்தேர்வர்களுக்கும் கால வித்தியாசம் தவறாமல் இருக்கும். பள்ளி மாணவர்களுக்குக் மதிப்பெண் பட்டியல் கொடுத்த பிறகு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குப் பிறகே தனித்தேர்வர்களுக்கு கொடுக்கப்படும். மற்றவர்கள் இதற்கு என்ன காரணம் கருதியிருந்தாலும் என் கண்களுக்குத் தனித்தேர்வர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையில் போட்டிக்கு வந்துவிடக் கூடாது என்கிற “நல்ல” [தெலுங்கு: நல்ல = கருப்பு] நோக்கம் மட்டுமே. தற்போது ஒரே நாளில் கொடுக்கப்படுவதாய்க் கேள்வி!

தாமதமாகவேணும் பட்டியலைக் கையில் வாங்கிய உடன் உறவினர் ஒருவர் பணிபுரிந்த இன்னொரு பள்ளிக்கூடத்தில் சேர்க்கைக்காகக் காத்திருப்பு ஆரம்பமானது. “டுட்டோரியலா, காமர்ஸ் வேணும்னா தற்றேன். ஏதோ தெரிஞ்சவங்களாச்சேன்னு தான் காமர்ஸ். மத்தவங்களுக்கெல்லாம் வொக்கேஷனல்தான் குடுக்கறோம்” என்று சொல்லப்பட “நாங்களும் அதுக்குத்தான் வந்தோம். நல்லதாப் போச்சு” என்று என் தகப்பனும் சிரித்து வைக்க, வந்த வேலை சுபம். பதினேழு மாணவர்களையும் நாண்கு மாணவிகளையும் உள்ளடக்கிய 11-ஜி பிரிவு அட்டகாசமாய்த் தொடங்கியது.

ஆனால் அந்த ஆசிரிய உறவினரால் அடுத்த இரண்டு ஆண்டுகளும் நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆசிரியரின் உறவினன் என்ற காரணத்தால் வகுப்பில் உள்ள பிற மாணவர்களால் ஒற்றனைப் போலவே பார்க்கப்பட்டேன். இதில் ஆசிரியர்களுக்குள் நிகழ்கிற கோஷ்டி மோதம்களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். உறவினரின் எதிர்கோஷ்டி ஆசிரியர்கள் ”விஜய்கோபால், போய் ஒரு டின்-கோக் வாங்கிட்டு வா”, “தேவர்ஸ்ல அரைப் பிளேட் பிரியாணி வாங்கிட்டு வா”, வெள்ளிக் கிழமை ராத்திரிக்கி ராக்ஃபோர்ட்ல ஒரு டிக்கெட் புக் பண்ணிட்டு வா” என்பது போன்ற [பள்ளிப் ப்யூனைக் கூட அனுப்பத்தகாத தனிப்பட்ட வேலைகள்] இம்சைகளுக்கும் ஆளானேன்.

சில மாதங்கள் சென்று வகுப்புத் தலைவனாக இருந்தவன் ஆசிரியரின் கைப்பையை கப்போர்டில் வைக்கச் சென்றபோது அதிலிருந்து இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைக் கையாடிவிட்டான். [என்ன காரணமோ திருடிவிட்டான் என்று சொல்ல மனம் வரவில்லை. கோடிக் கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதியை செய்திகளில் காட்டும் போது “முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில்” என்று சொல்லுகிற வரை அவன் செய்ததைத் திருட்டு என்று கூற என்னால் முடியாது.] கையாடல் குற்றச்சாட்டின் பேரில் அவன் பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு நான் முன்னிறுத்தப்பட்டேன்.

இடையிடையே நடைபெறுகிற வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடித்ததைப் போட்டுக் கொடுக்காமல் இருந்த காரணத்துக்காக இதர மாணவர்களின் ஆதரவுடன் வகுப்புத் தலைவன் பதவி வந்து சேர்ந்தது. முன்பு கோக் வாங்குவது, பிரியாணி வாங்குவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற வேலைகளை நான் இல்லாத நேரத்தில் அலுவலக உதவியாளர் குமார் செய்து கொண்டிருந்தார். புதிய பதவியேற்புக்குப் பிறகு இவ்வேலைகளை அதிகாரப் பூர்வமாக செய்யவேண்டிய கடமை எனதாகியது.

இதல்லாமல் யானைக்கால் ஒழிப்பு, எய்ட்ஸ் கட்டுப்பாடு, சுகாதாரப் பிரச்சாரம், ஆளும்கட்சியைக் குற்றம் சாட்டிய ஜெயின் கமிஷன் அறிக்கைக்கு கண்டணம் தெரிவித்தல் ஆகிய காரணங்களுக்காக வகுப்பில் உள்ள மற்ற பதினாறு மாணவர்களையும் தலைமையேற்று ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்லுதல், திரும்ப அழைத்து வருதல், தலைக்கணக்கெடுத்தல் போன்ற பணிகளும் உபரியாக வந்து சேர்ந்தது.

ஒருமுறை மாதாந்திரத் தேர்வு ஒன்றில் +2 மாணவர் ஒருவர் அவரது பிட்டை என் பாக்கெட்டில் வைத்திருக்கச் சொன்னார். பயத்தில் நானும் வாங்கி வைத்துக் கொண்டேன். தேர்வின் நடுவே அதை எடுத்து அவரது பாக்கெட்டில் வைத்திருந்து பார்த்து எழுதிவிட்டு மீண்டும் என் பாக்கெட்டில் போட்டுவிட்டார். எழுதி முடிந்தாகிவிட்டது என்று தெரிந்ததும் அதை வெளியே எடுத்து கண்ணால் கூடப் பார்க்காமல் கிழித்துப் போட்டுவிட்டேன். நான் கிழித்து எறிந்ததை ஆசிரியர் பார்த்துவிட்டு அருகில் வந்தார். ”பணத் திமிருடா நாயே” என்று காது மேலேயே அரை விழுந்தது. அதன் பிறகுதான் புரிந்தது +2 அண்ணாச்சி என் பாக்கெட்டில் அவரது பிட்டைப் போடுவதற்குப் பதிலாக பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் தவறுதலாகப் போட்டுவிட்டார். நான் அது தெரியாமல் அந்த நோட்டைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்கிறேன்.

நிலைமை இவ்வாறாக இருக்கையில் பதினோறாம் வகுப்பில் ஆண்டு இறுதித் தேர்வு வந்து சேர்ந்தது. படிக்க ஏதுவான சூழல் வீட்டில் இல்லாததால் வழக்கமாகத் தஞ்சைப் பெரியகோயில் மதிலைச் சுற்றியுள்ள புல் வெளியில் அமர்ந்து படிப்பது வழக்கம். எங்கள் வகுப்பிலிருந்த அரைச்சாமியார் மாணவன் ஒருவனும் என்னுடன் சேர்ந்துகொள்வதாகச் சொன்னான். அவ்வாறு சேர்த்துக் கொள்வதில் விருப்பம் இல்லாவிட்டாலும், நான் ஃபெயிலாகி அவன் பாசானால் பின்னால் நம் நிலைமை பரிதாபகரமாகிவிடுமே என்ற பயத்தில் ஒப்புக் கொண்டேன்.

ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் இரண்டு மூண்று விடுமுறை கொடுத்து தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் வழக்கம் போல் கோயில் புல்வெளியில் படிக்கப் புறப்பட்டபோது அரைச்சாமியாரும் ஒட்டிக் கொண்டார். அரைச்சாமியார் எப்படிப்பட்டவர் என்றால் ஏற்கெனவே +1ல் இரண்டு முறை தோல்வியடைந்து படித்து எங்கள் வகுப்புக்கு வந்தவர். ”வெங்காயம் பூண்டு அறவே சேக்காதே, உப்பு காரம் புளி கம்மியா சாப்பிடு அப்பத்தான் நீ உருப்படுவே என்று எல்லோருக்கும் இலவசமாகவே அறிவுரை சொல்லக் கூடியவர்.

அன்னைக்குப் பாத்து அவரும் என்னுடன் கம்பைன் ஸ்டடிக்கு வந்தார். புல்வெளியில் அமர்ந்து புத்தகங்களை விரித்து வைத்ததும் அவர் ஒரு சொற்பொழிவை ஆரம்பித்தார். பெரியகோயில் கோபுரத்தைப் பற்றிய கதை. கதையின் இறுதியில் அவர் சொன்ன நீதி, “கோபுரத்தை எக்காரணம் கொண்டும் அண்ணாந்து பாத்துவிடாதே” என்பதே. ஏனெனில் கோபுரத்தைப் பார்த்த ராஜீவ் காந்தியும் ஏணைய பிரபலங்களும் மண்டையைப் போட்டு விட்டார்களாம்.

எனக்கு ஒரே மாதிரி உட்டார்ந்து படித்து கழுத்தெல்லாம் வலியெடுக்கையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்து கை காலையெல்லாம் நீட்டி நிமிர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொள்வேன். அப்போதெல்லாம், கோபுரம் லேசாகக் கண்ணில் பட்டுவிடும். இதற்கு அந்த செமி-சாமியார் “சொல்றத கேக்க மாட்டேங்குற, அப்புறம் தேறுறது கஷ்டமாகிடும்” என்று அவ்வப்போது சாபமும் விடும்.

தேர்வு முடிவுகள் வந்த போது நான் பார்டரில் பாஸ், (682/1200) செமி-சாமியார் மூண்று பாடங்களில் அவுட். இறுதியாக பதினேழு மாணவர்களில் எட்டு பேர் ஃபெயில். நாலு மாணவிகளில் ஒருவர் ஃபெயிலாகி பெற்றோரின் வேண்டுகோளின் பேரில் அவரையும் பாசாக்கினார்கள். இருபத்தியோரு மாணாக்கர்கள் இருந்த வகுப்பு பதிமூண்றாகச் சுருங்கியது.

+2 என்பதால் முந்தைய ஆண்டு போல ஊர்வலங்களுக்கும், பேரணிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஆசிரியர்கள் நூறு சதவிகிதத் தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளி முடிந்தும் இரண்டு மணிநேரம் உட்கார வைத்து நோகடித்தனர். காமர்சுக்கு ஸ்பெஷல் கிளாசா என்று அறிவியல் கணிதப் பிரிவு மாணவர்களின் ஏளனத்துக்கும் ஆளானோம்.

அந்த நாளும் வந்தது. மாதாந்திரத் தேர்வுகளில் சில பாடங்களில் ஃபெயிலாகியிருந்த போதும் ஹால் டிக்கெட் புகைப்படத்துக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தேன். ஹால் டிக்கெட்டைக் கையளிக்கையில் வரலாற்று ஆசிரியர் “நீ மட்டும் தான் சிரிச்ச மாதிரி போஸ் குடுத்துருக்கெடா. மத்தவன்லாம் ஏதோ இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிருக்கானுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதற்கு யார் எவர் என்று தெரிந்துகொள்ள முடியாத வகையில் குனிய வைத்து மாணாவாரியாக அடி கொடுத்தார்கள் சக மாணவர்கள்.

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு நாலைந்து பாடங்களில் இண்டெர்னல் மதிப்பெண்கள் உண்டு. ஆனால் காமர்சு பிரிவில் எங்களுக்குத் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மட்டுமே இண்டெர்னல் மதிப்பெண்கள். அதனால் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களிடம் முடிந்த அளவு மரியாதையுடன் இருந்தோம். குறிப்பாகத் தமிழாசிரியர், கோபம் வந்தால் செந்தமிழில் அர்ச்சிப்பார். எனக்கு அவர் வைத்த “ஆட்டோ டயரு” என்ற பெயர் தவிர்த்து மற்ற அணைவரையும் செந்தமிழிலேயே திட்டியவர். நரம்பு புடைத்தாலும் சகலத்தையும் மூடிக் கொண்டு அவரிடமிருந்து இருபது மதிபெண்களை முழுமையாக வாங்கியது மிகப் பெரிய சாதனை. வகுப்பின் பதிமூண்று பேரும் அந்தச் சாதனையைச் செய்தோம்.

ஹால் டிக்கெட் கொடுக்கும் முன்பு வகுப்பறையில் உடைந்து போன பொருட்களுக்கு ப்ரேக்கேஜ் கட்டணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் இருபது ரூபாய். அதை வசூலிக்கும் பொறுப்பும் என் தலையில் விழுந்தது. ஸ்டடீ ஹாலிடேஸ் ஆரம்பமாகிவிட்டதால் ஒவ்வொரு மாணவனின் வீட்டுக்கும் நேரில் சென்று வசூலிக்க வேண்டும். ஆறேழு நாள் அலைச்சலுக்குப் பிறகு மொத்தக் காசும் வசூலாகியது. அன்றே ஆசிரியரிடம் ஒப்படைத்து மறுநாள் ஹால்டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்னால் தலைமை ஆசிரியரின் அறிவுரையைக் கேட்பதற்காகவே மாணவர்களை வரவழைத்தனர். வழக்கம் போல் பிரேயர் முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்தின் மைய மண்டபத்திலும், மாணவிகள் மரத்தடியிலும் குழுமினர். முதலில் மாணவர்களிடம் பேசத் தொடங்கினார் தலைமையாசிரியர்.

“பாசாகுறியோ ஃபெயிலாகுறியோ, இனி நீ நெனைச்சாக் கூட உனக்குப் பள்ளிக்கூட வாழ்க்கைன்னு ஒன்னு கெடைக்காது. ஒழுங்கா பரிச்சை எழுதி எல்லாரும் பாசாகிப் போயிடுங்க. இதுவரைக்கும் எப்படியோ, ஆனா பொதுத் தேர்வுல உங்க திறமைகளையெல்லாம் நல்ல விதமாக் காட்டுங்க. வேற விதமா காட்டுனாலும் நாங்க ஒன்னும் கண்டுக்க மாட்டோம். ஆனா பள்ளிக்கூடத்துப் பேரு கெட்டுப் போற மாதிரி ஒரு சூழ்நிலை வந்த நாங்க உங்களக் காப்பாத்துவோம்னு மாத்திரம் எதிர்பாக்காதீங்க” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மொழிப்பாடங்களில் தேர்வுகள் முடிந்து அன்று கணக்குப் பதிவியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்காக எனது விடைத்தாள் வகுப்பு முழுவதும் சுற்றியது. தேர்வு முடிய முக்கால் மணி நேரமே இருந்த நிலையில் என் பேப்பர் என் கைக்குத் திரும்பி வரவில்லை. கண்ணீர் விட்டு அழுத பிறகு இரண்டு பெஞ்ச்சுக்கு அப்பால் இருந்த மாணவன் பாவம் பார்த்து திருப்பிக் கொடுத்தான்.

கடைசித் தேர்வாக வரலாற்றுத் தேர்வு. வரைபடம் குறித்தலும் காலக்கோடு வரைதலும் கொஞ்சம் கடினமான வேலை. வரைபடம் கூடத் தோராயமாக ஒரு புள்ளியைக் குத்தி ஊர் பெயரை எழுதினால் மதிப்பெண் வந்துவிடும். ஆனால் காலக்கோடு வரைவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது என்பது மிகச்சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். பல சம்பவங்களைக் குறித்து சரியாகத் தெரிந்திருந்தாலும் நடைபெற்ற ஆண்டுகள் ஞாபகம் வரவில்லை. இறுதியாக இன்னொரு மாணவன் தன் பேப்பரைக் கொடுக்கத் தயாராக இருந்தும் வகுப்புக்கு வெளியே தலைமை ஆசிரியர் நின்றதால் வாங்கத் தயங்கியபடி உட்கார்ந்திருந்தேன்.

நெருங்கி வந்த தலைமை ஆசிரியர் என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே தட்டி, “ஒரு ஒரு மார்க்கும் உன் எதிர்காலம்டா. அவந்தான் குடுக்க ரெடியா இருக்கான்ல, வாங்கி எழுதிட்டுப் போவியா” என்று கிசுகிசுத்துவிட்டு நகர்ந்து சென்றார். பச்சைக் கொடி சிக்னல் கிடைத்த சந்தோஷத்தில் மொத்த வகுப்பும் கடைசி இருபத்தைந்து நிமிடம் பரபரத்தது. ஆசிரியர் கண்ணெதிரிலேயே பேப்பர்கள் மாறின, உரியவர்களுக்குத் திரும்பி வந்தன. பதிமூண்று பேரில் ஒன்பது பேர் பாஸ். மூண்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஃபெயில். அந்த மாணவி அடுத்த ஆண்டிலேயே இல்லறத்தில் இனிதே கால்பதித்தாள். மூவரில் ஒருவர் மீண்டும் படித்து அடுத்த அக்டோபரில் +2 பாசானார். இன்னொருவர், ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, பின்னர் சொந்தமாக மளிகைக் கடை தொடங்கி இன்று ஒரு வெற்றிகரமான சிறு வியாபாரி ஆகியிருக்கிறார். இன்னொருவர் ஐடிஐ பயிற்சி முடித்து லேத் நடத்துவதாகக் கேள்வி. இந்த இடத்தில் படத்துக்கு ”நன்றி” என்று எண்டு கார்ட் போட்டால் பொருத்தமாக இருக்கும்.

ஆசிரியர் ஒருவர் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக என்னை அடித்துத் துவைத்த காரணத்தால் எட்டாம் வகுப்புடன் படிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததும், மீண்டும் இன்னொரு ஆசிரியரின் கனிவான அணுகுமுறையினால் தொடர்ந்து படித்ததும், குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆனதும் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

என் பள்ளிப் படிப்புக் காலத்தில் பெரும்பாலாண [எல்லா ஆசிரியர்களும் என்று சொல்லவில்லை] ஆசிரியர்கள் மாணவர்களைத் தங்கள் பண்ணை அடிமைகள் போல நடத்தியதும் வலியுடன் கூடிய நினைவுகளாக என் ஞாபகத்தில் படிந்திருக்கிறது. தனிப் பயிற்ச்சிக் கட்டணத்துக்காக மாணவர்களைத் தேர்வெழுத விடாமல் செய்த எங்கள் ஊர் ஆசிரியர் ஒருவரின் பெயர் சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட போது, ஊரும் கல்வி முறையும் இன்னும் மாறிவிடவில்லை என்ற வேதனை கலந்த முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

பள்ளிக் கல்வி பெறாதவர்களும், பெறமுடியாதவர்களும் கூட மனிதர்கள் தான், அவர்களுக்கும் அறிவிருக்கிறது என்பதையும் ஒரு நாள் கற்றுக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் கடலை விற்கும் பையன் ஒருவனிடம் பெற்ற ஞானம் இது. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொன்ன கற்பனை கீதையை விடவும் வீரியமிக்கதாய் இருந்தது. “தம்பி ஒரு வேஸ்ட் பேப்பர் இருந்தா குடேன்” என்று கேட்ட போது அவனிடமிருந்து வந்த பதில் “உலகத்துல எதுவுமே வேஸ்ட் இல்லைன்னே. இந்தப் பேப்பர் என்கிட்ட இருக்க வரைக்கும், கடலைக்கு பொட்டலம் கட்ட உதவுது. உங்கிட்ட வந்தா வேற எதுக்குனா பிரயோஜனமாகும். திடீர்னு எதையும் வேஸ்ட்டுன்னு முடிவு கட்டிடாதண்ணே” என்று ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.

இத்தறுவாயில் எனக்கு முதல் வகுப்பில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி., என்ற ஆடம்பரங்களெல்லாம் என் வாழ்வில் இடம்பெறவில்லை) தமிழ்ப் பாடம் நடத்திய ஆங்கிலோ இந்தியரான கேத்தரின் மிஸ்சுக்கும் அந்தக் கடலை விற்ற பையனுக்கும் இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.

Sunday, 25 April, 2010

கேள்வியுடன் கொல்லான்...

நண்பர் கொல்லான் அவர்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் கொடுத்துள்ளேன். மூண்றாவது கேள்வியப் பாத்த பிறகு இவரு கொல்லானா கொலைவெறியானான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு.
நண்பர் கொல்லான் தனது வலைப்பூவில் புதிதாகக் கேள்வி பதில் தொடங்கியிருக்கிறார். அதுக்கு நான் தான் ஊக்கின்னு வேற சொல்லிருக்கறாரு. எத்தனை பாவத்துக்கு நான் ஆளாகறது சொல்லுங்க? அது பற்றி அறிவிப்புப் பதிவும் போட்டிருக்கிறார். இனி வருவது அவர் அனுப்பிய கேள்விகளும் என் பதில்களும்.


ஆபத்தான பாம்ப ஏன் நல்ல பாம்புன்னு சொல்லறாங்க?
இதுவும் “காக்கா காக்கான்னு கத்துறதால அதக் காக்கான்னு கூப்பிடுறாங்களா, இல்லை அதக் காக்கான்னு கூப்பிடுறதால அது காக்கான்னு கத்துதா”ங்கற மாதிரிதான். இருந்தாலும் உங்க கேள்விக்கு கொஞ்சம் சரியா பதில் சொல்ல முயற்சி பண்றேன்.

தற்கொலை பண்ணிக்கப் போறவன் கடைக்காரன்கிட்ட விஷம் கேக்கும்போது “நல்ல விஷமா குடுப்பா, குடிச்சோன்ன உயிர் போகற மாதிரி” அப்படீன்னு தானே கேப்பான். அதே போல கடிச்சோன்ன உயிர் போற மாதிரி ”நல்ல விஷம்” வச்சிருக்கறதால அது நல்ல பாம்பா இருக்குமோ என்னவோ. ஏன்ப்பா ஆப்பீசரக் கேக்க வேண்டிய கேள்விய என் கிட்டக் கேட்டு டர்ரக் கெளப்புறீங்க?

വിജയ ഗോപല്സാമി എന്ടര് പെയര്‍ വൈത്തതന്‍ കാരണം?
முதல் ரெண்டு வார்த்தை “விஜய் கோபால்சாமி” அது மட்டும் தான் புரியுது. எனக்கு பத்து பதினைஞ்சு பாஷை தெரியும்னு நீங்களா நெனைச்சுக்கிட்டா நான் என்ன பண்ணட்டும்? இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறீங்களே...

உங்க அப்பாவுக்கு நீங்க எத்தினையாவது பையன்?
What is your chronological rank among your father's children? இதுவா? 

புறா கால்ல கடுதாசி கட்டி அனுப்பி வெச்சா புறாவ என்ன பண்ணுவீங்க?
விஷயம் முக்கியமானதா இருந்தா வெக்கம் மானத்தையெல்லாம் விட்டுட்டுக் காலப் புடிக்க வேண்டியதுதான். நான் புறாக் காலைச் சொன்னேன்...

நீங்க பாமரனா இல்ல பண்டிதனா?
பாமரர்க்குப் பண்டிதன், பண்டிதர்க்குப் பாமரன். இதை நீங்க பண்டிதர் கிட்டயே சோதிச்சுக்கலாம்.

Monday, 19 April, 2010

கேள்வியுடன் லதானந்த்...

1. அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
கிடைக்காமல் திண்டாடியதை விட கிடைத்துத் திண்டாடிய அனுபவம் சுவையானது. கதவு மேல எழுதிருக்கறதையாச்சும் படிச்சுட்டுப் போயிருக்கனும். இல்லையா எழுத்துக்கு மேல இருந்த படத்தையாவது பாத்துட்டுப் போயிருக்கனும். ரெண்டையுமே பண்ணாததால கடைசியா ப்ளம்பர்னு சொல்லித் தப்பிச்சேன்.

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
வெறுத்து ஒதுக்கியவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஓரளவு முன்னேறியிருக்கிறேன் என்றால் அது சில நண்பர்கள் மீதான பொறாமையினால்தான். நட்பும் தொடர வேண்டும் என்ற காரணத்தால் பதிலை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
எதிர்பார்த்தே எந்த அனுபவமும் கிடைக்கலை... எதிர்பாக்கலைன்னா மட்டும் கெடைச்சுடுமாக்கும்... :(

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
அந்த அனுபவத்தைத்தான் மொதல் கேள்விக்குப் பதிலா சொல்லிருக்கேன்.

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
மரித்துப் போனவர்களிடம் கேட்காமல்  விட்ட மன்னிப்புகள் சில.

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
அது கொஞ்சம் ஏடா கூடமான படம். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக இருட்டுக்குள் ஒளிந்து கொள்ள விரைந்த நேரம் டிக்கெட் கிழிப்பவன் என் முகத்தை உற்று நோக்கி “நீங்க... நீங்க...” என்று எதையோ யோசிக்கத் தொடங்கினான். “அடப் பாவி... நீ எங்க வீட்டுக்குத் தெரிஞ்சவனா?” என்று மனதுக்குள் பதறிய வேளையில் “போன வாரம் பழைய டிக்கெட்ட ப்ளாக்ல வாங்கி ஏமாந்தது நீங்கதானே” என்றான். போன உயிர் அப்போதுதான் திரும்பி வந்தது.

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
கூட்ட நெரிசல் தாளாமல் சாதாரண டிக்கெட்டுடன் முதல் வகுப்பில் (பரங்கிமலை - கிண்டி) பயணம் செய்ததுதான் நான் செய்ததில் ஆகப் பெரிய சட்ட மீறல், பரிசோதகரிடம் பிடிபடாமல். சொந்தமாக வீடோ நிலமோ இன்னும் வாங்காத காரணத்தால் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
வாதம் செய்பவர்களிடம் முகம் கொடுத்து விவாதிக்கலாம். விதண்டாவாதம் செய்வதற்கென்றே சிலர் எழுதுவார்கள். அவர்களிடம் அடையாளங்களை மறைத்துக் கொண்டுதான் விவாதிக்க நேரிடும். அனானி கமெண்ட் என்றாலும் தனிநபர் தாக்குதல்களற்று சரியான பதில்கள் அல்லது கேள்விகளுடன் பின்னூட்டியிருக்கிறேன். சாக்கடைகளுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல அவசியம் இல்லை.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
இரண்டையும் படிக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனாலும் சாரு நிவேதிதா என்ற புண்ணியவான் அந்தக் குறையை ஓரளவுக்குத் தீர்த்து வைத்துள்ளார்.

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா? 
தாராளமா குடுக்கலாம். எனக்கு விளம்பரம்னா ரொம்ப பிடிக்கும்.

கொசுறு: கடந்த ஜி-டாக் உரையாடலில் காதுகுத்துக்கு வாரதமை குறித்து கேட்கவில்லை. காரணத்துடன் தான். ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு வாத்தியார் மாதிரி யாரையும் கேள்வி கேட்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. அதனாலேயே கேட்கவில்லை. மற்றபடி என் வீட்டு நிகழ்வைச் சாக்கிட்டு உங்கள் தமக்கையைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தீர்கள். அது முடியாமல் போன வகையில் எனக்கும் கொஞ்சம் வருத்தமே.

Tuesday, 6 April, 2010

ச்சேட்...


விஜய்கோபால்சாமி: மச்சி எப்டிடா கீறே....

அப்பாவி ஆனந்து: சோக்கா கீறேண்டா மச்சி... நாம பேசியே ரொம்ப நாளாயிட்ச்சுரா...

விஜய்கோபால்சாமி: ஐபிஎம் பொண்ணக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணதுலேந்து நீ என்ன மதிக்கிறதே இல்லைடா...

அப்பாவி ஆனந்து: அப்டியெல்லாம் சொல்லாத மச்சி... மனசுக்கு சங்கடமா கீது...

விஜய்கோபால்சாமி: வேற எப்படி சொல்றதாம்...

அப்பாவி ஆனந்து: அத்த வுடு மச்சி, சானியாவுக்குக் கல்யாணமாமே... நீ ஐட்ராபட்ல இருந்துமா இப்படியெல்லாம் நடக்குது...

விஜய்கோபால்சாமி: என்ன என்னடா பண்ணச் சொல்றே?

அப்பாவி ஆனந்து: மொதோ எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனதே உன்னாலதான்னு நான் ரொம்ப பெருசா கற்பனையெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்? அப்போ நீயும் டம்மி பீசுதானா?

விஜய்கோபால்சாமி: அய்யோ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்திடுறானுங்களே...

அப்பாவி ஆனந்து: மச்சான்... உன்ன விட்டா ஐட்ராபாட்ல எனக்கு யாரடா தெரியும்...

விஜய்கோபால்சாமி: வேணாண்டா, இப்படி நாம ச்சேட் பண்றதே வில்லங்கமானாலும் ஆகிடும்டா...

அப்பாவி ஆனந்து: மச்சி... செவுரு, சீலிங்கு, எலிவேஷன் இப்படி பல ஐட்டங்கள் வெளியே தெரிஞ்சாலும், வெளியா தெரியாத பேஸ்மெண்ட் தான் மச்சி கட்டடத்துக்கு முக்கியம். நீ பேஸ்மெண்ட் மாதிரி மாமு... முடியாதுன்னு சொல்லாத... யூ கேன் டூ இட்டு...

விஜய்கோபால்சாமி: அள்ளிப் போடுடா... நல்லா ஒரு லாரி மண்ண அள்ளி என் தலைலயே போடு...

அப்பாவி ஆனந்து: இன்னா மச்சி, இதுக்கு போய் இவ்வளவு சலிச்சுக்குறே... நா சொல்ற மாதிரி பத்து பேருக்கு ஈமெயில் அனுப்பு, கல்யாணம் தன்னால நின்னுடும்.

விஜய்கோபால்சாமி: என்னன்னுடா அனுப்பனும்...

அப்பாவி ஆனந்து: மாலிக்குக்கு எதாவது குணப்படுத்த முடியாத வியாதின்னு சும்ம பத்து பேருக்கு மெயில் அனுப்பு. அனானிமசா பத்து பதினைச்சு ப்ளாகுல போய் இத கமெண்ட்டா போடு. முடிஞ்சா அனானிமசா ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணி இதையே ஒரு போஸ்டா போட்டுடு...

விஜய்கோபால்சாமி: குணப்படுத்த முடியாத வியாதீன்னு சொன்னியே, ப்ரெய்ன் ட்யூமர்னு போட்டுக்கட்டுமா...

அப்பாவி ஆனந்து: வாட் நான்சென்ஸ் மச்சான், வதந்தி பரப்புறதுல இதெல்லாம் என் தாத்தா காலத்து டெக்னிக்... திங்க் சம்திங் நியூ மேன்...

விஜய்கோபால்சாமி: நீயே அதுக்கும் ஒரு சஜசன் சொல்லுடா நண்பா... எனக்கு இப்பவே கை காலெல்லாம் நடுங்குது....

அப்பாவி ஆனந்து: போனா போவுது, அவனுக்கு எய்ட்ஸ்னு மெசேஜ் கம்போஸ் பண்ணு... நீ அனுப்புற மெயில் நாளைக்கு நாளைக்கு நாடு பூராவும் பத்திக்கிட்டு எரியனும்...

விஜய்கோபால்சாமி: மச்சான், நீ சொன்னதையெல்லாம் ஏன் நீயே செய்யக் கூடாது?

அப்பாவி ஆனந்து: என்னடா இப்படி சொல்லிட்டே... என்ன இருந்தாலும் நீ எழுதுற மாதிரி வருமா...

விஜய்கோபால்சாமி: ஆங்... நீ மட்டும் கலிஃபோர்னியாவுல, கே.எஃப்.சி.ல வாங்குன கோழிக் காலக் கடிச்சிக்கிட்டு குஜாலா இருப்பே... நாங்க சஞ்சல்குடா ஜெயில்ல விட்டத்த வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்திருக்கனும்... கோத்... 

அப்பாவி ஆனந்து: என்னடா அசிங்கமா பேசுற...

விஜய்கோபால்சாமி: கோத்து விடுறதுக்குன்னே கெளம்பி வற்றீங்களான்னு கேக்க வந்தேன்...

அப்பாவி ஆனந்து: மச்சான், உன்னப் போயி வீரன்னு நெனச்சேன் பாரு... நீ ஒரு டம்மி பீசுடா...

விஜய்கோபால்சாமி: நாங்க டம்மியாவே இருந்துக்குறோம்... நீ அம்மியா இருந்தா, இவ்வளவு நேரம் சொன்னதையெல்லாம் நீயே செய்யேன் பாப்போம்...

அப்பாவி ஆனந்து: திஸ் இஸ் டூ மச்டா... அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்க உனக்கு எப்படி மனசு வருது... கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு வேற அப்பாவாகிட்டே...

விஜய்கோபால்சாமி: டேய்... நிறுத்துடா....

அப்பாவி ஆனந்து: எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லி அட்சதையைப் போட்டுட்டு பிரியாணிய சாப்பிட்டுட்டுப் போவியா....

விஜய்கோபால்சாமி: டேய்... 

அப்பாவி ஆனந்து: மச்சி யூ ஆர் ஸ்டிங்கிங் லைக் எ லூ...

விஜய்கோபால்சாமி: [சென்சார்] [சென்சார்] [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்]
 [சென்சார்].

அப்பாவி ஆனந்து's status is offline and cannot receive any messages right now

[மனக்குரல்: பேச்சக் கொறை, பேச்சக் கொறை]

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan