இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 25 November, 2010

ரெட்டி போய் செட்டி, செட்டி போய் மறுபடியும் ரெட்டி

ஆந்திராவில் ஒரு ச்சீ... த்தூ... ஜாதி பாலிடிக்ஸ்

ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஒய்.எஸ்.ஆர். உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஒய். எஸ். ஆர்.  அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதி ரோசையாவுக்கு முதல்வர் பதவியைத் தந்தது காங்கிரஸ் தலைமை.

பதவியேற்ற நாள் முதல் இவர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. 2009ம் ஆண்டின் இறுதியில் தெலங்கானா தனி மாநிலம் அமைய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை இவர் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. வெகு சமீபத்தில் இவரது உடல்நிலை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றது. மருத்துவமணையிலிருந்து திரும்பிய ரோசையா சோனியா காந்தி மீதான ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் விமர்சனத்துக்குக் கண்டணம் தெரிவித்து நடந்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதலமைச்சர் முன்னிலையிலேயே சுதர்சனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

மறைந்த ஒய்.எஸ். ஆர். மகன் ஜகன் மோகன் ரெட்டி தன் தந்தையின் மறைவை ஒட்டி அதிர்ச்சி தாளாமல் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகத் தொடங்கிய “ஓதார்ப்பு யாத்திரை”யும் (ஆறுதல் யாத்திரை) ரோசையாவுக்குத் தலைவலியும் திருகுவலியுமாக வந்து சேர்ந்தது.

தொடக்கத்தில் சிக்கலின்றி தான் போய்க் கொண்டிருந்தது ஓதார்ப்பு யாத்திரை. ஆறுதல் சொல்கிறேன் என்று தெலங்கானா பகுதி மாவட்டங்களில் ஜகன் என்றைக்குக் கால் வைத்தாரோ அன்றைக்குத் தொடங்கியது சிக்கல். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமே நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர் ராஜசேகர ரெட்டி. ராஜசேகர ரெட்டியை முன்னிறுத்தி நடக்கும் இந்த யாத்திரையைத் தெலங்கானா பகுதியில் நடத்த விட மாட்டோம் என்று முட்டுக் கட்டை போட்டனர் தெலங்கானா ஆதரவுத் தரப்பினர்.

இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் யாத்திரையைக் கைவிடுமாறு ஜகனைக் கேட்டுக் கொண்டது. யாத்திரையைக் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த ஜகன் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களைச் சந்திக்கத் தொடங்கினார். தற்போது கடப்பா தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகன் “சாக்‌ஷி” நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனரும் ஆவார்.

ஒவ்வொரு ஊரிலும் ஜகனைச் சந்திக்கக் கூடுகிற கூட்டம் தொலைக் காட்சியிலும் செய்தித் தாளிலும் நாள்தோறும் இடம்பெறுகிற அம்சங்களாகிவிட்டது. இதற்கிடையே சாக்‌ஷி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோனியா காந்தி குறித்த நிகழ்ச்சி ஒன்றும் பிரச்சனைக்குத் தோற்றுவாயாக அமைந்தது. சோனியா காந்தி குறித்து ஆந்திர அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்பது போன்ற அந்த நிகழ்ச்சியில் சில எதிர் கட்சித் தலைவர்கள் சோனியா மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். முதல் முறை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே பெரிய சர்ச்சை வெடித்தது. நிகழ்ச்சியில் தவறாக எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்த ஜகன் அதே நிகழ்ச்சியை பிரைம் டைமில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பச் செய்தார்.

காங்கிரஸ் இயக்கம் இதனால் எரிச்சலடைந்த போதிலும் ஜகன் மீது இதுவரை நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையையும் ரோசையா சரிவரக் கையாளவில்லை என்று மாநில காங்கிரஸ் பிரமுகர்களே கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததை அடுத்து முதலமைச்சர் ரோசையா டெல்லி சென்று தன் தரப்பை மேலிடத்திற்குத் தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தின் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் மேலிடத்திற்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. டெல்லியிலிருந்து ஊர் திரும்பிய ரோசையா யாரும் எதிர்பாராத நேரத்தில் நேற்று மதியம் தனது ராஜினாமா அறிவிப்பைப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

நேற்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உடல்நிலை மற்றும் வயது காரணமாகப் பதவி விலகுவதாகக் கூறிய ரோசையா, மிக உருக்கமாகப் அவர்களிடமிருந்து விடை பெற்றார். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனுக்குப் பூச்செண்டு கொடுத்த ரோசையா தனது ராஜினாமா கடித்தையும் சமர்ப்பித்தார்.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் கசிந்தன. நேற்று மாலை கூடி விவாதித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழு முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தற்போதைய ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராக உள்ள கிரண் குமார் ரெட்டி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பகல் 12:14 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ள இருக்கிறார் கிரண் குமார்.

ஓதார்ப்பு யாத்திரையால் ஜகன் மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்தவே மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருப்பது கண்கூடு.

இதனிடையே ”இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இதில் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தெலங்கானா தனி மாநிலத்திற்கான முன்னேற்பாடுகள் தடையின்றி நடைபெற்றாக வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் தெலங்கான ராஷ்ட்ர சமிதிக் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ்.

சித்தூர் மாவட்டம் பிலெரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஆந்திர மாநில வரலாற்றிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் (1960ம் ஆண்டு பிறந்தவர்). 1989ம் ஆண்டு முதல் அதே தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சட்டப் படிப்பு முடித்த இவர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள விளையாட்டு வீரரும் ஆவார்.

மொத்தத்தில் ஜாதி அரசியலின் சமீபத்திய உதாரணமாக அரங்கேறி முடிந்திருக்கிறது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றம்.

2 மறுமொழிகள்:

jaisankar jaganathan said...

தமிழ் நாட்டு அரசியலே எனக்கு புரியாது. இதுல ஆந்திராவா?

Anonymous said...

கோவாலு, இந்த ச்சீத் தூ தமிழ் நாட்டுல நடக்கலியா... விடு டென்சன் ஆவாத

மனோகர்

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan