இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Saturday 13 November, 2010

உஷாராணி சாம்பவி இன்னும் சில மர்மங்கள்

ஆந்திர மாநிலத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி குழந்தை சாம்பவியைப் பற்றியதுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். இளம் சாமியாரிணியாக வலம் வந்த சாம்பவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள்.

குழந்தை சாம்பவியின் காப்பாளராக சொல்லப்பட்டு வந்தவர்தான் உஷாராணி. இவர் பால சந்யாசினி சாம்பவி கலந்து கொள்ளுகிற நிகழ்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் தட்சணையாக வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப் படுகிறது.

சாம்பவியின் குழந்தைப் பருவத்தை காப்பாளர் உஷாராணி தனது பணத்தாசைக்காக வீணாக்குகிறார் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் வாதத்தை ஏற்று ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் குழந்தை சாம்பவியைப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதையடுத்து சாம்பவியும் உஷாராணியும் தலைமறைவாயினர். தற்போது கார்த்திகை மாத பூசைகள் செய்வதற்காக மீண்டும் ஆந்திர தலைநகர் ஐதராபாத்திற்கு குழந்தை சாம்பவியுடன் வந்துள்ளார் உஷாராணி. சாம்பவி இமாசலப் பிரதேசம் தர்மஸ்தலாவில் உள்ள பௌத்த சமயப் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகவும் ஆதாரப்பூர்வமற்ற செய்தி ஒன்று உலாவுகிறது.

தலைமறைவுக்குப் பிறது மீண்டும் ஐதராபாத் வந்துள்ள சாம்பவியை அங்குள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்த போது “பூமியில் ஏற்படுகிற பிரளயங்களுக்கெல்லாம் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பகையும் இரக்கமின்மையுமே காரணம்” என்று கூறினார். சாம்பவியிடம் அவரது பள்ளிப்படிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது அங்கிருந்த அர்ச்சகர் மைக்கில் மந்திரங்களைச் சொல்லியபடி யாகம் நடத்தத் தொடங்கிவிட்டார். நிருபர்களின் கேள்வி சாம்பவியின் காதில் விழுந்துவிடாத படிக்கு அங்கே சம்பவங்கள் அரங்கேறின. மைக்குகள் மற்றும் கேமராக்களைப் பறித்து சாம்பவியின் ஆதராவாளர்கள் செய்தியாளர்களைக் குழந்தையை நெருங்கவிடாத படிக்குச் சூழ்ந்து கொண்டனர். யார் இந்த சாம்பவி? யார் இந்த உஷாராணி?

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பாப்பட்லாவைச் சேர்ந்தவர் உஷாராணி. பதினான்கு வயதில் உஷாராணியை திவாகர் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். பின்னர் உஷாராணி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். அவருக்குப் பதினெட்டு வயது இருக்கும் போது கணவர் திவாகர் இறந்துவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உஷாராணியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். தாத்தா மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்ட உஷாராணியின் மகன் லலிதேந்திரநாத்திற்குத் தற்போது வயது முப்பது.

திருமணத்திற்கு முன்பு எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த உஷாராணி தனது இருபத்தி மூண்றாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தார். தனது இருபத்தைந்தாவது வயதில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக யோகா மற்றும் ஆன்மீகம் தொடர்பிலான நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.

கடந்த 1998ம் ஆண்டு யோகா பயிற்றுநர் சௌமியாச்சார்யாவின் அறிமுகம் கிடைக்கப் பெற்ற உஷாராணி 1999ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக குழந்தை சாம்பவியின் காப்பாளராக வளைய வந்தார் உஷாராணி.

தாயார் உஷாராணியுடன் சாம்பவி
[படம்: சாக்‌ஷி தெலுங்கு நாளிதழ்]
சாம்பவியைச் சட்ட விரோதமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த புகாரை அடுத்து சாம்பவி தன்னுடைய மகள் என்றும் தனக்கும் சௌமியாச்சார்யாவிற்கும் பிறந்த குழந்தை தான் சாம்பவி என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக திருப்பதி நகராட்சியால் வழங்கப்பட்ட சாம்பவியின் பிறப்புச் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சாம்பவியை அபூர்வ சக்திகள் பொருந்திய குழந்தை என்று சொல்லி வருகிறார் உஷாராணி. ஆனால் சாம்பவி கூறுகிற ஆன்மிகக் கருத்துக்கள் ”பொத்துலூரி வீரப்ரம்மம் ஸ்வாமி” என்பவர் எழுதிய “காலக்ஞானம்” என்ற நூலில் உள்ளவையே என்று கூறுகின்றனர் விபரமறிந்தோர். எட்டு வயதுக் குழந்தைக்கு இது போன்ற கருத்துக்களை மனப்பாடம் செய்ய வைப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

2012ம் ஆண்டு திபேத் சீனாவின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை அடையும் என்று ஆருடம் சொல்லி வருகிற சாம்பவியைக் குறித்து தலாய்லாமாவும் இது வரை மௌனம் சாதித்தே வருகிறார். டி.ஆர்.பி பசியோடு அலையும் ஊடகங்களுக்கு சாம்பவி நன்றாகவே தீனி போடுகிறாள். பூமியில் ஏற்படுகிற பிரளயங்கள், மக்களால் அறியப்பட்ட பிரபலங்களின் மரணம், போன்றவை குறித்து ஆங்கிலம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கேமெரா வெளிச்சத்துக்குப் பயப்படாமல் பேசுகிறாள் சாம்பவி.

இதே போல் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட பரணீதரன் என்கிற ஸ்ரீஹரி பரணீதர ஸ்வாமிகள் பற்றிய செய்திகள் நாளடைவில் மறைந்து போய்த் தற்போது சேலம் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகக் கேள்வி. வலுவான நெட்வொர்க்கில் சிக்கியிருக்கும் சாம்பவி இதிலிருந்து வெளிவருவது கடினம் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் சாம்பவி சிலருக்குக் கற்பக மரமாக விளங்குகிறாள் என்பதை விட வேறு சரியான வார்த்தைகளால் இதைப் பற்றிச் சொல்லிவிட முடியது!

3 மறுமொழிகள்:

சந்தனமுல்லை said...

எத்தன தடவை ஏமாந்தாலும்....:‍))

பரபரப்பை ஏற்படுத்தின‌ குட்டி சாமியாரும், மடிப்பாக்கம் சுருட்டு சாமியாரும் ஞாபகம் வராங்க.

Unknown said...

எல்லாம் பிரம்மம்.

Unknown said...

//எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார்.//
தலாய்லாமா ஏன் மௌனம் சாதிக்கிறார். குற்றம் நடந்தது என்ன்?

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan