இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Tuesday, 4 January, 2011

ரக்த சரித்திரம் - III

மணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள் இருவரைக் குறித்து ஏதும் நினைவில் ஓடவில்லை.

அலுவலகம் வந்தடைந்த போது உணவருந்துமிடத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைக் கூட கவனிக்கத் தோண்றவில்லை. என் இருக்கையில் அமர்ந்த போது தான் பின்னால் இருவர் சூரியைக் குறித்துப் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. சூரி தாக்கப்பட்டார் என்ற அளவில் தான் அப்போதைய பேச்சுக்கள் இருந்தன. இரவு 12:30க்கு வீட்டுக்கு வந்து சேர்ந்த போது தொலைக்காட்சி செய்திகள் சூரியின் மரணத்தை உறுதி செய்தது. சாக்‌ஷி தொலைக்காட்சியில் பிணையில் விடுதலையாகி வந்த பிறகு சூரியிடம் பேட்டி கண்ட காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ரக்த சரித்திரம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் முழுக்க முழுக்க சூரியைத் தூக்கிப் பிடிக்கிற விதமாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ரவி தரப்பினரின் கருத்து. தெரிந்தோ தெரியாமலோ ராம்கோபால்வர்மா இரு தரப்பிலும் புகைந்து கொண்டிருந்த பழி உணர்ச்சிக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது. சூரியின் கொலையில் ஆந்திர காங்கிரசின் பெரிய கைகளுக்குத் தொடர்பிருக்கிறது என்று தனி ஆவர்தனம் செய்கிறார் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர வரலாற்றில் பரிதாளா ரவியின் அத்தியாயம் முற்றுப் பெற்ற பிறகு சூரியின் தயவு காங்கிரசுக்குத் தேவையில்லாமல் போய்விட்ட நிலையில் ஜகன்மோகன் ரெட்டியின் கூற்று நிராகரிக்கத் தக்கதல்ல.

சீமாந்திர (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா) அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டம் அனந்தபூர். ரவி மற்றும் சூரியின் குடும்பங்களைக் கணக்கில் கொள்ளாவிடில் அனந்தபூர் சரித்திரம் நிறைவுபெறாது. ஜெகன்மோகன் தொடங்கவிருக்கும் தனிக்கட்சி இந்த சீமாந்திரப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை தெலங்கானா மாநிலம் அமைக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளிக்குமானால், சீமாந்திராவைக் தனது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்புகிறார் ஜெகன். இப்பகுதியின் முக்கிய மாவட்டமான அனந்தபூரில் செல்வாக்குப் பெறாவிடில் சீமாந்திராவில் கோலோச்சுவது நடவாத காரியம். பரிதாளா ரவியின் ஆதரவாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரி படுகொலை ஜெகன்மோகனுக்குப் பயன்படக்கூடும் என்றும் நம்பப்படுவதால் சந்தேகத்தின் நிழல் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் விழுகிறது.

ஜனவரி 6ம் நாள் தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஆந்திர மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவாதிக்க உள்ள நிலையில் நடந்தேறியுள்ள இந்தக் கொலைச் சம்பவம் சீமாந்திரப் பகுதியின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும் முழுவதுமாக நிராகரிப்பதற்கில்லை.

குழுவாதியாக (ஃபேக்‌ஷனிஸ்ட்) இருந்ததால் வாழ்க்கையின் முக்கியமான சந்தோஷங்கள் பலவற்றை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்த சூரி, இரு தரப்பிலும் பழிவாங்குதலுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிற எல்லோரும் தத்தமது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இரண்டு தரப்புக்கும் இடையே நடந்த உக்கிரமான மோதலில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகு சூரிக்கு வந்தது காலம் கடந்த ஞானோதயம் என்று தான் சொல்ல முடியும். எது எப்படியோ, பழிவாங்கும் படலத்தின் பற்களை நனைத்திருக்கும் சூரியின் குரல்வளை ரத்தம் “ரக்த சரித்திரம் - III" க்கு பேனா மையாகப் பயன்படக்கூடும்.

முற்றும் அல்லது தொடரும்

2 மறுமொழிகள்:

jaisankar jaganathan said...

//“ரக்த சரித்திரம் - III" க்கு பேனா மையாகப் பயன்படக்கூடும்//

இது மாதிரி நடக்கலைனா சந்தோஷம்

Anonymous said...

முற்றும் அல்லது தொடரும் என்று சொல்லியிருப்பதிலேயே தெரிகிறது இது இப்போது முடிகிற விஷயமல்ல என்று. ஏதோ ஒரு முடிவு ஏற்பட்டால் சரி.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan