நண்பர்களே, பெட்ரோல் டீசல் விலையை வைத்து மக்களிடம் எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கிற கொள்ளைக்கு வெறும் கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போன்றவை மட்டுமே சரியான தீர்வாகாது. இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் போலவே பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் நள்ளிரவுகளில் முன்னறிவிப்பின்றி அமல் படுத்துகின்றன இந்த நிறுவனங்கள்.
பெட்ரோலியப் பொருட்களின் விலைதான் மற்ற அனைத்து அத்யாவசியப் பொருட்களின் விலைகளையும் நிர்ணயிக்கின்றன. நினைத்த நேரத்தில் இவர்கள் விலையை உயர்த்துவதை எத்தனை நாள் தான் சகித்துக் கொள்வது. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்துதான் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் இனி எடுபடாது நண்பர்களே.
ஒரு முதலமைச்சரோ பிரதமரோ சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தூக்கியெறியும் வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் இந்த எண்ணெய் நிறுவனங்களின் போக்கு அப்படியே தான் இருக்கிறது. மக்களே இந்த எண்ணெய் நிறுவனங்களைப் பழிக்குப் பழி வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.
ஒரே ஒரு நாள் அவர்களது வியாபாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அணி திரளுவோம். பிப்ரவரி 14ம் நாளில் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் வாங்காமலிருக்க உறுதியேற்போம்.
மீண்டும் மீண்டும் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்துகிற எண்ணெய் நிறுவனங்களைப் போன்றே நாமும் தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் புறக்கணித்துப் பழி வாங்குவோம்.
#tnfishermen போலவே இந்த முயற்சியும் பரவலான கவனத்தைப் பெற வேண்டும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைய நம் அணைவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம். நண்பர்களே, இந்தப் பதிவின் உள்ளடக்கத்தை பேஸ்புக், ஓர்குட், மற்றைய சோசியல் நெட்வொர்க் தளங்களில் வெட்டி ஒட்டி உங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். நாட்கள் குறைவு. பதிவின் தொடுப்பை ட்விட்டரில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்யுங்கள். இத்துடன் மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதையும் கண்டித்து #AntiPetrolPriceDay #tnfishermen என்ற இரண்டு ஹேஷ் டேகுகளுடன் உங்கள் ட்விட்டுகளை வெளியிடுங்கள். மிக்க நன்றி.
2 மறுமொழிகள்:
மாம்ஸ், ரொம்ப கரெக்ட். இப்பவே செஞ்சிடுவோம்.
//மீண்டும் மீண்டும் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்துகிற எண்ணெய் நிறுவனங்களைப் போன்றே நாமும் தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் புறக்கணித்துப் பழி வாங்குவோம்.//
நல்ல ஐடியா தான். முதல்ல நீங்க பண்ணுங்க இப்படி. என்னால முடியாது
Post a Comment