இந்த எர்த் ஹவர் காமெடி வருஷந் தவறாம நடந்துகிட்டிருக்கு. இந்த எர்த் ஹவர் நாள்ள உள்ளூர் நேரப்படி ராத்திரி 8:30 லேந்து 9:30 வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு வெளக்க அணைக்க சொல்றாங்க. ஒவ்வொருத்தனும் எதாவது ஒரு காரணத்துக்காக வெளக்க அணைச்சிக்கிட்டுதான் இருக்கான். எதை/யாரை அணைக்கறதுக்காக அவன் வெளக்க அணைக்கிறான்னு ஆராயறது நம்ம வேலை இல்லை. அதனால அதப் பத்தி பேச வேண்டாம்.
கடந்த ஆண்டு எர்த் ஹவரைக் குறித்து ஒரு பதிவு எழுதினேன். பொதுவாகவே நான் மீள்பதிவு போடுவதை விரும்புகிறவன் கிடையாது. இருந்தாலும் இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் மின்-வெட்டுகள் கடந்த ஆண்டைப் போலவே அல்லது கடந்த ஆண்டை விட மோசமாவே இந்த ஆண்டும் தொடருவதால் அதே பதிவை இங்கே நீங்கள் படிப்பதற்காக மீள்-பதிவாக வெளியிடுகிறேன்.
__________
எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும் அணைப்பதா அல்லது எந்த மின்சாரக் கருவிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதா என்று?
சன் தொலைக்காட்சியின் செய்தியிலும் இத்தகவல் அறிவிக்கப்பட்டது. ஆனால் விளக்குகள் மட்டுமா அல்லது அனைத்து மின் கருவிகளுமா என்று அதிலும் கூறவில்லை. அதிலும் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தின் நிர்வாகி “நாங்கள் இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறோம். அந்த ஒரு மணிநேரமும் எங்கள் உணவகம், மது அருந்துமிடம், சமையல் கூடம் எங்குமே மின் விளக்குகள் பயன்படுத்தப் போவதில்லை” என்றார். இத்துடன் நிறுத்தியிருந்தால் நல்லது. மேலும் ஒரு வாக்கியத்தையும் சொன்னார். “மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்துவது ரொமாண்டிக்காக இருக்கும்”. இது போன்ற பண்ணாடைகள் எதைச் செய்தாலும் தங்களுக்கென்று அதில் ஒரு ஆதாயம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போலிருக்கிறது.
பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய அலுவலகங்கள் திடீர் சூழலியல் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறன. மதிமாறன் அவர்கள் ஒரு கட்டுரையிலே கார்ல் மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டியிருப்பார் “முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் தரும் செயல் என்று தெரிந்தால் தனக்கான கல்லறைக் குழியைத் தானே தோண்டிக் கொள்ளும்” என்று. அப்படித்தான் இந்த நிறுவனங்களும் தங்களது சிக்கனத்தை சூழலியல் ஆதரவு என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. நண்பன் ஒருவனின் அலுவலகத்தில் வழக்கமாக கைதுடைக்கும் காகிதம் வைக்குமிடத்தில் காகிதங்கள் இல்லை. மாறாக அங்கே ஒரு சிறிய சுவரொட்டி. “வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். காகிதத்துக்குப் பதிலாக சூடான காற்றை உமிழும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவீர்” என்று அதில் அச்சிட்டிருந்ததாம்.
வழக்கமாக கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டு கைகளை மட்டும் கழுவிக் கொள்பவர்களுக்குப் பிரச்சனையில்லை. என் நண்பனோ சட்டை, கால்சராய், காலுறை இவற்றுக்கு வெளியே தெரிகிற எல்லா இடங்களையும் கழுவிக் கொள்பவன். அதாவது கைகளுடன் சேர்த்து முகத்தையும் கழுவிக் கொள்பவன். அன்றைக்கு முகத்தைக் கழுவிய பிறகுதான் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறான். மூ… மன்னிக்கவும், ஆத்திரத்தில் முகம் சிவந்துவிட்டது. ஈரக் கையுடன் தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அதே சுவரொட்டியில் “மின்சாரமும் ஒரு வளம்தான் என்று சொல்லி வெகு விரைவில் இந்த சூடான-காற்றடிக்கும் இயந்திரத்தையும் நிறுத்திவிடாதீர்கள். பின்குறிப்பு: முகம் கழுவிய பிறகு இந்த இயந்திரத்தினுள் என்னுடைய முகத்தை நுழைக்க முடியவில்லை.” என்று எழுதிவிட்டு வந்தான். அவனது பெயரிலிப் பின்னூட்டத்திற்குப் பிறகு காகிதங்களும் வைக்கப்படுகின்றனவாம்.
இன்னொரு நண்பனின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் குளிர்சாதனத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவார்களாம். அவனுடைய குழுவில் வெகு சிலர் மட்டுமே இரவுப் பணியில் இருப்பதால் மொத்தத் தளத்துக்கும் குளிர்சாதனத்தை இயக்க முடியாதாம். கொடுமை என்னவென்றால் அவன் பணிபுரியும் தளம் தரை மட்டத்துக்கு அடியில் இருக்கிறது. புழுங்கி சாக வேண்டியதுதான்.
சரி, விட்ட இடத்துக்கே வருவோம். இந்த “எர்த் ஹவர்” செய்தியைக் கூறிய சன் தொலைக்காட்சி 8:30 முதல் 9:30 மணி வரை ஏன் ஒளிபரப்பை நிறுத்தவில்லை (கேள்வி அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்)? அந்த நேரம் நீ என்னடா செய்தாய் என்று கேட்க இருப்பவர்களே, பொறுமை! எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு டிவியை மட்டும் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் விளக்குகளை மட்டும் தான் அணைக்கச் சொல்லியிருந்தனர். தாகம் எடுத்தபோது குளிர்சாதனப் பெட்டியைக் கூடத் திறக்கவில்லை, அதற்குள்ளும் ஒரு விளக்கெரியுமே. 9:30 ஆன பிறகு தான் தண்ணீர் குடித்தேன்.
“எர்த் ஹவர்” எல்லாம் எடிசன் நினைவைப் போற்றுவதற்கு மட்டுமே மின்வெட்டு அனுசரிக்கும் நாடுகளுக்குச் சரி. பற்றாக் குறையால் நாள்தோறும் இரண்டு முதல் இருபது மணிநேரம் மின்வெட்டைச் சகித்துக் கொள்ளும் இந்தியாவில் எதற்கு “எர்த் ஹவர்”? அதுவும் இரவு 8:30 முதல் 9:30 வரை (பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் வேறு நடைபெறுகின்றன).
0 மறுமொழிகள்:
Post a Comment