இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 14 March, 2011

”எந்திரன்” - தாமதமாய் ஒரு திரை விமர்சனம்

ரெட் ஜெயண்ட் காரர்கள் “குருவி” படத்தைத் தயாரித்த போதே திரையரங்குகளுக்குச் சென்று எந்த தமிழ்ப் படங்களையும் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தாயிற்று. பிறந்த போதே வலது உள்ளங்கையில் ப்ளாகர் ஐடியுடனும் இடது உள்ளங்கையில் பாஸ் வேர்டுடனும் பிறந்துவிட்ட காரணத்தால், கை துறுதுறுக்கையில் அவ்வப்போது திரை விமர்சனம் எழுத வேண்டியிருக்கிறது. அதனால் முற்றாகத் தமிழ் சினிமாவையே புறக்கணிப்பது என்ற முதிர்ச்சி இன்னும் என்னை வந்தடையவில்லை.

வழக்கம் போல் நேற்றும் (12-3-2011) துவாரகா தூங்காமல் அடம் பிடித்தாள். சனிக்கிழமை இரவாகப்பட்டதால் அதை ஒரு குற்றமாகக் கருத இடமில்லை. ஏதாவது படம் பார்ப்பது என்று முடிவாயிற்று. கடந்த முறை சார்மினார் எக்ஸ்பிரசில் வாங்கிய “எந்திரன்” பார்க்கப்படாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தூசி தட்டி ப்ளேயரில் ஓட விட்டேன். துவாரகா திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்றேரக் குறைய எனக்கும் துவாரகாவுக்குமான வயது வித்தியாசமுள்ள இருவர் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். நடுநிசி நாய்கள் படத்தையே மனைவியையும் குழந்தையையும் தூங்கவைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு பார்த்த எனக்கு எந்திரனை மகளுடன் அமர்ந்து பார்க்க சற்றே அருவருப்பாகத் தான் இருந்தது. ஒரே ஆறுதல், 21 மாதம் வயதுடைய துவாரகாவால் இந்தப் படத்தைக் காட்சிகளாகப் பார்க்க முடியுமே தவிர கதையை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

இதையே ஜீரணிக்க முடியாத எனக்கு “ராணா” படத்தில் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோணே நடிக்கிறாராம்! ராணாவைப் பார்த்த பிறகு நடுநிசி நாய்கள் குறித்த எனது அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ரஜினி படத்துக் கதாநாயகிகள் எப்போதுமே விருந்தில் ஊறுகாய் போலத்தான். ஒரு மாற்றத்துக்காக ஸ்ட்ராபெர்ரியில் ஊறுகாய் போடுவதற்கு ஒப்பானதுதான் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கியது. கதையல்ல நிஜம் லட்சுமி மகள் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டாலும் எந்த ரசிகனும் ஏன் என்று கேட்கப் போவதில்லை என்பதால் நானும் அடுத்த விஷயத்துக்கு நகருகிறேன்.

படத்துக்கு வில்லனை ஹாலிவுட்டிலிருந்து அழைத்து வந்தார்களாம். கே.எஸ். ரவிகுமார் படங்களில் வருகிற பஞ்சாயத்துக் காட்சிகளில் நாலாவது வரிசையில் நிற்பதற்குக் கூட லாயக்கில்லாத மூஞ்சி. இதுக்கு செலவோட செலவா ரகுவரனையே கிராபிக்சில் கொண்டு வந்திருக்கலாம். கொஞ்சமாச்சும் மனசு ஆறுதலடைஞ்சிருக்கும்.

மனதில் நிற்கிற கதாபாத்திரங்கள் என்று சொல்வதானால் ரஜினியின் பெற்றோராக நடித்த டெல்லி குமார் மற்றும் ரேவதி சங்கரன் ஆகியோரைத் தான் சொல்ல வேண்டும். பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த அனுபவம், இங்கே கை கொடுத்திருக்கிறது. ஹாட்பாக்சைத் தூக்கிக் கொண்டு வந்து “ரோபோ, நீயும் ரெண்டு இட்லி சாப்பிடு” என்று சொல்லுகிற காட்சியில் ரேவதி சங்கரன் ராக்ஸ்.

வயசான சயிண்டிஸ்ட்டுக்கும் ”33 வயது” டீன் ஏஜ் மெடிகல் ஸ்டூடண்ட்டுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தைக் ”கலாச்சார பேரழிவின் உச்சம்” என்று தான் சொல்ல வேண்டும். :) சில பேர் சினிமாவை சினிமாவாகத் தான் பார்க்கணும் என்று முன்பே பல பதிவுகளில் சொல்லியிருப்பதால் நானும் இதை சினிமாவாகவே பார்த்தேன். அப்போதும் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த “33 வயது” டீன் ஏஜ் கதாநாயகி அந்த ரோபோவின் காதலையாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம். டிவிடி வாங்குன காசு வீணாப் போகலைன்னு ஆறுதல் பட்டிருப்பேன்.

மற்றபடி, கலைஞானியின் தத்துவார்த்த வாந்திகளைவிடவும், இது போன்ற படங்களால் ஆபத்து அதிகமில்லை என்பதால் நூற்றுக்கு 3.5 மதிப்பெண்கள் போட்டு ஃபெயிலாக்குகிறேன். இந்தப் பதிவைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் யாராவது வருத்தப்பட்டால் பின்னூட்டம் அல்லது மின்மடல் வாயிலாகத் தெரிவிக்கவும். தூக்கு தண்டனைத் தீர்ப்பு எழுதிய பேனாவை உடைப்பது போல இந்தப் பதிவை எழுதிய கீ போர்டை உடைத்துப் போட்டுவிட்டு புதியது வாங்கிக் கொள்கிறேன்.

துளி கூட அரசியல் கலக்காமல் எழுதப் பட்ட பதிவு இது. காரணம் இதில் மாறன் பிரதர்ஸ் பெயரை ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan