இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday, 11 April, 2011

என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி...

10,543வது ஆளாக இந்தப் பதிவின் தலைப்பைச் சொல்லிப் புலம்புகிற ஒருவரின் பதிவைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் பதிவு எதையாவது எழுதி வைக்க வேண்டுமே என்ற அரிப்பு நன்றாகத் தெரிகிறது. நல்ல சுவராகப் பார்த்து முதுகைத் தேய்துக் கொண்டால் நல்லது.

எனக்கு அப்பவே இந்தி கத்துக் குடுத்திருந்தா நான் இப்படி வெளி மாநிலத்தில் அல்லல் பட வேண்டியதிருக்காதே என்று புலம்புறதும், எங்கம்மா என்னைப் பெத்தப்பவே ஸ்கேட்டிங் ஷூவோட பெத்திருந்தா இன்னிய தேதிக்கு நான் ஸ்கேட்டிங்ல பெரிய ஆளாகிருப்பேன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை. அவ்வளவு அபத்தமா இருக்கு அந்தப் பதிவு.

இப்படிப் புலம்புகிறவர்கள் இன்னொன்றும் சொல்லுகிறார்கள், “இந்தி தெரிஞ்சிருந்தா தமிழ்நாடு தவிர்த்து எங்கே போனாலும் சமாளிக்கலாம்” என்று. இவுங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை செங்குன்றத்திலிருந்து 40 கி.மி.க்குப் பக்கமாகத் தொடங்குகிறது ஆந்திர எல்லை. அங்கே பெரும்பாலோருக்கு இந்தி தெரியாது. அப்படியே நூல் புடிச்சு கர்நூல், கடப்பா, காக்கிநாடா, பெஜவாடா, விசாகப்பட்டிணம் என்று மேல் நோக்கி நகர்ந்தால் அங்கும் இந்தி தெரியாதவர்கள் தான் அதிகம். இத்தனைக்கும் ஆந்திர அரசின் கல்வித் துறை, தெலுங்கு, ஆங்கிலம், உருது, இந்தி என்று நான்கு மொழிகளில் (மீடியம்) கல்வி கற்பிக்கிறது.

நைசாம் (நிஜாம்) ஆளுகையில் இருந்த 10 தெலங்கானா மாவட்டங்களில் ஐதராபாத், செகந்திராபாத் சுற்றுப் புறங்களில் மட்டும் பெரும்பாலானோர் சரளமாக இந்தி பேசுகிறார்கள். அதே சமயம் தெலுங்கிலும் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வட்டார வழக்குத் தெலுங்கில் சென்னைத் தமிழ் போலவே வேற்று மொழிச் சொற்கள் (உருது, இந்தி) அதிகம் கலந்து காணப்படும். ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியில் பேசுகிறார்கள் என்பதால் அந்த மாநிலம் முழுவதும் இந்தி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அபத்தம். இதை ஐதராபாத்தில் இருந்து கொண்டு சொல்கிறேன்.

இதற்கப்புறம் இன்னொன்றும் சொல்கிறார்கள், “எப்படி இருந்தாலும் இந்தியாவுல இந்தி பேசுறவுங்க தானே மெஜாரிட்டி” என்று. மெஜாரிட்டி மைனாரிட்டி கணக்கு சொல்றவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள். உலகத்திலேயே மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கிறவர்கள் சீனர்கள். அதாவது சீன மொழி தான் அதிகம் பேரால் பேசப்படும் மொழி. அப்படி இருக்கும் போது நம்ம ஊர் பள்ளிக் கூடங்களில் சீன மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா அல்லது இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? மெஜாரிட்டி மைனாரிட்டி பேசுகிற யாரும் இந்தப் புள்ளி விபரம் பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

இப்படி பல்வேறு வாதங்களால் மூக்குடை பட்ட பின்னர், “என்ன இருந்தாலும் நம்ம நாட்டோட தேசிய மொழியை இப்படி அவமானப்படுத்தலாமா” என்று முணகுவார்கள். இந்த “தேசிய மொழி” அஸ்திரத்தை பிரயோகித்ததும் ஏதோ கர்னனைச் சாய்த்துவிட்ட அர்ஜுனன் ரேஞ்சுக்கு ஒரு லுக்கு விடுவார்கள். “தேசிய மொழி” என்கிற சாணிப் புளுகை இன்னும் எத்தனை நாட்கள் அவிழ்த்து விடுவார்களோ தெரியவில்லை.

அவர்களெல்லாம் நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா மற்றும் நீதிபதி ஏ.எஸ். தவே ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு இந்தியை ஒரு அலுவல் மொழியாகப் பரிந்துரைக்கிறதே தவிர அதை ஒரு இடத்திலும் தேசிய மொழி என்று வலியுறுத்தவில்லை. அரசியலமைப்பானது அலுவல் மொழி என்கிற ஸ்தானத்தையும் இந்தி மொழிக்கு மட்டும் கொடுத்துவிட வில்லை. ஆங்கிலமும், அந்தந்த வட்டாரங்களில் பேசப்படும் மொழிகளும் கூட இந்தியாவின் அலுவல் மொழிகள் தான் என்று உறுதி செய்கிறது. அந்தத் தீர்ப்பின் விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் படிக்கலாம்: http://www.thehindu.com/news/national/article94695.ece

இவ்வளவும் எழுதியதால் நான் இந்தி படிக்காதவன், இந்தியை வெறுப்பவன் என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 3 ஆண்டுகள் இந்தி படித்தவன் தான், 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவன் தான். ஆனால், அந்த மூன்று ஆண்டுகளும் இந்தி வகுப்புகள் எனக்குப் பெரிய துன்புறுத்தலாகத் தான் இருந்தன. அ, ஆ, இ, ஈ என்று தமிழ் ஆசிரியையிடம் சொல்லும் போது அம், அஹ என்று முடித்து பல முறை அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கு வெளியே ஒரு இடத்திலும் பேசப் பயண்படாத அந்த மொழி இருபது ஆண்டுகளுக்கு எனக்கு எதற்கும் உதவவில்லை.

2007 ஏப்ரல் முதல் ஆந்திரத் தலைநகர் ஐதராபாதில் பணிபுரிந்து வருகிறேன். இந்த ஊருக்கு வருவதற்கு 60 நாட்கள் முன்பிருந்து புத்தகங்கள் வழியாக தெலுங்குச் சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் படித்துத் தெரிந்து கொண்டு தான் புறப்பட்டேன். இங்கே வந்த பிறகுதான் ஆந்திர மாநிலத்தின் பூகோளமும் பண்பாடும் புரிந்தது. ஐதராபாத் நகரில் இந்தி பேசுகிறவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இருபது ஆண்டுகள் பேசிப் பழகாமல் இருந்ததால் இந்தி மொழியில் பேசவும் பதிலளிக்கவும் திணறினேன். இந்த ஊரில் நான்காண்டுகளுக்கு மேல் வசித்தும் இந்தி இன்னும் சரளமாக வசப்படவில்லை. ஆனால் வெறும் எட்டே மாதத்தில் விரும்பிக் கற்ற தெலுங்கு இந்தியை விட அதிகம் கை கொடுக்கிறது.

இந்தி தெரியாதது ஒன்றும் உடல் ஊனம் கிடையாது, வருந்திப் புலம்புவதற்கு. அதே சமயம் இந்தி பேசுகிறவர்கள் பெரும்பாலாணோர் வசிக்கிற மாநிலங்களில் வேலைக்குப் போகும் போது உரிய தயாரிப்புகள் இல்லாமல் போனால் அது நம்முடைய தவறு. அதே போன்று தயாரிப்பில்லாமல் ஒரு வட இந்தியன் இங்கே வந்து “இந்தியில் பேசினால் எவனும் பதில் சொல்ல மாட்டேங்குறான்” என்று புலம்புவது அதைவிடத் தவறு. இதற்காக அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த விஷயங்களைக் குற்றம் சாட்டுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம், அயோக்கியத் தனம்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: இந்தியில் பொளந்து கட்டுகிற லாலுபிரசாத் யாதவுக்குத் தாய்மொழி இந்தி கிடையாது! பீகாரின் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையினர் பேசுவது போஜ்பூரி மொழி.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan