இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Saturday 15 May, 2010

ச்சேட்... [12/05/2010]

விஜய்கோபால்சாமி – ஸ்டேட்டஸ்: அவைலபில்; மெசேஜ்: ஒரையாட வாங்க, ஓரியாட வராதீங்க 


விஜய்கோபால்சாமி: சார், ஆன்லைன்ல இருக்கீங்களா? 
சோர்ஸ்: இருக்கேன் சொல்லுங்க… 


விஜய்கோபால்சாமி: நானும் மூணு வருஷமா ப்ளாகு எழுதுறேன். எனக்கு பரபரப்பான செய்திகள் கொஞ்சம் வேணும். உங்களக் கேட்ட வேலை சுலபமா முடியும்னு சொன்னாங்க. 
சோர்ஸ்: இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. நான் குடுக்குற அக்கவுண்ட் நம்பர்ல நான் சொல்ற அமௌண்ட்ட போட்டுடுங்க. உங்களுக்கு வேண்டிய நியூச அடுத்த நிமிஷமே ச்சேட்ல சொல்றேன்…


விஜய்கோபால்சாமி: ஓக்கே சார். அக்கவுண்ட் நம்பர், பிராஞ்ச் கோட், பேர், எல்லாம் சொல்லுங்க சார். 
சோர்ஸ்: உன் இன்பாக்ஸ்ல போய் பாரு. நீ கேட்ட டீட்டெய்ல்ஸ் எல்லாம் இருக்கும்.

விஜய்கோபால்சாமி: சரி சார். டிரான்ஸ்பர் பண்ணிட்டு மறுபடியும் வற்றேன். 
சோர்ஸ்: சீக்கிரம் வா...

விஜய்கோபால்சாமி: ஆகட்டும் சார் 


[ஒரு மணிநேரம் கழித்து] 

விஜய்கோபால்சாமி: சார், நீங்க மெயில்ல சொல்லிருந்த அக்கவுண்ட்டுக்கு சொல்லிருந்த அமௌண்ட் டிரான்ஸ்பர் பண்ணியாச்சு சார். 
சோர்ஸ்: ம்ம்ம், உனக்கு என்ன மாதிரி நியூஸ் வேணும், லோக்கலா, ஸ்டேட்டா, நேஷனலா, இண்ட்டர்நேஷனலா?

விஜய்கோபால்சாமி: சார், போஸ்ட் போட்ட உடனே பத்திக்கனும் சார். ஹிட்டு லட்சக்கணக்குல போகனும். அப்படி ஒரு நியூஸ் வேணும். 
சோர்ஸ்: சரி சொல்றேன் கேட்டுக்கோ

விஜய்கோபால்சாமி: ம்ம்ம் சொல்லுங்க 
சோர்ஸ்: ஐபிஎல் பிரச்சனைல சசிதரூர் பேர் அடிபட்டுச்சே, அது சம்பந்தமா ஒரு நியூஸ் சொல்றேன். கேட்டுக்கோ

விஜய்கோபால்சாமி: ம்ம்ம் 
சோர்ஸ்: ஆக்ச்சுவலா சசிதரூர் அவரோட லவ்வருக்கு கொச்சி டோமோட ஷேர்ச வாங்கிக் குடுத்துட்டாருங்கறதுதான் பிரச்சனை. ஆனா வெளிய தெரியாம இதில இன்னொரு விஷயமும் இருக்கு.

விஜய்கோபால்சாமி: சொல்லுங்க சார்? 
சோர்ஸ்: சசிதரூர் மூலமா கொச்சி டீம வாங்க நெனச்சது இன்னொரு விஐபி. அவரு பேரக் கேட்டா நீ ஆடிப் போயிடுவ...

விஜய்கோபால்சாமி: சொல்லுங்க சார். 
சோர்ஸ்: அவர் பேர் நித்தியானந்தா

விஜய்கோபால்: யாரு, நடிகை ரஞ்சிதாவோட ஒன்னா படுத்திருந்து மாட்டுனாரே அந்த நித்தியானந்தாவா? 
சோர்ஸ்: அவனேதாண்டா வெண்ண. குறுக்க கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது... புரிஞ்சுதா?

விஜய்கோபால்சாமி: புரிஞ்சுது சார்? 
சோர்ஸ்: நித்திதான் சசிதரூர் மூலமா கொச்சி டீம வாங்க ட்ரை பண்ணிருக்காரு. ஆரம்பத்துல இதுக்கு ஒத்துக்கிட்ட தரூர் பின்னாடி நித்தி போட்ட ஒரு கண்டீஷனால முரண்டு பண்ண ஆரம்பிச்சுட்டார்.

விஜய்கோபால்சாமி: ம்ம்ம் 
சோர்ஸ்: நித்தி, டீமோட ஷேர்ல அறுபது பர்செண்ட்ட ரஞ்சிதாவுக்குக் குடுக்கனும்னு கண்டீஷன் போட்டிருக்காரு. ஆனா பினாமியா இருக்கற வகையில அவருக்கும் அவரோட லவ்வருக்கும் ஆளுக்கு 25% ஷேர்ஸ் வேணும்னு டிமாண்ட் பண்ணிருக்காரு.

விஜய்கோபால்சாமி: சார், இந்த இடத்துல ஒரு சந்தேகம். கேட்டா தப்பா நினைக்க கூடாது. 
சோர்ஸ்: கேளு சொல்றேன்.

விஜய்கோபால்சாமி: அப்படிப் பாத்தா பிரச்சணை நித்திக்கும் தரூருக்கும் தானே. இதுல லலித் மோடி எங்கேந்து வந்தாரு? 
சோர்ஸ்: நித்தி போட்ட 60:40 டீல ஒத்துக்காம தரூர் பேரம் பேசிக்கிட்டிருந்தாரு... எதுக்கு வம்புன்னு நித்தி நேரடியாவே ஐபிஎல் ஹெட்டான லலித் மோடிகிட்ட ஒரு டீல் போட்டாரு. மோடி 70% ஷேர்ச ரஞ்சிதாவுக்குத் தற்றதா ஒத்துக்கிட்டார். மீதி 30% அ மட்டும் அவருக்குக் குடுத்த போதும்னும் சொல்லிட்டார்.

விஜய்கோபால்சாமி: மறுபடியும் எப்படி சார் இதுல தரூரோட காதலி உள்ள வந்தாங்க? 
சோர்ஸ்: அங்கதான் இருக்குது ட்விஸ்ட்டு…

விஜய்கோபால்சாமி: சொல்லுங்க சார்… 
சோர்ஸ்: நம்ப வச்சு ஏமாத்துன நித்திய பழிவாங்கறதுக்காக, தரூர் அவரோட லவ்வர விட்டு மோடியக் கரெக்ட் பண்ணுனாரு.

விஜய்கோபால்சாமி: அப்புறம் சார் 
சோர்ஸ்: மோடி கைல இருந்த முப்பது பர்செண்ட்ல 26%அ அவரோட ஆள் பேருக்கு எழுதி வாங்கிட்டாரு.

விஜய்கோபால்சாமி: அப்புறம் சார் 
சோர்ஸ்: அப்புறம் என்ன? மோடி “அடிக்காந்தா, இப்படி மோசம் பண்ணிட்டியேடின்னு” டயலாக் உட்டுட்டு திரிஞ்சாரு. அப்புறமா தரூருக்கு ஆப்படிக்கறதா நெனைச்சு தனக்குத் தானே அடிச்சிக்கிட்டதெல்லாம் ஊரறிஞ்ச விஷயம்.

விஜய்கோபால்சாமி: அப்புறம் சார் 
சோர்ஸ்: என்னது அப்புறம் சாரா? டேய், நா இதுவரைக்கும் சொன்னதுல நடுவுல நடுவுல கண்மணி, பொன்மணி, மானே தேனே எல்லாம் போட்டு நீதாண்டா பதிவு எழுதனும்

விஜய்கோபால்சாமி: சரிங்க சார். 
சோர்ஸ்: இதே மாதிரி வேற பதிவன் எவனாவது ஹாட் நியூஸ் தேடி அலைஞ்சா அவன் கிட்ட என் மெயில் ஐடியக் குடுத்து ச்சேட் பண்ண சொல்லு.

விஜய்கோபால்சாமி: சொல்றேன் சார். போயிட்டு அப்புறமா வற்றேன் சார். 




சரியாய் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு: 
Hi விஜய்கோபால்சாமி,

Congrats!

Your story titled 'சசிதரூர், மோடி, நித்தி – ஜலபுலஜங் – நடந்தது என்ன?' voted by 32,116 tamilish users and made popular at tamilish.com and the story promoted to the home page on 16th May 2010 04:07:02 PM GMT.

Here is the link to the story: http://www.tamilish.com/story/970516

Thank you for using Tamilish.com

Regards,

-Tamilish Team


Monday 10 May, 2010

தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? என் அனுபவம்(ங்கள்)!!

வினவு தளத்தில் வந்திருந்த இக்கட்டுரையும் அழைப்பும் பெரிதும் ஈர்த்ததால் நானும் அதே தலைப்பில் எழுதுகிறேன். இது தொடர்பிலான செய்திகளை நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலிருந்து தொடங்குகிறேன். சில பல உள்குத்துகளால் ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் ஃபெயிலாக்கப்பட்டு மனமுடைந்து திரிந்த நேரம் அது. அதே ஒன்பதாம் வகுப்பில் கணக்குப் பாடம் நடத்திய ஆசிரியரின் அறிவுரையால் ஒரு டுட்டோரியலில் சேர்க்கப்பட்டு ஒரு வழியாக பத்தாம் வகுப்பை முடித்தேன். [மறுபடியும் என் முகத்திலெல்லாம் விழிக்க வேண்டுமா என்ற சலிப்பில் கூட இப்படி ஒரு ஆலோசணையை வழங்கியிருக்கலாம். எவர் கண்டார்?]

ஆண்டு முழுமைக்கும் சேர்த்து பொதுத் தேர்வுகளில் வந்து சேர்ந்தது இம்சை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் காட்டப்படும் சலுகைகளுக்கும், தனித் தேர்வர்களிடம் காட்டப்படும் கெடுபிடிகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இருக்கும். பள்ளி மாணவர்களின் அறைகளுக்குள் நுழைகிற பறக்கும் படை போனதும் தெரியாமல் வந்ததும் தெரியாமல் வெளியேறிவிடும். அவர்களுக்கு இடையூறு நேராமலிருக்க சமயத்தில் பறக்கும் படையிலிருந்து ஒருவர் மட்டும் வகுப்பினுள் சென்று வருவார். அப்படியே தனித் தேர்வர்களின் நிலைமையையும் பார்த்துவிடுவோம்.

பறக்கும் படை தனித்தேர்வர்களின் அறைகளில் மட்டும் மொத்தமாகப் படையெடுக்கும். ஒவ்வொரு மாணவனையும் பாதாதி கேசம் சகல அவயங்களையும் தடவிப் பார்த்து சோதிக்கும். சோதனையில் திருப்தி அடையாவிட்டால் ஒரு சில மாணவர்களை கழிப்பறை வரை அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை செய்வார்கள். முழு உடல் பரிசோதனை என்பது ஆடைகளைக் களைந்து செய்யப்படுகிற சோதனை. அவ்விதமான சோதனை எனக்கு நடக்காததால் முழு உடல் பரிசோதனை எத்தகையது என்பது எனக்குத் தெரியாது. கொடுத்த மூண்று மணிநேரத்தில் இவ்விதமாகப் பதினைந்து நிமிடம் காலி.

தேர்வு முடிவுகளிலும் தனித்தேர்வர்கள் மாற்றாந்தாய்ப் போக்குடனேயே நடத்தப்படுவார்கள். என்னதான் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளி வந்துவிட்டாலும் மதிப்பெண் பட்டியலை கையளிப்பதில் பள்ளி மாணவர்களுக்கும் தனித்தேர்வர்களுக்கும் கால வித்தியாசம் தவறாமல் இருக்கும். பள்ளி மாணவர்களுக்குக் மதிப்பெண் பட்டியல் கொடுத்த பிறகு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குப் பிறகே தனித்தேர்வர்களுக்கு கொடுக்கப்படும். மற்றவர்கள் இதற்கு என்ன காரணம் கருதியிருந்தாலும் என் கண்களுக்குத் தனித்தேர்வர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையில் போட்டிக்கு வந்துவிடக் கூடாது என்கிற “நல்ல” [தெலுங்கு: நல்ல = கருப்பு] நோக்கம் மட்டுமே. தற்போது ஒரே நாளில் கொடுக்கப்படுவதாய்க் கேள்வி!

தாமதமாகவேணும் பட்டியலைக் கையில் வாங்கிய உடன் உறவினர் ஒருவர் பணிபுரிந்த இன்னொரு பள்ளிக்கூடத்தில் சேர்க்கைக்காகக் காத்திருப்பு ஆரம்பமானது. “டுட்டோரியலா, காமர்ஸ் வேணும்னா தற்றேன். ஏதோ தெரிஞ்சவங்களாச்சேன்னு தான் காமர்ஸ். மத்தவங்களுக்கெல்லாம் வொக்கேஷனல்தான் குடுக்கறோம்” என்று சொல்லப்பட “நாங்களும் அதுக்குத்தான் வந்தோம். நல்லதாப் போச்சு” என்று என் தகப்பனும் சிரித்து வைக்க, வந்த வேலை சுபம். பதினேழு மாணவர்களையும் நாண்கு மாணவிகளையும் உள்ளடக்கிய 11-ஜி பிரிவு அட்டகாசமாய்த் தொடங்கியது.

ஆனால் அந்த ஆசிரிய உறவினரால் அடுத்த இரண்டு ஆண்டுகளும் நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆசிரியரின் உறவினன் என்ற காரணத்தால் வகுப்பில் உள்ள பிற மாணவர்களால் ஒற்றனைப் போலவே பார்க்கப்பட்டேன். இதில் ஆசிரியர்களுக்குள் நிகழ்கிற கோஷ்டி மோதம்களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். உறவினரின் எதிர்கோஷ்டி ஆசிரியர்கள் ”விஜய்கோபால், போய் ஒரு டின்-கோக் வாங்கிட்டு வா”, “தேவர்ஸ்ல அரைப் பிளேட் பிரியாணி வாங்கிட்டு வா”, வெள்ளிக் கிழமை ராத்திரிக்கி ராக்ஃபோர்ட்ல ஒரு டிக்கெட் புக் பண்ணிட்டு வா” என்பது போன்ற [பள்ளிப் ப்யூனைக் கூட அனுப்பத்தகாத தனிப்பட்ட வேலைகள்] இம்சைகளுக்கும் ஆளானேன்.

சில மாதங்கள் சென்று வகுப்புத் தலைவனாக இருந்தவன் ஆசிரியரின் கைப்பையை கப்போர்டில் வைக்கச் சென்றபோது அதிலிருந்து இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைக் கையாடிவிட்டான். [என்ன காரணமோ திருடிவிட்டான் என்று சொல்ல மனம் வரவில்லை. கோடிக் கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதியை செய்திகளில் காட்டும் போது “முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில்” என்று சொல்லுகிற வரை அவன் செய்ததைத் திருட்டு என்று கூற என்னால் முடியாது.] கையாடல் குற்றச்சாட்டின் பேரில் அவன் பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு நான் முன்னிறுத்தப்பட்டேன்.

இடையிடையே நடைபெறுகிற வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடித்ததைப் போட்டுக் கொடுக்காமல் இருந்த காரணத்துக்காக இதர மாணவர்களின் ஆதரவுடன் வகுப்புத் தலைவன் பதவி வந்து சேர்ந்தது. முன்பு கோக் வாங்குவது, பிரியாணி வாங்குவது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற வேலைகளை நான் இல்லாத நேரத்தில் அலுவலக உதவியாளர் குமார் செய்து கொண்டிருந்தார். புதிய பதவியேற்புக்குப் பிறகு இவ்வேலைகளை அதிகாரப் பூர்வமாக செய்யவேண்டிய கடமை எனதாகியது.

இதல்லாமல் யானைக்கால் ஒழிப்பு, எய்ட்ஸ் கட்டுப்பாடு, சுகாதாரப் பிரச்சாரம், ஆளும்கட்சியைக் குற்றம் சாட்டிய ஜெயின் கமிஷன் அறிக்கைக்கு கண்டணம் தெரிவித்தல் ஆகிய காரணங்களுக்காக வகுப்பில் உள்ள மற்ற பதினாறு மாணவர்களையும் தலைமையேற்று ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்லுதல், திரும்ப அழைத்து வருதல், தலைக்கணக்கெடுத்தல் போன்ற பணிகளும் உபரியாக வந்து சேர்ந்தது.

ஒருமுறை மாதாந்திரத் தேர்வு ஒன்றில் +2 மாணவர் ஒருவர் அவரது பிட்டை என் பாக்கெட்டில் வைத்திருக்கச் சொன்னார். பயத்தில் நானும் வாங்கி வைத்துக் கொண்டேன். தேர்வின் நடுவே அதை எடுத்து அவரது பாக்கெட்டில் வைத்திருந்து பார்த்து எழுதிவிட்டு மீண்டும் என் பாக்கெட்டில் போட்டுவிட்டார். எழுதி முடிந்தாகிவிட்டது என்று தெரிந்ததும் அதை வெளியே எடுத்து கண்ணால் கூடப் பார்க்காமல் கிழித்துப் போட்டுவிட்டேன். நான் கிழித்து எறிந்ததை ஆசிரியர் பார்த்துவிட்டு அருகில் வந்தார். ”பணத் திமிருடா நாயே” என்று காது மேலேயே அரை விழுந்தது. அதன் பிறகுதான் புரிந்தது +2 அண்ணாச்சி என் பாக்கெட்டில் அவரது பிட்டைப் போடுவதற்குப் பதிலாக பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் தவறுதலாகப் போட்டுவிட்டார். நான் அது தெரியாமல் அந்த நோட்டைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்கிறேன்.

நிலைமை இவ்வாறாக இருக்கையில் பதினோறாம் வகுப்பில் ஆண்டு இறுதித் தேர்வு வந்து சேர்ந்தது. படிக்க ஏதுவான சூழல் வீட்டில் இல்லாததால் வழக்கமாகத் தஞ்சைப் பெரியகோயில் மதிலைச் சுற்றியுள்ள புல் வெளியில் அமர்ந்து படிப்பது வழக்கம். எங்கள் வகுப்பிலிருந்த அரைச்சாமியார் மாணவன் ஒருவனும் என்னுடன் சேர்ந்துகொள்வதாகச் சொன்னான். அவ்வாறு சேர்த்துக் கொள்வதில் விருப்பம் இல்லாவிட்டாலும், நான் ஃபெயிலாகி அவன் பாசானால் பின்னால் நம் நிலைமை பரிதாபகரமாகிவிடுமே என்ற பயத்தில் ஒப்புக் கொண்டேன்.

ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் இரண்டு மூண்று விடுமுறை கொடுத்து தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் வழக்கம் போல் கோயில் புல்வெளியில் படிக்கப் புறப்பட்டபோது அரைச்சாமியாரும் ஒட்டிக் கொண்டார். அரைச்சாமியார் எப்படிப்பட்டவர் என்றால் ஏற்கெனவே +1ல் இரண்டு முறை தோல்வியடைந்து படித்து எங்கள் வகுப்புக்கு வந்தவர். ”வெங்காயம் பூண்டு அறவே சேக்காதே, உப்பு காரம் புளி கம்மியா சாப்பிடு அப்பத்தான் நீ உருப்படுவே என்று எல்லோருக்கும் இலவசமாகவே அறிவுரை சொல்லக் கூடியவர்.

அன்னைக்குப் பாத்து அவரும் என்னுடன் கம்பைன் ஸ்டடிக்கு வந்தார். புல்வெளியில் அமர்ந்து புத்தகங்களை விரித்து வைத்ததும் அவர் ஒரு சொற்பொழிவை ஆரம்பித்தார். பெரியகோயில் கோபுரத்தைப் பற்றிய கதை. கதையின் இறுதியில் அவர் சொன்ன நீதி, “கோபுரத்தை எக்காரணம் கொண்டும் அண்ணாந்து பாத்துவிடாதே” என்பதே. ஏனெனில் கோபுரத்தைப் பார்த்த ராஜீவ் காந்தியும் ஏணைய பிரபலங்களும் மண்டையைப் போட்டு விட்டார்களாம்.

எனக்கு ஒரே மாதிரி உட்டார்ந்து படித்து கழுத்தெல்லாம் வலியெடுக்கையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்து கை காலையெல்லாம் நீட்டி நிமிர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொள்வேன். அப்போதெல்லாம், கோபுரம் லேசாகக் கண்ணில் பட்டுவிடும். இதற்கு அந்த செமி-சாமியார் “சொல்றத கேக்க மாட்டேங்குற, அப்புறம் தேறுறது கஷ்டமாகிடும்” என்று அவ்வப்போது சாபமும் விடும்.

தேர்வு முடிவுகள் வந்த போது நான் பார்டரில் பாஸ், (682/1200) செமி-சாமியார் மூண்று பாடங்களில் அவுட். இறுதியாக பதினேழு மாணவர்களில் எட்டு பேர் ஃபெயில். நாலு மாணவிகளில் ஒருவர் ஃபெயிலாகி பெற்றோரின் வேண்டுகோளின் பேரில் அவரையும் பாசாக்கினார்கள். இருபத்தியோரு மாணாக்கர்கள் இருந்த வகுப்பு பதிமூண்றாகச் சுருங்கியது.

+2 என்பதால் முந்தைய ஆண்டு போல ஊர்வலங்களுக்கும், பேரணிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஆசிரியர்கள் நூறு சதவிகிதத் தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளி முடிந்தும் இரண்டு மணிநேரம் உட்கார வைத்து நோகடித்தனர். காமர்சுக்கு ஸ்பெஷல் கிளாசா என்று அறிவியல் கணிதப் பிரிவு மாணவர்களின் ஏளனத்துக்கும் ஆளானோம்.

அந்த நாளும் வந்தது. மாதாந்திரத் தேர்வுகளில் சில பாடங்களில் ஃபெயிலாகியிருந்த போதும் ஹால் டிக்கெட் புகைப்படத்துக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தேன். ஹால் டிக்கெட்டைக் கையளிக்கையில் வரலாற்று ஆசிரியர் “நீ மட்டும் தான் சிரிச்ச மாதிரி போஸ் குடுத்துருக்கெடா. மத்தவன்லாம் ஏதோ இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிருக்கானுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இதற்கு யார் எவர் என்று தெரிந்துகொள்ள முடியாத வகையில் குனிய வைத்து மாணாவாரியாக அடி கொடுத்தார்கள் சக மாணவர்கள்.

அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு நாலைந்து பாடங்களில் இண்டெர்னல் மதிப்பெண்கள் உண்டு. ஆனால் காமர்சு பிரிவில் எங்களுக்குத் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மட்டுமே இண்டெர்னல் மதிப்பெண்கள். அதனால் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களிடம் முடிந்த அளவு மரியாதையுடன் இருந்தோம். குறிப்பாகத் தமிழாசிரியர், கோபம் வந்தால் செந்தமிழில் அர்ச்சிப்பார். எனக்கு அவர் வைத்த “ஆட்டோ டயரு” என்ற பெயர் தவிர்த்து மற்ற அணைவரையும் செந்தமிழிலேயே திட்டியவர். நரம்பு புடைத்தாலும் சகலத்தையும் மூடிக் கொண்டு அவரிடமிருந்து இருபது மதிபெண்களை முழுமையாக வாங்கியது மிகப் பெரிய சாதனை. வகுப்பின் பதிமூண்று பேரும் அந்தச் சாதனையைச் செய்தோம்.

ஹால் டிக்கெட் கொடுக்கும் முன்பு வகுப்பறையில் உடைந்து போன பொருட்களுக்கு ப்ரேக்கேஜ் கட்டணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் இருபது ரூபாய். அதை வசூலிக்கும் பொறுப்பும் என் தலையில் விழுந்தது. ஸ்டடீ ஹாலிடேஸ் ஆரம்பமாகிவிட்டதால் ஒவ்வொரு மாணவனின் வீட்டுக்கும் நேரில் சென்று வசூலிக்க வேண்டும். ஆறேழு நாள் அலைச்சலுக்குப் பிறகு மொத்தக் காசும் வசூலாகியது. அன்றே ஆசிரியரிடம் ஒப்படைத்து மறுநாள் ஹால்டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்னால் தலைமை ஆசிரியரின் அறிவுரையைக் கேட்பதற்காகவே மாணவர்களை வரவழைத்தனர். வழக்கம் போல் பிரேயர் முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்தின் மைய மண்டபத்திலும், மாணவிகள் மரத்தடியிலும் குழுமினர். முதலில் மாணவர்களிடம் பேசத் தொடங்கினார் தலைமையாசிரியர்.

“பாசாகுறியோ ஃபெயிலாகுறியோ, இனி நீ நெனைச்சாக் கூட உனக்குப் பள்ளிக்கூட வாழ்க்கைன்னு ஒன்னு கெடைக்காது. ஒழுங்கா பரிச்சை எழுதி எல்லாரும் பாசாகிப் போயிடுங்க. இதுவரைக்கும் எப்படியோ, ஆனா பொதுத் தேர்வுல உங்க திறமைகளையெல்லாம் நல்ல விதமாக் காட்டுங்க. வேற விதமா காட்டுனாலும் நாங்க ஒன்னும் கண்டுக்க மாட்டோம். ஆனா பள்ளிக்கூடத்துப் பேரு கெட்டுப் போற மாதிரி ஒரு சூழ்நிலை வந்த நாங்க உங்களக் காப்பாத்துவோம்னு மாத்திரம் எதிர்பாக்காதீங்க” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மொழிப்பாடங்களில் தேர்வுகள் முடிந்து அன்று கணக்குப் பதிவியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்காக எனது விடைத்தாள் வகுப்பு முழுவதும் சுற்றியது. தேர்வு முடிய முக்கால் மணி நேரமே இருந்த நிலையில் என் பேப்பர் என் கைக்குத் திரும்பி வரவில்லை. கண்ணீர் விட்டு அழுத பிறகு இரண்டு பெஞ்ச்சுக்கு அப்பால் இருந்த மாணவன் பாவம் பார்த்து திருப்பிக் கொடுத்தான்.

கடைசித் தேர்வாக வரலாற்றுத் தேர்வு. வரைபடம் குறித்தலும் காலக்கோடு வரைதலும் கொஞ்சம் கடினமான வேலை. வரைபடம் கூடத் தோராயமாக ஒரு புள்ளியைக் குத்தி ஊர் பெயரை எழுதினால் மதிப்பெண் வந்துவிடும். ஆனால் காலக்கோடு வரைவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது என்பது மிகச்சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். பல சம்பவங்களைக் குறித்து சரியாகத் தெரிந்திருந்தாலும் நடைபெற்ற ஆண்டுகள் ஞாபகம் வரவில்லை. இறுதியாக இன்னொரு மாணவன் தன் பேப்பரைக் கொடுக்கத் தயாராக இருந்தும் வகுப்புக்கு வெளியே தலைமை ஆசிரியர் நின்றதால் வாங்கத் தயங்கியபடி உட்கார்ந்திருந்தேன்.

நெருங்கி வந்த தலைமை ஆசிரியர் என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே தட்டி, “ஒரு ஒரு மார்க்கும் உன் எதிர்காலம்டா. அவந்தான் குடுக்க ரெடியா இருக்கான்ல, வாங்கி எழுதிட்டுப் போவியா” என்று கிசுகிசுத்துவிட்டு நகர்ந்து சென்றார். பச்சைக் கொடி சிக்னல் கிடைத்த சந்தோஷத்தில் மொத்த வகுப்பும் கடைசி இருபத்தைந்து நிமிடம் பரபரத்தது. ஆசிரியர் கண்ணெதிரிலேயே பேப்பர்கள் மாறின, உரியவர்களுக்குத் திரும்பி வந்தன. பதிமூண்று பேரில் ஒன்பது பேர் பாஸ். மூண்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஃபெயில். அந்த மாணவி அடுத்த ஆண்டிலேயே இல்லறத்தில் இனிதே கால்பதித்தாள். மூவரில் ஒருவர் மீண்டும் படித்து அடுத்த அக்டோபரில் +2 பாசானார். இன்னொருவர், ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, பின்னர் சொந்தமாக மளிகைக் கடை தொடங்கி இன்று ஒரு வெற்றிகரமான சிறு வியாபாரி ஆகியிருக்கிறார். இன்னொருவர் ஐடிஐ பயிற்சி முடித்து லேத் நடத்துவதாகக் கேள்வி. இந்த இடத்தில் படத்துக்கு ”நன்றி” என்று எண்டு கார்ட் போட்டால் பொருத்தமாக இருக்கும்.

ஆசிரியர் ஒருவர் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக என்னை அடித்துத் துவைத்த காரணத்தால் எட்டாம் வகுப்புடன் படிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததும், மீண்டும் இன்னொரு ஆசிரியரின் கனிவான அணுகுமுறையினால் தொடர்ந்து படித்ததும், குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆனதும் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

என் பள்ளிப் படிப்புக் காலத்தில் பெரும்பாலாண [எல்லா ஆசிரியர்களும் என்று சொல்லவில்லை] ஆசிரியர்கள் மாணவர்களைத் தங்கள் பண்ணை அடிமைகள் போல நடத்தியதும் வலியுடன் கூடிய நினைவுகளாக என் ஞாபகத்தில் படிந்திருக்கிறது. தனிப் பயிற்ச்சிக் கட்டணத்துக்காக மாணவர்களைத் தேர்வெழுத விடாமல் செய்த எங்கள் ஊர் ஆசிரியர் ஒருவரின் பெயர் சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட போது, ஊரும் கல்வி முறையும் இன்னும் மாறிவிடவில்லை என்ற வேதனை கலந்த முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

பள்ளிக் கல்வி பெறாதவர்களும், பெறமுடியாதவர்களும் கூட மனிதர்கள் தான், அவர்களுக்கும் அறிவிருக்கிறது என்பதையும் ஒரு நாள் கற்றுக்கொண்டேன். பேருந்து நிலையத்தில் கடலை விற்கும் பையன் ஒருவனிடம் பெற்ற ஞானம் இது. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொன்ன கற்பனை கீதையை விடவும் வீரியமிக்கதாய் இருந்தது. “தம்பி ஒரு வேஸ்ட் பேப்பர் இருந்தா குடேன்” என்று கேட்ட போது அவனிடமிருந்து வந்த பதில் “உலகத்துல எதுவுமே வேஸ்ட் இல்லைன்னே. இந்தப் பேப்பர் என்கிட்ட இருக்க வரைக்கும், கடலைக்கு பொட்டலம் கட்ட உதவுது. உங்கிட்ட வந்தா வேற எதுக்குனா பிரயோஜனமாகும். திடீர்னு எதையும் வேஸ்ட்டுன்னு முடிவு கட்டிடாதண்ணே” என்று ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.

இத்தறுவாயில் எனக்கு முதல் வகுப்பில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி., என்ற ஆடம்பரங்களெல்லாம் என் வாழ்வில் இடம்பெறவில்லை) தமிழ்ப் பாடம் நடத்திய ஆங்கிலோ இந்தியரான கேத்தரின் மிஸ்சுக்கும் அந்தக் கடலை விற்ற பையனுக்கும் இப்பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan