இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 28 June, 2010

சென்னைத் தமிழ் - சில சிந்தனைகள்

சமீபத்தில் குமுதம் நாளேடு முதலமைச்சரைப் பேட்டி கண்டு வெளியிட்டது. அதிலே முதலமைச்சரிடம் ஒரு கேள்வி.
கேள்வி: அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா?
பதில்: தமிழ்த் தாயின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை!
சென்னைத் தமிழர்களின் பேச்சு வழக்கு முதல்வருக்கு விரும்பத் தகாததாக இருக்கலாம். ஆனாலும் அது தமிழ்த் தாயின் (எனக்குத் தமிழ்த் தாய் என்ற கருத்துருவாக்கமே ஏற்புடையதல்ல) முகத்தில் குத்தப்பட்ட கரும்புள்ளி செம்புள்ளி என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. [இதைக் குறித்த எனது கருத்துச் சுருக்கத்தை இறுதிப் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.]

காலம் காலமாக வேறு எந்த வட்டார வழக்கையும் விட அதிகமாகப் பழிக்கப்படுவது சென்னைத் தமிழாகத் தான் இருந்துவருகிறது. கொங்கு வட்டாரத் தமிழோ அல்லது திருநெல்வேலி, மதுரை, தஞ்சை வட்டாரத் தமிழோ இந்த அளவுக்கு விமர்சனத்துக்கு ஆளானதில்லை.
சென்னையில், திருவல்லிக்கேணியில் பிறந்தவன் என்ற வகையில் எனக்கு முதல் முதலில் அறிமுகமாகிய என் தாய்மொழியின் வடிவம் சென்னைத் தமிழ். அவரவருக்கு அவரவர் தாய் மொழி சிறப்பானது என்பது எத்தனை உண்மையோ அதே அளவுக்கு அவரவர் வட்டார வழக்கும் சிறப்பானதே. மற்ற எந்த வட்டார வழக்கும் இந்த அளவுக்கு இழித்துரைக்கப் படாத நிலையில் சென்னைத் தமிழுக்கு மட்டும் எதற்கு இந்த நிலை?

வைரமுத்து ஒருமுறை தன் மேடைப் பேச்சில் அவருடைய மதுரை வட்டார வழக்குச் சொல் ஒன்றிற்கான விளக்கத்தைச் சொன்னார். “தம்ளர பொத்துனாப்புல வை” என்ற வாக்கியத்தில் “பொத்துனாப்புல” என்ற சொல்லுக்கு விளக்கம் சொன்னார். வெண்கலத் தம்ளரை இயல்பாக மேஜையிலோ தரையிலோ வைக்கையில் லேசான சத்தமாவது எழும்பும். ஆனால் சத்தம் எதுவும் எழுப்பாமல் வை என்பதற்கு “பொத்துனாப்புல வை” என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதற்கான வேர்ச்சொல்லையும் அப்போதே சொன்னார். “போத்துனாப்புல வை” என்று சொல்வது தான் பொத்துனாப்புல வை என்று மருவியிருக்கிறது. எத்தனை சிறப்பான விளக்கம். போர்வையைப் போத்தினால் சத்தமா வரும்?

ஒவ்வொரு வட்டார வழக்கும் கொண்டாடப் பட ஆயிரம் காரணம் இருக்குமானால் சென்னைத் தமிழுக்கு ஒரு நூறு காரணங்களாவது தேறாதா? வட்டார வழக்கு என்பது அந்தந்த வட்டாரத்தில் வாழுகிற உழைக்கும் மக்கள் பேசிய மொழி. இதில் சென்னையைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்கள் எந்த வகையில் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள்?
“வலிச்சாந்துரு” என்ற சென்னை வழக்குச் சொல் ஒரு தூய தமிழ்ச் சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இழுத்துவா என்ற சொல் சென்னை வழக்கில் “வலிச்சா” என்று மாறுகிறது. துடுப்பு வலித்தல், கயிறு வலித்தல், பீடி வலித்தல் போன்றவை எல்லாம் இழுத்தல் என்ற பொருளுடனேயே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் சீறாப்புராணத்தில் “மானுக்குப் பிணை நின்ற” படலத்தில் இந்த சொல் இதே பொருளுடன் பயன்பட்டிருக்கிறது.

இன்னும் சிறப்பான பழந்தமிழ் வார்த்தைகள் கூட சென்னைத் தமிழில் இயல்பாகக் காணக் கிடைக்கிறது. “அண்டை வீடு” “அண்டை மாநிலம்” போன்றவை இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் காணக் கிடைக்கிற சொற்கள். இந்த சொல்லைப் பெரிய படிப்போ, கல்வியறிவோ இல்லாத சென்னையின் ஆதித் தமிழன் தான் இன்றும் புழங்கி வருகிறான். “வூட்டாண்ட” “வாராவதியாண்ட” “அண்ணாண்ட” “இண்ணாண்ட”. தமிழின் சிறப்பு பேசுகிற பலரும் இந்த மக்கள் பேசுகிறார்கள் என்ற காரணத்தாலேயே இந்த சொற்களை எல்லாம் பயன்படுத்துவதில்லை.

தமிழுக்குச் சிறப்பு என்று சொல்லப் படுகிற “ழ”கரத்தை வேறு எந்த வட்டாரத்துத் தமிழர்களை விடவும் இப்போதும் சென்னை மக்கள் தான் உச்சரிப்பு சுத்தமாகச் சொல்கிறார்கள். “ஈழ்த்துகினு (இஸ்துகினு என்ற வார்த்தையுடன் இந்த சொல்லும் புழங்கி வருகிறது) பூட்டானா” “ஏழ்ரூபாடா” போன்ற பதங்கள் சென்னை வழக்கில் சொல்லப் படுகிறவையாக இருந்தாலும் அந்த சிறப்பு “ழ”கரத்தை மற்ற எவரையும் விட அழுத்தத்தோடும் சுத்தமாகவும் உச்சரிக்கவில்லையா சென்னை மக்கள்?

”இதப் பாருடா” “இதப் பாரேன்” போன்ற பதங்கள் சென்னை சென்னை வழக்கில் “தோடா” என்று சுருங்கிவிடுகிறது. இப்படிச் சுருக்குவது சரியா தவறா என்ற விவாதத்தை விடத் தேவையா இல்லையா என்பது தான் கவனிக்கப் பட வேண்டியது. சென்னையின் மக்கள் பெரும்பாலாணோர் அடித்தட்டு மக்களாக, உழைக்கும் மக்களாக, அன்றாடம் பொருள் ஈட்டி வாழுகிறவர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் ”பாருங்கள் ஸ்நேகிதரே, நான் அகஸ்மாத்தாக வாராவதி அருகில் வந்து கொண்டிருக்கையில்...” என்று நீட்டி முழக்குவதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அவன் தன் உழைப்புக்கும் பொருளீட்டுதலுக்குமான நேரத்துக்குப் பாதிப்பு வராமல் தான் அடுத்தவர்களுடன் உரையாட முடியும்.

“சோறு” என்ற சொல்லை எத்தனைத் தமிழர்கள் பயன்படுத்துகிறோம்? சாதம் தானே வழக்குத் தமிழாகிவிட்டது? அன்னம் என்ற சோற்றுக்கான ஆதித் தமிழ்ச் சொல்லை இன்றளவும் வழக்கத்திலே வைத்த்திருப்பவர்கள் தெலுங்கர்கள் அல்லவா? அதிகம் போனால் சோறு என்ற சொல்லை எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? “சோறு திங்கிறியா, பீ திங்கிறியா?” இந்த வசவு வாக்கியத்துக்கு மட்டும் தானே மேல்த் தட்டுத் தமிழர்கள் சோறு என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள்? சென்னைத் தமிழன் தான் “இன்னாது புளிசோறா தயிர்சோறா?” ”சோத்துக்கு உப்புப் போட்டுத்தானே துண்றே” என்று சொல்லி வருகிறான். இது தெரியாம அவ்வையார் பாட்டி வேற “சோழ நாடு சோறுடைத்து”ன்னு பாடிட்டுப் போயிடுச்சு. “சோழ நாடு ஸாதம் உடைத்துன்னு” பாடியிருந்தால் அந்தப் பாடல்கள் எல்லாம் அந்நியமாகியிருக்காதோ என்னவோ?

“சென்னைத் தமிழ் குறையே இல்லாததுன்னு சொல்றியா” என்று கேட்டால் வீம்புக்கு ஆமாம் என்று சொல்ல மாட்டேன். அது ஏன் குறையுடையதானது என்ற காரணங்கள் அல்லவா கண்டறிந்து களையப் பட வேண்டியவை? வட்டார வழக்கு என்பது என்ன? தங்களைச் சுற்றி வாழுகிற மக்கள் பேசுகிற மொழியின் பாதிப்பு தங்கள் மொழியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தான் வட்டார வழக்கு. இரண்டு வழ்க்குகள் புழங்கி வருகிற பூகோளப் பகுதியில் காலப் போக்கில் மக்கள் தங்கள் வசதியைக் கருதி இரண்டுக்கும் பொதுவாக சொற்களை உச்சரிக்கத் தொடங்குவார்கள். அதுதான் வட்டார வழக்கு. அந்த மக்களிடமிருந்து தொலைவில் இருக்கிறவனுக்கு அது வேறுபட்டதாக, புதிதாகத் தெரிகிறது.

மற்ற வட்டாரங்களைப் பொறுத்தவரை அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் தமிழர்கள் என்பதால் அவர்களது வட்டார வழக்கினால் பெரிய சிரமம் எதுவும் இல்லை. மதுரைக் காரர்கள் “எம்பத்தி ஒன்னு” என்று சொல்வதை தஞ்சை மக்கள் “எம்ப்ளத்தி ஒன்னு” என்று சொல்வார்கள். ஆனால் இரண்டையும் கேட்கிறவர்கள் பெரும்பாலும் அதை 81 என்றே புரிந்து கொள்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் சென்னையைச் சுற்யிருந்த பூகோளப் பகுதிகள் என்னென்ன? மேற்கு மற்றும் வடக்கே தெலுங்கு பேசுகிறவர்கள் அதிகம் வசித்த தற்போதைய ஆந்திரப் பகுதி. கிழக்கே கடல், தெற்கே செங்கல்பட்டு, ஆற்காடு உள்ளிட்ட வடமத்திய தமிழக மாவட்டங்கள். தமிழக மாவட்டங்களின் நிலத் தொடர்பினால் தொன்று தொட்டுப் பேசிய தமிழ் நிலைத்திருந்தது. அதனுடன் தெலுங்கு பேசும் பூகோளப் பிரத்தேசத்தின் தொடர்பால் தெலுங்குச் சொற்கள் உள்ளே வந்தன. கடல் வழியாக வந்த ஆங்கிலேயர்களிடமிருந்தும் வடஇந்திய இஸ்லாமியர்களிடமிருந்தும் ஆங்கிலமும் உருதும் வந்து சேர்ந்தன.

ஆக தன்னைச் சுற்றியிருந்த மொழிகளின், பாதிப்புடன் பேசுவது மற்ற வட்டாரத்து மக்களின் பிழையில்லை எனில், சென்னைத் தமிழனின் பேச்சு வழக்கும் தவறில்லைதான். ஒரு காலத்தில் மக்கள் குளிக்கவும், குடிநீரெடுத்துச் செல்லவும் பயன்பட்ட கூவம் ஆறு இன்று மனிதப் பயன்பாட்டுக்கே லாயக்கில்லாமல் போய் விட்டது. அதைச் சுத்தப்படுத்தவும் 25 கோடி ரூபாயில் திட்டம் தீட்டுகிறவர்கள் ஏன் இந்த சென்னை வழக்கத் தமிழையும் செழுமைப் படுத்த பொருட் செலவு செய்து திட்டம் தீட்டக் கூடாது?

சாக்கடை அடைத்திருக்கிறது என்று இந்து நாளேட்டில் “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்குக் கடிதம் எழுதுவதை விட சட்டையை அவிழ்த்து வைத்துவிட்டு ஒரு குச்சியை எடுத்துக் குத்துவது எவ்வளவோ மேல்.

கருப்போ சிவப்போ ஏதோ ஒரு நிறத்தில் புருவங்களுக்கு மத்தியில் குத்துகிற புள்ளிதான் அழகான திலகமாகிறது. வாருங்கள் சென்னைப் பதிவர்களே, சென்னைத் தமிழின் விழுமியங்களையும், களையப் பட வேண்டிய குறைகளையும் பற்றி விவாதிப்போம்.


   

Monday 21 June, 2010

வன்புணர்வைத் தடுக்கும் பாதுகாப்பு சாதனம்...

story.rape.condom தென்னாப்பிரிக்க மருத்துவ்ர் சோனெட் ஈயர்ஸ் (Sonnet Ehlers) பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார். இது வேண்டாத கர்பத்தையோ எய்ட்சையோ தடுக்கிற பாதுகாப்பு சாதனமல்ல. அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதைக் குறித்து சோனெட் அவர்கள் கூறுகையில்:

”நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வன்புணர்வுக்காளான ஒரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. கண்களில் ஒளியிழந்து சுவாசிக்கும் பிணம் போல் கிடந்தாள். மிகுந்த சிரமத்துடன் பேசினாள்.

”எனக்கு மட்டும் பெண்ணுறுப்பில் பற்கள் இருந்திருந்தால்...”

வெறும் இருபது வயது மருத்துவ ஆராய்சியாளரான என்னால் என்ன செய்துவிட முடியும். உன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிச்சயம் ஏதாவது செய்வேன் என்று உறுதி மட்டும் தான் கொடுக்க முடிந்தது. அந்த உறுதிக்குச் செயல் வடிவம் தருவதற்குள் நாற்பது ஆண்டுகள் உருண்டு மறைந்துவிட்டன.”

இந்த சாதனத்துக்கு ரேப்-ஏக்ஸ் (RapeAxe) என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் இந்த வேளையில் பல்வேறு தென்னாப்பிரிக்க நகரங்களைச் சேர்ந்த பெண்களிடம் இந்த சாதனத்தை விநியோகித்து வருகிறார் மருத்துவர் சோனெட்.

உதிரப் போக்கிற்காக அணிகிற டேம்ப்போன் சாதனம் போன்றது தான் இதுவும். இதை அணிந்திருக்கிற பெண்ணை வன்புணர முயற்சிக்கிறவரின் ஆணுறுப்பைச் சுற்றி இதிலுள்ள பற்கள் இறுகத் தொடங்கும்.

மருத்துவர் ஒருவரின் உதவியில்லாமல் குற்றவாளியின் ஆணுறுப்பை அதிலிருந்து விடுவிக்க இயலாது. ஆணுறுப்பு இதனுள் சிக்கியிருக்கும் போது குற்றவாளியால் சிறுநீர் கழிக்கவோ நடக்கவோ கூட முடியாது. வலியில் உயிரே போய் விடும். ஆனாலும் இதனால் தோலின் மேற்புறத்தில் கிழிசல்களோ ரத்தக் காயங்களோ ஏற்படாது, என்றும் கூறுகிறார்.

பெண்கள் சிறப்பு மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் உளவியல் நிபுனர்களைக் கலந்தாலோசித்து இதனை வடிவமைத்திருக்கும் சோனெட், தனது வீடு மற்றும் வாகனத்தையும் விற்றுக் கிடைத்த பணத்தில் இது போன்ற முப்பதாயிரம் சாதனங்களைச் சோதனைக்கு விட்டுள்ளார்.

பெண்கள் டேட்டிங் செல்லும் போதோ அல்லது பழக்கமில்லாத இடங்களுக்குச் செல்ல வேண்டிய தருணத்திலோ இந்த சாதனம் மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்கிறார் இரு மகள்களுக்குத் தாயாக இருக்கக் கூடிய சோனெட்.

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சிறை தண்டனை அடைந்துள்ள பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள் பலரிடம் இக்கருவி குறித்து முன்பே தெரிந்திருந்தால் இக்குற்றத்தைச் செய்வதற்கு யோசித்திருப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படது. அவர்களில் சிலர் மௌனமாக ஆமோதிக்கவும் செய்தனர்.

இந்த சாதனத்தைக் குறித்துக் கண்டனங்களும் எழாமலில்லை. இந்த சாதனத்தை அணிந்திருக்கிற ஒருவர் எப்போது வேண்டுமானாலும் தன் மீது பாலியல் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்துடனேயே இருக்க நேரிடும். மேலும் இக்கருவி வன்புணர்வைத் தடுத்துவிட்டாலும் எதிர்பாராத தாக்குதலினால் ஏற்படக் கூடிய உளவியல் பாதிப்புகளிலிருந்து எவ்வாறு காப்பாற்றும் என்றும் கேள்விகள் எழுந்த வன்னமுள்ளன.

பாதிக்கப் பட்டவர்களுக்குக் குறைந்தபட்ச நீதியாவது கிடைக்கும் என்பது தான் இந்தச் சாதனத்துக்கு ஆதரவாக வைக்கப்படும் ஒரே கருத்து.

வன்புணர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆப்பிரிக்கப் பெண்கள் பல ஆபத்தான முறைகளைக் கையாளுகின்றனர். உடம்புடன் ஒட்டி இருக்கக் கூடிய மிக இறுக்கமான உள்ளாடைகளை அணிவதும், ஸ்பாஞ்சுகளுக்குள் ப்ளேடுகளை வைத்து அதைப் பெண்ணுறுப்பில் வைத்துக் கொள்வதும் ஆப்பிரிக்கப் பெண்களிடம் வெகு சகஜமாகிவிட்டன. பாலியல் குற்றம் செய்ய நினைக்கிறவர்களை ஒரு கணமாவது யோசிக்க வைத்தால் அதுவே இந்த மருத்துவ சாதனத்தின் வெற்றி என்கிறார் சோனெட்.

[ஆங்கிலக் கட்டுரை இங்கே இருக்கிறது. என்னுடைய ஆங்கில அறிவு ஓரளவுக்காவது தேறுமா தேறாதா என்று யாரேனும் இதையும் அதையும் ஒப்பிட்டுச் சொன்னால் “வளர நன்னி”. பதிவு நன்றாக இருக்கிறது, நபநப, அருமையான பகிர்வு, போன்ற வழக்கமான பின்னூட்டங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பதிவின் உள்ளடக்கத்தை ஒட்டி விவாதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.]

Monday 14 June, 2010

என் உயிரினும் மேலான கத்திரிக்காயே...

உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, கத்திரிக்காயே. கால் நூற்றாண்டுக்கும் மேலாக என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு அற்புதமான தோழரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்தான் கத்திரிக்காய். சரியாகப் படிக்காமல் நான் என் அப்பாவிடம் அடிபட்டதை விட, மகனோ மகளோ காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட பெற்றோரிடம் அதிகம் அடிபட்டவர் என் உடன்பிறப்பு. அவர்தான் கத்திரிக்காய்.

அவரை விரும்பாதவர்களும் கிடையாது, அவரைப் பழிக்காதவர்களும் கிடையாது. இந்த விசித்திரமான நிலை வேறு “யாருடைய” நண்பருக்கும் ஏற்பட்டிருக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும், அங்கங்கே தடித்துப் போகும்  என்ற இரு பெரும் குற்றச் சாட்டுகள் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. என் நேரடி அனுபவத்திலிருந்தே இவை இரண்டும் பொய் என்று சொல்ல முடியும்.

நான் சுமாராக ஐந்து வயதிலிருந்து கத்திரிக்காய் சாப்பிட்டு வருகிறேன். வாரத்தில் இரண்டு நாட்களாவது கத்திரிக்காய் இல்லாவிட்டால் எனக்குச் சோறு இறங்காது. 29 வயது நடந்துகொண்டிருக்கிறது. இப்போது வரை கத்திரிக்காயால் அரிப்போ தடிப்போ ஏற்பட்டதில்லை. கடும் வெய்யில் காலத்தில் மட்டும் காது மடல், அக்குள், முதுகு, மற்றும் மறைவிடங்களில் வேர்வை சேர்ந்து அரிப்பு ஏற்பட்டிருக்கிறதே தவிற கத்திரிக்காயினால் ஒருபோது அத்தகைய சிக்கல் ஏற்பட்டதில்லை.

கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லுகிறவர்களுக்குப் பணிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கத்திரிக்காயை விட சிலருக்கு ஈழத் தமிழர், ஈழத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு போன்றவற்றைப் பற்றிக் கேட்டாலே கடும் அரிப்பு தொடங்கிவிடும். அவர்களின் அந்த அரிப்பு எதைக் கொண்டு சொறிந்தாலும் மறையாது, குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். அக்கறையுடன் நீங்கள் கொடுக்கிற சோடா மூடி, உப்புத் தாள், உடைத்த செங்கல் போன்ற எதுவும் அவர்களுக்குப் பயன்படாது. உடலில் ஆங்காங்கே தடித்துப் போய் பார்க்கவே விகாரமான தோற்றமும் ஏற்பட்டுவிடும்.

இதற்கெல்லாம் நீங்கள் கத்திரிக்காயைக் குறை சொன்னால் அதற்கு என் நண்பர் கத்திரிக்காய் பொறுப்பாக மாட்டார். இது முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களின் குற்றம், அவர்களது புனர்வாழ்வைக் குறித்து அக்கறையுடன் சிந்திப்போரின் குற்றம்.

அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டவருக்கு நோயின் தாக்கம் குறைய சில வைத்திய முறைகள் உள்ளன. ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள், குறிப்பாக ஐஃபா விழாவைக் கண்டித்தவர்கள் மீது கண்டணம் தெரிவிக்க வேண்டும். உலக அரங்கில் சிறந்த படங்களைத் தரத் தவறிய ஈழத் தமிழர்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களைப் போலல்லாமல் தரமான படங்களைக் கொடுத்து வரும் சிங்கள இயக்குனர்களுக்கு முதுகு, அக்குள், மறைவிடங்கள் உள்ளிட்ட அத்தனை அவயங்களையும் சொறிந்துவிட வேண்டும். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக “நாம் தமிழர்” அமைப்பினரை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோரின் பதில்களையும் மறுவினைகளையும் புறந்தள்ள வேண்டும். ஒத்துவாழ இயலாத நிலையில் மனைவியை விவாகரத்து செய்ததை வசதியாக மறந்துவிட வேண்டும். ஆனால் உடன்பட வழியே இல்லாத சிங்களர்களுடன் தமிழர்கள் ஒத்து வாழ வேண்டும் என்று “பொருத்தமான” அறிவுரைகளைக் கூற வேண்டும்.

எவ்வளவு அரித்தாலும் அடுத்த வாரக் குமுதத்துக்கு ஓட்டைப் பக்கங்களைத் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வளவையும் செய்தும் அறிப்பு குறையாவிட்டால் இரண்டு வார இடைவெளியில் மீண்டும் மேலே சொன்னவற்றைச் செய்ய வேண்டும்.

இரண்டு வாரம் பொறுத்திருக்க வேண்டுமா? என்று காண்டாகிறவர்கள் பொறுமையாகக் கவனிக்க. அந்த இரண்டு வாரங்களில் அரிப்பு & தடிப்பு பார்ட்டி சொறிஞ்சு சொறிஞ்சு செத்தாலும் என் நண்பர் கத்திரிக்காய்க்கு அதைப் பற்றி கவலையில்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan