இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 28 June, 2010

சென்னைத் தமிழ் - சில சிந்தனைகள்

சமீபத்தில் குமுதம் நாளேடு முதலமைச்சரைப் பேட்டி கண்டு வெளியிட்டது. அதிலே முதலமைச்சரிடம் ஒரு கேள்வி.
கேள்வி: அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா?
பதில்: தமிழ்த் தாயின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை!
சென்னைத் தமிழர்களின் பேச்சு வழக்கு முதல்வருக்கு விரும்பத் தகாததாக இருக்கலாம். ஆனாலும் அது தமிழ்த் தாயின் (எனக்குத் தமிழ்த் தாய் என்ற கருத்துருவாக்கமே ஏற்புடையதல்ல) முகத்தில் குத்தப்பட்ட கரும்புள்ளி செம்புள்ளி என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. [இதைக் குறித்த எனது கருத்துச் சுருக்கத்தை இறுதிப் பத்தியில் சொல்லியிருக்கிறேன்.]

காலம் காலமாக வேறு எந்த வட்டார வழக்கையும் விட அதிகமாகப் பழிக்கப்படுவது சென்னைத் தமிழாகத் தான் இருந்துவருகிறது. கொங்கு வட்டாரத் தமிழோ அல்லது திருநெல்வேலி, மதுரை, தஞ்சை வட்டாரத் தமிழோ இந்த அளவுக்கு விமர்சனத்துக்கு ஆளானதில்லை.
சென்னையில், திருவல்லிக்கேணியில் பிறந்தவன் என்ற வகையில் எனக்கு முதல் முதலில் அறிமுகமாகிய என் தாய்மொழியின் வடிவம் சென்னைத் தமிழ். அவரவருக்கு அவரவர் தாய் மொழி சிறப்பானது என்பது எத்தனை உண்மையோ அதே அளவுக்கு அவரவர் வட்டார வழக்கும் சிறப்பானதே. மற்ற எந்த வட்டார வழக்கும் இந்த அளவுக்கு இழித்துரைக்கப் படாத நிலையில் சென்னைத் தமிழுக்கு மட்டும் எதற்கு இந்த நிலை?

வைரமுத்து ஒருமுறை தன் மேடைப் பேச்சில் அவருடைய மதுரை வட்டார வழக்குச் சொல் ஒன்றிற்கான விளக்கத்தைச் சொன்னார். “தம்ளர பொத்துனாப்புல வை” என்ற வாக்கியத்தில் “பொத்துனாப்புல” என்ற சொல்லுக்கு விளக்கம் சொன்னார். வெண்கலத் தம்ளரை இயல்பாக மேஜையிலோ தரையிலோ வைக்கையில் லேசான சத்தமாவது எழும்பும். ஆனால் சத்தம் எதுவும் எழுப்பாமல் வை என்பதற்கு “பொத்துனாப்புல வை” என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அதற்கான வேர்ச்சொல்லையும் அப்போதே சொன்னார். “போத்துனாப்புல வை” என்று சொல்வது தான் பொத்துனாப்புல வை என்று மருவியிருக்கிறது. எத்தனை சிறப்பான விளக்கம். போர்வையைப் போத்தினால் சத்தமா வரும்?

ஒவ்வொரு வட்டார வழக்கும் கொண்டாடப் பட ஆயிரம் காரணம் இருக்குமானால் சென்னைத் தமிழுக்கு ஒரு நூறு காரணங்களாவது தேறாதா? வட்டார வழக்கு என்பது அந்தந்த வட்டாரத்தில் வாழுகிற உழைக்கும் மக்கள் பேசிய மொழி. இதில் சென்னையைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்கள் எந்த வகையில் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள்?
“வலிச்சாந்துரு” என்ற சென்னை வழக்குச் சொல் ஒரு தூய தமிழ்ச் சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இழுத்துவா என்ற சொல் சென்னை வழக்கில் “வலிச்சா” என்று மாறுகிறது. துடுப்பு வலித்தல், கயிறு வலித்தல், பீடி வலித்தல் போன்றவை எல்லாம் இழுத்தல் என்ற பொருளுடனேயே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் சீறாப்புராணத்தில் “மானுக்குப் பிணை நின்ற” படலத்தில் இந்த சொல் இதே பொருளுடன் பயன்பட்டிருக்கிறது.

இன்னும் சிறப்பான பழந்தமிழ் வார்த்தைகள் கூட சென்னைத் தமிழில் இயல்பாகக் காணக் கிடைக்கிறது. “அண்டை வீடு” “அண்டை மாநிலம்” போன்றவை இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் காணக் கிடைக்கிற சொற்கள். இந்த சொல்லைப் பெரிய படிப்போ, கல்வியறிவோ இல்லாத சென்னையின் ஆதித் தமிழன் தான் இன்றும் புழங்கி வருகிறான். “வூட்டாண்ட” “வாராவதியாண்ட” “அண்ணாண்ட” “இண்ணாண்ட”. தமிழின் சிறப்பு பேசுகிற பலரும் இந்த மக்கள் பேசுகிறார்கள் என்ற காரணத்தாலேயே இந்த சொற்களை எல்லாம் பயன்படுத்துவதில்லை.

தமிழுக்குச் சிறப்பு என்று சொல்லப் படுகிற “ழ”கரத்தை வேறு எந்த வட்டாரத்துத் தமிழர்களை விடவும் இப்போதும் சென்னை மக்கள் தான் உச்சரிப்பு சுத்தமாகச் சொல்கிறார்கள். “ஈழ்த்துகினு (இஸ்துகினு என்ற வார்த்தையுடன் இந்த சொல்லும் புழங்கி வருகிறது) பூட்டானா” “ஏழ்ரூபாடா” போன்ற பதங்கள் சென்னை வழக்கில் சொல்லப் படுகிறவையாக இருந்தாலும் அந்த சிறப்பு “ழ”கரத்தை மற்ற எவரையும் விட அழுத்தத்தோடும் சுத்தமாகவும் உச்சரிக்கவில்லையா சென்னை மக்கள்?

”இதப் பாருடா” “இதப் பாரேன்” போன்ற பதங்கள் சென்னை சென்னை வழக்கில் “தோடா” என்று சுருங்கிவிடுகிறது. இப்படிச் சுருக்குவது சரியா தவறா என்ற விவாதத்தை விடத் தேவையா இல்லையா என்பது தான் கவனிக்கப் பட வேண்டியது. சென்னையின் மக்கள் பெரும்பாலாணோர் அடித்தட்டு மக்களாக, உழைக்கும் மக்களாக, அன்றாடம் பொருள் ஈட்டி வாழுகிறவர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் ”பாருங்கள் ஸ்நேகிதரே, நான் அகஸ்மாத்தாக வாராவதி அருகில் வந்து கொண்டிருக்கையில்...” என்று நீட்டி முழக்குவதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அவன் தன் உழைப்புக்கும் பொருளீட்டுதலுக்குமான நேரத்துக்குப் பாதிப்பு வராமல் தான் அடுத்தவர்களுடன் உரையாட முடியும்.

“சோறு” என்ற சொல்லை எத்தனைத் தமிழர்கள் பயன்படுத்துகிறோம்? சாதம் தானே வழக்குத் தமிழாகிவிட்டது? அன்னம் என்ற சோற்றுக்கான ஆதித் தமிழ்ச் சொல்லை இன்றளவும் வழக்கத்திலே வைத்த்திருப்பவர்கள் தெலுங்கர்கள் அல்லவா? அதிகம் போனால் சோறு என்ற சொல்லை எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? “சோறு திங்கிறியா, பீ திங்கிறியா?” இந்த வசவு வாக்கியத்துக்கு மட்டும் தானே மேல்த் தட்டுத் தமிழர்கள் சோறு என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள்? சென்னைத் தமிழன் தான் “இன்னாது புளிசோறா தயிர்சோறா?” ”சோத்துக்கு உப்புப் போட்டுத்தானே துண்றே” என்று சொல்லி வருகிறான். இது தெரியாம அவ்வையார் பாட்டி வேற “சோழ நாடு சோறுடைத்து”ன்னு பாடிட்டுப் போயிடுச்சு. “சோழ நாடு ஸாதம் உடைத்துன்னு” பாடியிருந்தால் அந்தப் பாடல்கள் எல்லாம் அந்நியமாகியிருக்காதோ என்னவோ?

“சென்னைத் தமிழ் குறையே இல்லாததுன்னு சொல்றியா” என்று கேட்டால் வீம்புக்கு ஆமாம் என்று சொல்ல மாட்டேன். அது ஏன் குறையுடையதானது என்ற காரணங்கள் அல்லவா கண்டறிந்து களையப் பட வேண்டியவை? வட்டார வழக்கு என்பது என்ன? தங்களைச் சுற்றி வாழுகிற மக்கள் பேசுகிற மொழியின் பாதிப்பு தங்கள் மொழியில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தான் வட்டார வழக்கு. இரண்டு வழ்க்குகள் புழங்கி வருகிற பூகோளப் பகுதியில் காலப் போக்கில் மக்கள் தங்கள் வசதியைக் கருதி இரண்டுக்கும் பொதுவாக சொற்களை உச்சரிக்கத் தொடங்குவார்கள். அதுதான் வட்டார வழக்கு. அந்த மக்களிடமிருந்து தொலைவில் இருக்கிறவனுக்கு அது வேறுபட்டதாக, புதிதாகத் தெரிகிறது.

மற்ற வட்டாரங்களைப் பொறுத்தவரை அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் தமிழர்கள் என்பதால் அவர்களது வட்டார வழக்கினால் பெரிய சிரமம் எதுவும் இல்லை. மதுரைக் காரர்கள் “எம்பத்தி ஒன்னு” என்று சொல்வதை தஞ்சை மக்கள் “எம்ப்ளத்தி ஒன்னு” என்று சொல்வார்கள். ஆனால் இரண்டையும் கேட்கிறவர்கள் பெரும்பாலும் அதை 81 என்றே புரிந்து கொள்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் சென்னையைச் சுற்யிருந்த பூகோளப் பகுதிகள் என்னென்ன? மேற்கு மற்றும் வடக்கே தெலுங்கு பேசுகிறவர்கள் அதிகம் வசித்த தற்போதைய ஆந்திரப் பகுதி. கிழக்கே கடல், தெற்கே செங்கல்பட்டு, ஆற்காடு உள்ளிட்ட வடமத்திய தமிழக மாவட்டங்கள். தமிழக மாவட்டங்களின் நிலத் தொடர்பினால் தொன்று தொட்டுப் பேசிய தமிழ் நிலைத்திருந்தது. அதனுடன் தெலுங்கு பேசும் பூகோளப் பிரத்தேசத்தின் தொடர்பால் தெலுங்குச் சொற்கள் உள்ளே வந்தன. கடல் வழியாக வந்த ஆங்கிலேயர்களிடமிருந்தும் வடஇந்திய இஸ்லாமியர்களிடமிருந்தும் ஆங்கிலமும் உருதும் வந்து சேர்ந்தன.

ஆக தன்னைச் சுற்றியிருந்த மொழிகளின், பாதிப்புடன் பேசுவது மற்ற வட்டாரத்து மக்களின் பிழையில்லை எனில், சென்னைத் தமிழனின் பேச்சு வழக்கும் தவறில்லைதான். ஒரு காலத்தில் மக்கள் குளிக்கவும், குடிநீரெடுத்துச் செல்லவும் பயன்பட்ட கூவம் ஆறு இன்று மனிதப் பயன்பாட்டுக்கே லாயக்கில்லாமல் போய் விட்டது. அதைச் சுத்தப்படுத்தவும் 25 கோடி ரூபாயில் திட்டம் தீட்டுகிறவர்கள் ஏன் இந்த சென்னை வழக்கத் தமிழையும் செழுமைப் படுத்த பொருட் செலவு செய்து திட்டம் தீட்டக் கூடாது?

சாக்கடை அடைத்திருக்கிறது என்று இந்து நாளேட்டில் “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்குக் கடிதம் எழுதுவதை விட சட்டையை அவிழ்த்து வைத்துவிட்டு ஒரு குச்சியை எடுத்துக் குத்துவது எவ்வளவோ மேல்.

கருப்போ சிவப்போ ஏதோ ஒரு நிறத்தில் புருவங்களுக்கு மத்தியில் குத்துகிற புள்ளிதான் அழகான திலகமாகிறது. வாருங்கள் சென்னைப் பதிவர்களே, சென்னைத் தமிழின் விழுமியங்களையும், களையப் பட வேண்டிய குறைகளையும் பற்றி விவாதிப்போம்.


   

16 மறுமொழிகள்:

Unknown said...

இப்போ இன்னா கெட்டு போச்சி சாரே.. தலீவருக்கு கள்ள ஓட்டு குத்தி கெளிக்க வச்சொம்ல .. அதன்காட்டியும் பேசுறாரு கண்டி சொம்மா இல்ல

Ranjithkumar said...

//“சோழ நாடு சோறுடைத்து”ன்னு பாடிட்டுப் போயிடுச்சு. “சோழ நாடு ஸாதம் உடைத்துன்னு” பாடியிருந்தால் அந்தப் பாடல்கள் எல்லாம் அந்நியமாகியிருக்காதோ என்னவோ?//

சோழ நாட்டில் "சோறு" என்ற வார்த்தையை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம் நண்பரே... அவ்வை சொன்னது சரியே...

Anonymous said...

நீ இன்னான்னாமோ சொல்லிக்கிற - ஒன்னிமே பிரியலியே!

Unknown said...

வாங்க செந்தில்,

அந்த தலிவர் யாருன்னு சொன்னா மகிழ்ச்சி. பல தலிவர்கள் கள்ள ஓட்டு குத்தித் தான் ஜெயிக்கிறாங்க. அதனால் நீங்க சொல்ற தலிவர் யாருன்னு கண்டுபிடிக்கச் சிரமமாக இருக்கிறது.

ரஞ்சித் குமார்,

மீண்டும் ஒருமுறை மறுவாசிப்பு செய்து பார்த்தேன். மேல்த் தட்டுத் தமிழர்களைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறேன். நன்றாகக் கவனியுங்கள் “சோறு” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறவர்கள், சாதாரண உழைக்கும் மக்களாக மட்டுமே இருப்பார்கள்.

முரளிகண்ணன் said...

பட்டாசா இருக்கு தலீவா

தமிழ் மீரான் said...

மிக அருமையான பதிவு

Anonymous said...

மைனஸ் ஓட்டு குத்துன அன்பர் selvass அவர்களே, பதிவின் மீதான விமர்சனத்தைச் சொல்லிவிட்டு குத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதன் பொருட்டு இந்த - குத்து என்றும் தெரிந்து கொண்டிருப்போம். நன்றி.

கீர்த்திவாசன்.

Unknown said...

இதுக்கு மைனஸ் குத்தா! ஆச்சரியமாத்தான் இருக்கு. தகவலுக்கு நன்றி கீர்த்திவாசன்.

Uma said...

//சாக்கடை அடைத்திருக்கிறது என்று இந்து நாளேட்டில் “லெட்டர் டூ எடிட்டர்” பகுதிக்குக் கடிதம் எழுதுவதை விட சட்டையை அவிழ்த்து வைத்துவிட்டு ஒரு குச்சியை எடுத்துக் குத்துவது எவ்வளவோ மேல்//
:)

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்கோ. புதுசா கேக்கறவங்களுக்கு ஒரு மாதிரியா இருக்குமுங்கோ.

ராம்ஜி_யாஹூ said...

The simple reason is chennai was joined to Tamilnadu lately . Most of chennai tamil words are derived from telugu, hindhi, urdu.

கொல்லான் said...

நாட்டுல உங்களுக்கு வேற வேலையே இல்லையா? முதல்வர் சொன்ன அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். சென்னைத்தமிழ மட்டம் தட்டுனா, கோவைத்தமிழ் நல்லா இருக்குன்னு சொன்ன மாதிரி. கோவைல ஓட்டு வாங்க வேண்டாமா?

Unknown said...

முனைவர் ஐயா, கொங்குத் தமிழ் சங்கநாதம் வாசிக்குதுங்க உங்க பதிவுல... கொங்குத் தமிழ் பேசுறவங்களக் கண்டா நாளெல்லாம் பேசவிட்டுக் கேக்கலாம் போல இருக்கும். நெம்ப சந்தோசமுங்... அப்படியே நம்ம மாமா ஒருத்தரும் கொங்குத் தமிழ்நடையில நெறை எழுதுறாருங்.. ஒரு விசுக்கா அவரையும் படிச்சுப் பாத்துருங் http://lathananthpakkam.blogspot.com

(அவரு பதிவுல உங்க பின்னூட்டு எதையும் பாத்ததில்லீங். நீங்க ஏற்கெனவே படிச்சிருந்தா ஒங்க வீட்டுப் புள்ளையா நெனைச்சு மன்னிச்சு போடுங்)

உடன்பிறப்பு said...

தலைவர் சொன்னத கேட்டு பேஜாராயிட்டீங்க போல

Unknown said...

சென்னை செந்தமிழ் வாழ்க வளர்க.

vijay said...

negulu (nizal in and around salem)
angu enbathai thanjavurkaarargal anguttu endru sollumpothu annanda endru chennaikaarargal sollakoodatha, rickshawkaarargalum kuppathuvaasigalum pesuvathaal than chennai tamilai kevalamaga ninaikkirargal

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan