இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Thursday, 6 January, 2011

தெலங்கானா - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை

”உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் உண்மையை ஒருநாள் நேர்கொண்டே ஆக வேண்டும்.” இந்த வாக்கியத்துடன் முடிகிறது ஸ்ரீகிருஷ்னா கமிட்டியின் அறிக்கை. பிப்ரவரி 2010ல் அமைக்கப் பெற்ற இந்த ஐந்து நபர் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா தலைமை வகித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலங்கானா தனி மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது. கடந்த வியாழனன்று உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை விபரத்தைப் படிப்பதற்காகத் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்ட போது மிக அதிகமானோர் இதே அறிக்கையைத் தரவிறக்கப் போராடிக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறும் 11 எம்பி அளவுள்ள கோப்பை தரவிறக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. என்.டி.டிவி, இந்து போன்ற பெரிய பத்திரிகைகளால் கூட அறிக்கையைத் தரவிறக்க முடியாமல் உடனடியாகச் செய்தியைக் கொடுத்தாக வேண்டிய அவசரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடுப்பையே செய்தியாகப் போட்டிருந்தனர்.

இப்படித் தான் இருக்கும் என்று ஊகிக்கக் கூடிய விதத்திலேயே வந்திருக்கிறது அறிக்கை. இந்தச் சிக்கலுக்கு ஆறு விதத்தில் தீர்வு காணலாம் என்று பரிந்துரைக்கிறது கமிட்டி.

1. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தற்போதைய ஆந்திரப் பிரதேசம்
2. ஆந்திரப் பிரதேசம் - தெலங்கானா = சீமாந்திரா (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா)
3. ஆந்திரப் பிரதேசம் - கடற்கரை ஆந்திரா = ராயல தெலங்கானா (ராயலசீமை + தெலங்கானா)
4. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா - ஹைதராபாத் யூனியன் பிரதேசம் = (ஹைதராபாத் இல்லாத) தெலங்கானா
5. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா = ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா
6. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கௌன்சிலுடன் கூடிய ஆந்திரப் பிரதேசம்

இந்த ஆறு தீர்வுகளில் முதல் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை என்று அறிக்கையைத் தயாரித்த ஸ்ரீகிருஷ்னா தலைமியிலான குழுவே தெரிவிக்கிறது. நான்கு, ஐந்து அல்லது ஆறு, இம்மூண்றில் ஒன்றைத் தீர்வாக முன்னெடுக்க அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசிக்க இருக்கிறது மத்திய அரசு.

பரிந்துரை நான்கில் கூறியுள்ளபடி ஹைதராபாத் தனி யூனியனாகவும், தெலங்கானா மற்றும் சீமாந்திரா தனித் தனி மாநிலங்களாகவும் பிரிக்கப் படுவதும் முதல் மூண்று பரிந்துரையைப் போலவே சாத்தியமற்றது என்று தான் சொல்ல வேண்டும். அமையவுள்ள தெலங்கானா மாநிலத்தின் வருவாய் ஆதாரமே ஹைதராபாத் பகுதி தான் எனும்போது தெலங்கானா பகுதியினராலும் இந்தத் தீர்வை ஏற்க முடியாது. இந்தத் தீர்வு முன்னெடுக்கப் படுமானால் தெலங்கானா வளர்ச்சி குறைந்த பகுதி என்பதிலிருந்து வளர்ச்சி குறைந்த மாநிலம் என்பதாக வேண்டுமானால் பரினாமம் பெறலாம். மேலும் தற்போதைய ஹைதராபாத் பகுதியை மட்டும் கொண்டு தனி யூனியனைக் கட்டமைத்துவிட முடியாது. கடற்கரை ஆந்திராவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியே ஹைதராபாத் யூனியனை உருவாக்க முடியும். இதற்கு கடற்கரை ஆந்திர மக்களும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை.

அடுத்து ஐந்தாவது பரிந்துரை. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப காலம் முதல் வலியுறுத்தி வரும் தீர்வும் இது தான். இதன்படி பழைய நிஜாம் சமஸ்தானம் மொத்தமும் தனி மாநிலமாகப் பிரிக்கப்படும். ஏறக்குறைய 1956ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை என்று சொல்லலாம். ஆனால் இந்தத் தீர்வும் பல சிக்கல்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஆசிரியர், அரசு ஊழியர், காவல் துறையினர், வணிகர்கள் என்று பல தரப்பிலும் சீமாந்திர பகுதியைச் சேர்ந்தவர்களே தெலங்கானாவிலும் கோலோச்சுகின்றனர். இந்த அளவுக்குத் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் சீமாந்திராவில் இல்லை. மாநிலப் பிரிவின் கீழ் வருகிற துறைகளில் இடமாறுதல் என்பது பெரும் சிக்கலுக்கு உள்ளாகும்.

தெலங்கானா மாநிலம் அமைந்தாலும் கூட பழையபடியே சீமாந்திராவைச் சேர்ந்தவர்களே கல்வி, காவல் துறை போன்றவற்றில் தொடர்ந்து கோலோச்சுவர். ராமாநாயுடு, ராமோஜி ராவ், ஜி.எம்.ஆர் குழுமத்தினர் என்று சீமாந்திராவிலிருந்து வந்தவர்கள் தங்களது வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய அளவுக்கு தெலங்கானா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எவரும் வளரவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது . அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறை இவற்றில் உள்ள சீமாந்திரப் பகுதியினர் ஓய்வு பெற்று அந்த இடங்கள் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்தத் தீர்வின் கீழ் உள்ள இன்னொரு சிக்கல் நதி நீர்ப் பங்கீடு. தெலங்கானா பகுதில் ஓடுகிற நதிகள் இருந்தாலும், உருவாகிற நதிகள் எதுவும் இல்லை. மராட்டியத்தில் உருவாகிற கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகளை நம்பித்தான் மொத்த ஆந்திர மாநிலத்தின் விவசாயமும். பிரிகிற இரண்டு பிரதேசங்களும் நதிநீருக்காக மோதிக் கொள்ளுகிற நிலை ஏற்படலாம். ஆகவே தனி மாநிலம் அமைவதற்கு முன்னாலேயே இது போன்ற சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நதிநீர்ப் பங்கீட்டுக்கு நீண்ட காலம் செல்லுபடியாகக் கூடிய ஒப்பந்தம் இரு பிராந்தியங்களுக்கிடையில் கையெழுத்தாக வேண்டும்.

ஆறாவது பரிந்துரைக்கும் முதல் பரிந்துரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கவுன்சில் ஒன்று மட்டும் புதிதாக முளைத்திருக்கும். முந்தைய பரிந்துரையில் அலசப்பட்ட சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்யும் அமைப்பாக இது இருக்கும். இந்தத் தீர்வு தெலங்கானாவை ஆதரிக்கும் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகலாம். ஆனால் சீமாந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீர்வையே வலியுறுத்துவார்கள்.

இந்தப் பரிந்துரைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரியும். இரு தரப்பினருக்கும் இணைந்திருக்கும் விருப்பம் இல்லை. அதே நேரத்தில் ஹைதராபாத் பகுதியையும் இழக்க விரும்பவில்லை. சற்றேரக் குறைய மாநிலத்தின் 42 சதவீத வருவாயை ஈட்டித் தரும் பிராந்தியம் தெலங்கானா. தெலங்கானா பிராந்தியத்திலும் குறிப்பாக ஹைதராபாதிலிருந்து தான் பெரும்பங்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இதல்லாமல் கிருஷ்ணா நதி மாநிலத்தினுள் நுழையும் இடமும் தெலங்கானா பிராந்தியத்திலேயே அமைந்திருக்கிறது. ஆகவே தெலங்கானா பிரிந்து போவதை சீமாந்திர மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை. அதே நேரம் இந்தப் போராட்டத்தின் நிமித்தமாக ஏராளமான உயிர்சேதங்களைச் சந்தித்த தெலங்கானா மக்களும் தலைவர்களும் மாநிலப் பிரிவினையைத் தவிர்த்து வேறு எதனாலும் சமாதானமடையப் போவதில்லை.

2010 தொடக்கத்தில் பற்றி எரிந்த பிரச்சினையைப் பதினோரு மாதங்கள் ஆறப் போட்டது தவிர இந்தக் கமிட்டி பெரிதாக என்ன சாதித்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொறுத்திருக்க நாம் தயாராக இருந்தாலும் தெலங்கானா ஆதரவாளர்கள் தயாராக இல்லை. இதோ ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தணிந்திருந்த போராட்டக் கணல் சாம்பல் விலகி வெளிச்சம் காட்டத் தொடங்கிவிட்டது.

7 மறுமொழிகள்:

Anonymous said...

கோபாலு,

சிம்பிளா ஃபார்முலா போட்டு புரிய வச்சிருக்குறே. ஆறுல நீ எது ஓக்கேன்னு சொல்றே?

விஜய்கோபால்சாமி said...

ஐந்தாவது சூத்திரத்தை நான் பரிந்துரைப்பேன். தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கூட இதைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். பிற பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்க மறுப்பதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். தெலங்கானா பிராந்தியத்தில் இவர்களுக்கு இருக்கக் கூடிய சொத்துக்களைக் குறித்த கவலை தான் அது.

இது நாள் வரை ஆந்திர மாநில அரசுக்கு சொத்து வரி செலுத்தி வந்த இவர்கள் இனி தெலங்கானா அரசுக்கு சொத்து வரி செலுத்தப் போகிறார்கள். இதைப் புரிய வைத்துவிட்டால் ஐந்தாவது சூத்திரம் சாத்தியப்பாடு உள்ளதே.

Anonymous said...

யப்பா, உண்மைத்தமிழனுக்கு வாரிசா உருவாகுற போல இருக்கே...

jaisankar jaganathan said...

சுத்தமா புரியலை. ஆந்திரா மேப் போட்டு விளக்கியிருக்கலாம்

மோகன் குமார் said...

நண்பா தங்கள் கமெண்ட் எனது பதிவில் பார்த்தேன், நன்றி.தங்கள் மெயில் தெரியாததால் இங்கு பதில் எழுதுகிறேன்.

நாங்கள் சென்றது நாகர்ஜுன சாகர் டேமில் உள்ள நீர் தேக்கத்தில் உள்ள லாஞ்சரில்; நான் எழுதியது சரியே. ஏரி என்றதும் ஹுசைன் சாகர் என நீங்கள் நினைத்திருக்கலாம். நன்றிகள் மீண்டும்

விஜய்கோபால்சாமி said...

வருக மோகன். நானும் பதிவைப் படித்த போது கொஞ்சம் குழம்பிவிட்டேன். உங்கள் வாசகர்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காகப் போட்ட கமெண்ட் அது.

yeskha said...

ஹைதராபாத் ஒன்றுதான் தெலங்கானாவில் முழுமையாய் செழுமை பெற்ற இடம்.. ஒருவேளை ஆந்திரா பிளவுபட்டால் தெலங்கானாவை விட ஆந்திரா தான் அடி வாங்கும் என்று எங்கோ படித்ததாய் ஞாபகம். இங்கே தமிழ்நாட்டில் சென்னையே முழுமையான வர்த்தகக் கேந்திரம் என்பது போல...

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan