இந்தத் தளத்தை இப்படியும் பாக்கலாம்...

Monday 14 June, 2010

என் உயிரினும் மேலான கத்திரிக்காயே...

உயிரினும் மேலான என் உடன்பிறப்பே, கத்திரிக்காயே. கால் நூற்றாண்டுக்கும் மேலாக என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு அற்புதமான தோழரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்தான் கத்திரிக்காய். சரியாகப் படிக்காமல் நான் என் அப்பாவிடம் அடிபட்டதை விட, மகனோ மகளோ காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட பெற்றோரிடம் அதிகம் அடிபட்டவர் என் உடன்பிறப்பு. அவர்தான் கத்திரிக்காய்.

அவரை விரும்பாதவர்களும் கிடையாது, அவரைப் பழிக்காதவர்களும் கிடையாது. இந்த விசித்திரமான நிலை வேறு “யாருடைய” நண்பருக்கும் ஏற்பட்டிருக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும், அங்கங்கே தடித்துப் போகும்  என்ற இரு பெரும் குற்றச் சாட்டுகள் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. என் நேரடி அனுபவத்திலிருந்தே இவை இரண்டும் பொய் என்று சொல்ல முடியும்.

நான் சுமாராக ஐந்து வயதிலிருந்து கத்திரிக்காய் சாப்பிட்டு வருகிறேன். வாரத்தில் இரண்டு நாட்களாவது கத்திரிக்காய் இல்லாவிட்டால் எனக்குச் சோறு இறங்காது. 29 வயது நடந்துகொண்டிருக்கிறது. இப்போது வரை கத்திரிக்காயால் அரிப்போ தடிப்போ ஏற்பட்டதில்லை. கடும் வெய்யில் காலத்தில் மட்டும் காது மடல், அக்குள், முதுகு, மற்றும் மறைவிடங்களில் வேர்வை சேர்ந்து அரிப்பு ஏற்பட்டிருக்கிறதே தவிற கத்திரிக்காயினால் ஒருபோது அத்தகைய சிக்கல் ஏற்பட்டதில்லை.

கத்திரிக்காய் அரிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்லுகிறவர்களுக்குப் பணிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கத்திரிக்காயை விட சிலருக்கு ஈழத் தமிழர், ஈழத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு போன்றவற்றைப் பற்றிக் கேட்டாலே கடும் அரிப்பு தொடங்கிவிடும். அவர்களின் அந்த அரிப்பு எதைக் கொண்டு சொறிந்தாலும் மறையாது, குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். அக்கறையுடன் நீங்கள் கொடுக்கிற சோடா மூடி, உப்புத் தாள், உடைத்த செங்கல் போன்ற எதுவும் அவர்களுக்குப் பயன்படாது. உடலில் ஆங்காங்கே தடித்துப் போய் பார்க்கவே விகாரமான தோற்றமும் ஏற்பட்டுவிடும்.

இதற்கெல்லாம் நீங்கள் கத்திரிக்காயைக் குறை சொன்னால் அதற்கு என் நண்பர் கத்திரிக்காய் பொறுப்பாக மாட்டார். இது முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களின் குற்றம், அவர்களது புனர்வாழ்வைக் குறித்து அக்கறையுடன் சிந்திப்போரின் குற்றம்.

அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டவருக்கு நோயின் தாக்கம் குறைய சில வைத்திய முறைகள் உள்ளன. ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள், குறிப்பாக ஐஃபா விழாவைக் கண்டித்தவர்கள் மீது கண்டணம் தெரிவிக்க வேண்டும். உலக அரங்கில் சிறந்த படங்களைத் தரத் தவறிய ஈழத் தமிழர்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களைப் போலல்லாமல் தரமான படங்களைக் கொடுத்து வரும் சிங்கள இயக்குனர்களுக்கு முதுகு, அக்குள், மறைவிடங்கள் உள்ளிட்ட அத்தனை அவயங்களையும் சொறிந்துவிட வேண்டும். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக “நாம் தமிழர்” அமைப்பினரை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோரின் பதில்களையும் மறுவினைகளையும் புறந்தள்ள வேண்டும். ஒத்துவாழ இயலாத நிலையில் மனைவியை விவாகரத்து செய்ததை வசதியாக மறந்துவிட வேண்டும். ஆனால் உடன்பட வழியே இல்லாத சிங்களர்களுடன் தமிழர்கள் ஒத்து வாழ வேண்டும் என்று “பொருத்தமான” அறிவுரைகளைக் கூற வேண்டும்.

எவ்வளவு அரித்தாலும் அடுத்த வாரக் குமுதத்துக்கு ஓட்டைப் பக்கங்களைத் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வளவையும் செய்தும் அறிப்பு குறையாவிட்டால் இரண்டு வார இடைவெளியில் மீண்டும் மேலே சொன்னவற்றைச் செய்ய வேண்டும்.

இரண்டு வாரம் பொறுத்திருக்க வேண்டுமா? என்று காண்டாகிறவர்கள் பொறுமையாகக் கவனிக்க. அந்த இரண்டு வாரங்களில் அரிப்பு & தடிப்பு பார்ட்டி சொறிஞ்சு சொறிஞ்சு செத்தாலும் என் நண்பர் கத்திரிக்காய்க்கு அதைப் பற்றி கவலையில்லை.

1 மறுமொழிகள்:

Anonymous said...

Ennavo Poda Maathavaa :0

- Xavier

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Lady Gaga, Salman Khan